
பார்த்தீஸ் பிக்சர்ஸ் சார்பில் பார்த்திபன் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்க, மீராஜாஸ்மின் , விவேக், ஆகியோர் நடித்து இருக்கும் படம் விஞ்ஞானி . இந்த பார்த்தி உண்மையிலேயே அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணியாற்றியவர். இந்த விஞ்ஞானி படத்தின் ஞானம் என்ன? பார்க்கலாம் .
வரும் 2050ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 164 கோடியாக ஆகப் போகிறது என்ற நிலையில் தண்ணீர் பிரச்னை மற்றும் விவசாய நிலங்கள் குறைபாட்டால் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதால் அதற்கு என்ன செய்யலாம் என்று விவாதிக்கிறது ஒரு விஞ்ஞானிகள் மாநாடு .
அதில் பேசும் விஞ்ஞானி பார்த்திபன் தண்ணீர் தேவைப்படாமல் விளையும் ஒரு நெல்லை கண்டுபிடிக்க இருப்பதாக கூறுகிறார் .
தென் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்க ஆரம்பிக்க, விவசாயத்தை நேசிக்கும் சிலருக்கு அது வருத்தத்தை தருகிறது. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள தமிழ் ஆசிரியை தமிழ்ச் செல்விக்கு(மீரா ஜாஸ்மின் ) ஒரு கனவு வருகிறது . அந்தக் கனவில் ஒரு சாமி சிலை வருகிறது . கனவில் வந்த இடத்தை கண்டுபிடித்து தோண்டினால் அங்கே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் புதைத்து வைத்த நெல்மணிகள் கிடைக்கிறது . தண்ணீரே இல்லாமல் வளர்ந்து தண்ணீர் தாகம் வராமல் தடுக்கும் தாகம் தீர்த்தான் நெல் என்ற அழிந்து போன நெல்லின் விதைகள் அவை .
புதைக்கப்பட்டு மூவாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது அந்த நெல் மணியில் இருந்து ஒரு மரபணு விஞ்ஞானியால் மீண்டும் அந்த நெல் ரகத்துக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நிலையில், அந்த ஊர் பிரமுகர் ஒருவர் சென்னை வந்து விஞ்ஞானியை சந்தித்து நெல் மணிகளை தருகிறார் . ஆனால் விஞ்ஞானியோ இதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்வதோடு தமிழில் விஞ்ஞானம் என்று எதுவும் இல்லை . தமிழ் இலக்கியம் கூறுவது எல்லாம் வெறும் [பேச்சு என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.
,தமிழாசிரியை கிளம்பி வந்து விஞ்ஞானியை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு அந்த நெல்லுக்கு அவன் மூலம் உயிர் கொடுக்க முயல்கிறாள் . திருமணமும் ஆகிறது . அந்த நிலையில் விஞ்ஞானியின் உதவியாளரான ஒரு பெண்ணோடு விஞ்ஞானிக்கு தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகப்பட , அது விஞ்ஞானிக்கு எரிச்சலை தருகிறது .
ஒரு நிலையில் அந்த பெண் கொலை செய்யப்பட , பழி தமிழாசிரியை மீது விழுகிறது. விஞ்ஞானி வீட்டில்ம் இருந்த தாகம் தீர்த்தன் நெல் மணி அடங்கிய பை திருடப்படுகிறது.
கொலை செய்யப்பட அந்தப் பெண் மூலம் தாகம் தீர்த்தான் நெல்லை திருடி வெளிநாட்டுக்கு விற்க இன்னொரு விஞ்ஞானி திட்டமிட்டதும் தெரிய வருகிறது . ஒரு நிலையில் தாகம் தீர்த்தான் நெல் மணிகள் நெருப்பில் எரிந்து போக , அப்புறம் என்ன ஆச்சு ? அந்த நெல்லுக்கு உயிர் கொடுக்கப்பட்டதா? என்பதே இந்த விஞ்ஞானி .
இன்று உலகம் புதிய கண்டுபிடிப்புகளாக சொல்லிக் கொள்ளும் விஷயங்கள் பலவும் ஒரு காலத்தில் தமிழ் இனம் அறிந்து வைத்திருந்த விசயங்கள்தான் என்பதையும் , தாவரங்களுக்கு உயிருண்டு என்று நவீன விஞ்ஞானம் இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்த நிலையில் புல்லுக்கு ஓரறிவு என்பது முதல் மனிதனுக்கு ஆறறிவு என்பது வரை . மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் எழுதி வைத்து இருப்பதையும் உலகத்தின் மூத்த விஞ்ஞானி தொல்காப்பியர்தான் என்பதையும் ஆதாரப் பூர்வமாக நிறுவுவது இந்தப் படத்தின் மிக உயர்ந்த சிறப்பம்சம். இந்தப் படத்தை எடுத்திருப்பதே ஒரு நாசா விஞ்ஞானி என்பது அதற்கு மேலும் சிறப்பு .
மற்றபடி கதை திரைக்கதையில் வசனத்தில் படமாக்கலில் படம் இன்னும் நன்றாக இருந்திருக்க வேண்டும்.
நெல்லுக்கு உயிர் கொடுப்பதற்காகவே திருமணம் செய்து கொண்ட தமிழாசிரியை, அந்த பெண் உதவியாளர் மேல் சந்தேகப்பட்டு புலம்புவது எல்லாம் பக்குவமற்ற பாத்திரப் படைப்பின் வெளிப்பாடு.
தமிழாசிரியையின் குடும்பமே சேர்ந்து விஞ்ஞானி மேல் காதலை உருவாக திட்டம் போடுவதே அநாகரிகமாக இருக்கிறது என்றால்…
விவேக்கின் மனைவியான வேலைக்காரி திவ்யதர்ஷினியை விஞ்ஞானி குடிபோதையில் கதாநாயகிக்கு பதிலாக கற்பழித்து விட்டார் என்ற ரீதியில் வரும் காமெடிகள் படு கேவலம் .
படத்தில் பல இடங்களில் தமிழ் வார்த்தைகளை தவறாக எழுதி இருக்கிறார்கள். தண்ணீர் எதற்கு என்று எழுதி, ‘?’ என்று கேள்விக்குறி போடுவதற்கு பதில் முற்றுப்புள்ளி வைக்கிறார் விஞ்ஞானி .
இன்ஸ்பெக்டராக நடித்து இருக்கும் வித்யாதரன் ரொம்பவே சோதிக்கிறார் .
விஞ்ஞானிகள் கைக்கு போன பிறகும் அவர்கள் அதை சுருக்குப் பையிலேயே பிடித்துக் கொண்டு சண்டை போடுவதெல்லாம் தமிழ் சினிமாவின் தலையெழுத்து
எனினும் தமிழ் இனத்தின் தொன்மைக் காலம் தொட்ட விஞ்ஞான அறிவை ஆதரப்பூர்வமாக நிறுவுவதற்காக விஞ்ஞானிக்கு தரலாம் ஒரு அவார்டு
விஞ்ஞானி … நோபல் பரிசு