கே டி வி ஆர் கிரியேட்டிவ் ஃபிரேம்ஸ் சார்பில் எஞ்சினியர் வி. லோகநாதன் , டாக்டர் வி.ஜனநாதன், எஞ்சினியர் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோரின் தயாரிக்க… அம்புலி கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா , பாலா, ஆகியோர் நடிப்பில் ஹரி – ஹரீஷ் (ஹரி ஷங்கர் & ஹரீஷ் நாராயண்) இரட்டை இயக்குனர்கள் இயக்கி வந்திருக்கும் படம்தான், தமிழின் முதல் ஹாரர் அந்தாலாஜி என்று சொல்லப்படும் தமிழின் முதல் பேய்க்கதைத் தொகுப்பு படமான ‘ஆ ‘.
ஆஹா என்று பாராட்டும்படி இருக்கிறதா படம்? பார்க்கலாம் !
கானா பாலா பாடலுக்கு கோகுல் ,மேக்னா, பாலா ஆகியோர் நடனம் ஆட , ரகளையாக ஆரம்பிக்கும் படம் ஓரிரு நிமிடங்களில் படு ஷார்ப்பாக கதைக்குள் நுழைகிறது.
ஒன்றாக படித்த அந்த நண்பர்களின் பார்ட்டியில் புதிதாக நுழைகிறான் இன்னொரு நண்பனான பிராஸ்பர் (சிம்ஹா ). மேக்னாவை முன்பே காதலித்து அது நிறைவேறாமல் போன பிராஸ்பர் பெரும் பணக்காரன் . கல்லூரிக் காலத்தில் இருந்தே அடிக்கடி பந்தயம் கட்டும் பழக்கம் உள்ளவன் . தமிழிடம் (கோகுல்) கல்லூரிக் காலத்திலேயே பந்தயம் கட்டி தனக்கு மிகவும் பிடித்த ஒரு பைக்கை இழந்தவன் . அந்த பைக்கை தமிழ் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறான் . அது இப்போதும் பிராஸ்பருக்கு அவமானமாக இருக்கிறது .
நண்பர்கள் சந்திப்பில் திடீரென்று பேச்சு பேய்களைப் பற்றி போக , ”பேய் என்று ஒன்று இல்லவே இல்லை” என்று பிராஸ்பர் சொல்ல, இருக்கிறது என்று நம்பும் அணியில் மற்றவர்கள் இருக்க, திடீரென்று ஒரு பந்தயம் கட்டுகிறான் பிராஸ்பர் . பேய் இருக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியாவிட்டால் தமிழ் அந்த பைக்கை பிராஸ்பருக்கு கொடுத்து விட வேண்டும்.
பேய் இருக்கிறது என்று நிரூபித்தால்? பிராஸ்பரின் சொத்துகளில் ஐம்பது சதவீதம் இவர்கள் மூவருக்கும் வழங்கப்படும் . அதன் மதிப்பு அறுபது கோடி .
பந்தயத்தை தமிழ் ஏற்க, பிராஸ்பர் சட்டப்படி ஒப்பந்தமும் போட, (கோகுல்) தன் தோழி(மேக்னா) தோழன் (பாலா) ஆகியோருடன் பேய்களை தேடி பல நாடுகளுக்கும் தமிழ் போகிறான் . சென்னை ஓர வங்காள விரிகுடா கடலில் பேயை வீடியோ எடுத்தும் அது பதிவாகவில்லை. ஜப்பான் பேய் கேமராவை உடைத்து விடுகிறது . அரேபியப் பாலைவனத்தில் எசானியா என்ற பெயர் கொண்ட ஜினரி என்ற பெண் பூதத்திடம் இருந்து உயிர் தப்புவதே பெரும் பாடாகிறது . சென்னை ஏ டி எம்மில் பேய் பதிவானதை படம் எடுத்து வைத்திருக்கும் ஒருவர் (பாஸ்கி), ஐம்பது லட்சம் கொடுத்தால் அதைத் தருகிறேன் என்கிறார் . அந்த அளவு இவர்களிடம் பணம் இல்லை . பிராஸ்பரிடம் கேட்டும் உதவி செய்ய மறுக்கிறான்.
கடைசியில் நெடுஞ்சாலையில் என்ன நடந்தது ? இவர்கள் பேயை பதிவு செய்து பிராஸ்பரிடம் நிரூபிக்க முடிந்ததா ? பணம் கிடைத்ததா ? இல்லை எனில் நடந்தது என்ன என்பதே ஆ!
சும்மா சொல்லக் கூடாது … நவீனமான – தமிழ் சினிமாவில் பயன்படுத்தபடாத ஒரு கதையை எடுத்துக் கொண்டு விதம் விதமாய் மிரட்டி இருக்கிறார்கள் ஹரி ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் .
முதல் முறை பார்க்கும்போது தோன்றுவது , அடுத்த முறை பார்க்கும்போது இல்லாமல் இருப்பது என்ற வகையில் பேயை காட்டும் உத்தியை பட முழுக்க பயன்படுத்தி அதிர வைக்கிறார்கள்.
