ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் தயாரிக்க , மாதவன், விஜய் சேதுபதி ,கதிர், வரலக்ஷ்மி, ஷ்ரத்தா ஆகியோர் நடிக்க,
தம்பதி சமேத புஷ்கர் – காயத்ரி இயக்கி இருக்கும் விக்ரம் வேதா .
என்கவுன்டர் போலீஸ் அதிகாரிவிக்ரம்(மாதவன் ) தாதா (விஜய்சேதுபதி )இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல் என்ற வழக்கமான கதைதான் .
ஆனால் அம்புலிமாமா காலத்து விக்கிரமாதித்தன் வேதாளம் கதையின் குணாதிசயத்தை எடுத்துக் கொண்டு,
பல கிளைகள், திருப்பங்கள் , நுணுக்கமான விஷயங்கள் கொண்ட அற்புதமான திரைக்கதை அமைத்து அசத்தி விட்டார்கள் .
வழக்கமான தாதா — மாமூல் – கலெக்ஷன் – போலீஸ் கதையில் தாதாவின் நல்ல தம்பியாக கதிர் , அவர் காதலிக்கும் சற்றே வயது மூத்த பெண்ணாக வரலக்ஷ்மி ,
உடல் குறைபாடு உள்ள மகன் பிறக்க காரணம் தனது என்கவுண்டர்கள் மூலம் செய்யும் பாவம் என்று நம்பும் சக போலீஸ் பிரேம் என்று..
பல சிறப்பான கதா பாத்திரங்களோடு பயணிக்கிறது திரைக்கதை .
குற்ற உணர்சசி போலீஸ் அதிகாரி இறந்த விஷயத்தை அவரது மனைவியிடம் விக்ரம் சொல்லும் காட்சி உட்பட பல இடங்களில் டைரக்ஷன் ஜொலிக்கிறது .
படம் முழுக்கவே மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார்கள் .
மாதவன் தனது பாணியில் சிறப்பா க நடித்திருக்க, ஆரவார ஆர்ப்பாட்டமாக நடித்து அசத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி .இருவரும் சிறப்பு .
ஷ்ரத்தா வித்தியாசமான தோற்றம் காட்டிக் கவர்கிறார.
கதிர் , வரலட்சுமியும் சிறப்பாக நடித்துள்ளனர் .
விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் கதை சொல்லும் உத்தியை நவீன பாணியில் படம் முழுக்க பயன்படுத்தி இருக்கும் விதம் அருமை .
கணவன் மனைவி இருவரும் தொழில் ரீதியாக தங்களுக்குள் பகை கொண்ட இருவருக்கு பணியாற்றி,
அதனால் தங்களுக்குள் உரசல் கொள்ளும் உத்தியை ரொம்ப நாளைக்கு பிறகு தமிழ் சினிமா திரைக்கதையில் பார்க்க முடிகிறது . நைஸ்
வினோத் தின் ஒளிப்பதிவு படத்துக்கு தனி அந்தஸ்து தருகிறது .
சாம் சி எஸ் சின் இசை பெரும்பலம் .
வினோத ராஜகுமாரின் கலை இயக்கமும் அருமை .
திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் கொள்ளை கொள்கிறது படம் .
விக்ரம் வேதா .. இல்லை சோதா !