ஸீ ஸ்டுடியோஸ் மற்றும் கிரன் கொரப்பட்டி தயாரிப்பில் சமுத்திரக் கனி, மாஸ்டர் துருவன், தரன் ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, அனசுயா பரத்வாஜ், நான் கடவுள் ராஜேந்திரன், சேரன் ராஜ், கௌரவத் தோற்றத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்க சிவ பிரசாத் யானல இயக்கி இருக்கும் படம் ,
ஒரு கால் செயல்படாத- பொதுக் கழிப்பறையில் பணியாற்றுகிற மாற்றுத் திறனாளிக்கு ( சமுத்திரக்கனி) மனைவி இல்லாத நிலையில் ஒரு மகன் மட்டும் ( மாஸ்டர் துருவன்) . மகனுக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். பேச்சு சிந்தனை ஆசை எல்லாம் விமானம் பார்க்க வேண்டும் பயணிக்க வேண்டும். ஓட்ட வேண்டும் என்பதுதான். அப்பாவுக்கோ ஆட்டோவில் போவதே முடியாத அளவுக்கு சொற்ப வருமானம்.
அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு ஆட்டோ டிரைவர் (தனராஜ்) அங்கே இருக்கும் ஒரு விலைமாதுவை (அனுசுயா பரத்வாஜ்) அவள் கேட்கும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து ஒரு நாளாவது அனுபவிக்க துடிக்கும் செருப்புத் தைக்கும் தொழிலாளி (ராகுல் ராம கிருஷ்ணா) ஆகியோர் அந்த மாற்றுத் திறனாளிக்கு நண்பர்கள் .
மகனை எப்படியாவது படிக்க வைத்து அவன் ஆசைப்படி அவனை விமான பைலட் ஆக்க வேண்டும் என்று தந்தை திட்டமிட, அந்த சிறுவனுக்கு லூக்கேமியா எனப்படும் ரத்தப் புற்று நோய் வருகிறது . இன்னும் கொஞ்ச காலமே அவன் வாழ்வான் என்ற நிலையில் ஒரு முறையாவது அவனை விமானத்தில் பயணிக்க வைத்து விட வேண்டும் என்ற தந்தையின் ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே விமானம்

நெகிழ்வூட்டும் படம் . படம் முழுக்க சமுத்திரக்கனியும் துருவனும் நிறைந்து இருக்கிறார்கள் . விமானப் பயணத்துக்காக காசு திரட்ட முயன்று அந்த மாற்றுத் திறனாளி பார்க்கும் வேலைகள், கஷ்டங்கள் , அங்கே வரும் பிரச்னைகள் ஆபத்துகள் எல்லாம் மனம் கனக்க வைக்கின்றன.
இன்னொரு பக்கம் சிறுவனை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் நேர் மாறாக விலைமாதுவை வைத்து அருவருப்பான காட்சிகள் கேவலமான வசனங்கள் எல்லாம் இருப்பது முட்டாள்தனம்.
இந்தப் படத்தை பறக்க விடாமல் தடுக்கும் விஷயம் இதுதான் .
மெல்லிய திரைக்கதையும் பழைய பாணி படமாக்கலும் யூகிக்க முடிந்த விசயங்களும் மற்ற பலவீனங்கள் .
விமானம் … வெற்றிக்கு வேறு நல்ல எரிபொருள் போட்டு இருக்கணும்.