வங்காள விரிகுடாவில் பெர்முடா முக்கோணத்துக்கு இணையாக (படத்துக்காக) சித்தரிக்கப்படும் மந்திக் குழி என்ற பகுதியில் அடிக்கடி கடல் பரப்பில் தோன்றி மறையும் படகு…. அதில் உள்ள பேய்கள் என்று முதல் கதையே வயிற்றைக் கலக்குகிறது . மற்றவர்களுக்கு ஒரு நிமிடமாக தோன்ற அங்கே பேய்ப் படகுக்குள் தமிழ் ஒரு மணி நேரம் சிக்கிக்கொண்டு தவித்தான் என்ற கதை சொல்லலில், பேய்கள் கதைக்கு ஒரு புதிய அமானுஷ்யப் பரிமாணம் தருகிறார்கள் இயக்குனர்கள்.
ஜப்பானில் ஒருவனின் இருதயம் நின்று போக, அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து இதயத்தை இயங்க வைக்க முயலும்போது அவன் அறைக்கு வெளியே பேயாக உட்கார்ந்து இருப்பதும், இதயம் இயங்கி நோயாளி பிழைத்த பின்னர் அந்த பேய் இல்லாமல் இருப்பதும் , அடுத்த மூன்று நாளில் அந்த நோயாளி இறந்து அவனே பேயாகி , ஒரு சிறுமியின் உடலில் புகுந்து மிரட்டும மிரட்டலும் திகில் பிகில் !
அரேபியாவில் அழகிய பெண் பூதமாக இருப்பதும் பாலைவனத்தில் அது இவர்களை போட்டு புரட்டி எடுக்கும் காட்சிகளும் லக லக லக !
துளி காதல் , திடீர் மரணம் , மனதை ரணமாக்கும் பணம், அந்தப் பணம் ஏ டி எம் மிஷின் அறை முழுக்க பறக்கும் திகில் என்று, அந்த கதையில் குறைந்த நேரத்தில் அவ்வளவு உணர்வுகளை இணைத்து இருக்கிறார்கள் .
பயணவழி உணவகத்தில் வாங்கிய பேய்ப்பட கேசட்டை பயணிப்பவர்கள் போட்டுப் பார்க்க , படத்தில் வரும் அதே காட்சிகள் நிஜத்திலும் நடக்க , மயிர்க் கூச்சிட வைக்கிறது அந்தக் கதை.
கடைசியில் அடுத்துடுத்து சுவாரஸ்யமான திருப்பங்களை தந்து , இரண்டாம் பாகத்து வழி வகுத்து படம் முடிகிறது .
நடிகர்கள் அனைவருமே கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்கள் . முக பாவனைகள் மட்டுமல்ல குரல் நடிப்பில் அதாவது பின்னணி பேசியதில் அசத்தி இருக்கிறார் சிம்ஹா .
மேக்னாவின் உருவம் தோற்றத்தை எல்லாம் பார்க்கும்போது அவரும் ஒரு நிலையில் பேயாகி விடுவார் என்று எதிர்பார்க்க வைத்து, கடைசிவரை அதை செய்யாமல் தவிர்த்த விதம் சபாஷ் போட வைக்கிறது.
வெங்கட் பிரபு ஷங்கரின் இசையில் ஒரே பாடல் என்றாலும் அது ரசிக்கும்படி இருக்கிறது . இசையமைப்பாளர் சாம் பின்னணி இசையில் ராட்சச அசத்தல் அசத்தி இருக்கிறார் .
படம் முழுக்கவே நன்றாக இருந்தாலும் மந்திக் குழி, அரேபியப் பாலைவனம், ஏ டி எம் பேய் கதை பகுதிகளில் பகுதிகளில் சதீஷின் ஒளிப்பதிவு பிசாசுத்தனமாக இருக்கிறது . சபாஷ் .
இயக்குனர்களில் ஒருவரான ஹரி ஷங்கரின் படத்தொகுப்பு குறிப்பாக சவுண்ட் எடிட்டிங் வீறிட வைக்கிறது .
காமெடி நடிகர் குட்டிப் புலி பாலா இருந்தும் படத்தில் காமெடி அவ்வளவாக இல்லை . காமெடி என்ற எண்ணத்தில் அவர் பேசும் வசனங்களை பேசாமல் வெட்டிப் போட்டு இருக்கலாம் .
அரேபியப் பாலைவனத்தின் பூதத்தையும் இரவு நேரத்தில் காட்டாமல் பட்டப் பகலில் காட்டி இருந்தால் இன்னும் வித்தியாசமான இருந்திருக்கும்.
ஆனாலும் என்ன ?
சொல்ல நினைத்ததை சரியாக சொல்லி சிறப்பாக படமாக்கி அதில் வெரைட்டி கொடுத்து விதம் விதமாக விரட்டி மிரட்டி உருட்டி பயமுறுத்திய வகையில்,
தங்கள் முந்தைய படங்களான தமிழின் முதல் வியூ பாயின்ட் படமான ஓர் இரவு, தமிழின் முதல் 3 D படமான அம்புலி இவைகளை விடவும் இந்த தமிழின் முதல் ஹாரர் அந்தாலாஜி படமான ஆ மூலம் பேயாட்டம் ஆடி இருக்கிறார்கள் ஹரி ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் .
மொத்தத்தில் ஆ … ஐ !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
ஹரி – ஹரீஷ் , சிம்ஹா, சதீஷ், சாம்.