ஒய்ட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்க, சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதன், ஜான் விஜய், பாவல் நவகீதன், ஜப்பான் குமார் நடிப்பில் வெங்கி எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஆகாயம், கடல், தரை மார்க்கம் என்று ஆளுக்கு ஒரு மார்க்கமாக தங்கம், வைரம் எல்லாம் கடத்தும் மூன்று கும்பல்கள். ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் தனித்தனியாக பிரிந்தவர்கள் .
ஒன்றாக இருந்த காலத்தில் ஒரு மேஜிக் வித்தைக் காட்டும் நபரை இவர்கள் அநியாயமாகக் கொல்ல, அந்த மேஜிக் வித்தைக்காரனின் சிறுவனான மகன் வளர்ந்து மேஜிக் நிபுணன் ஆகிறான் ( சதீஷ்)
ஒரு நிலையில் அந்த கடத்தல்காரர்களில் ஒருவர் ( ஆனந்தராஜ்) இவனது மேஜிக் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வர, அந்த இளம் மேஜிக் நிபுணன் என்ன செய்கிறான் என்பதே படம் .
சீரியசான மூடில் இதை நீங்கள் படித்து உங்கள் அளவுக்கு கற்பனை செய்து கொண்டால் நிர்வாகம் பொறுப்பாகாது .
தனது கேரக்டருக்கு மிக இயல்பாக நடித்து நியாயம் செய்து இருக்கிறார் சதீஷ் .

ஆனந்தராஜ் சில காட்சிகளில் வசன நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார் . எழுதியவருக்கும் வாழ்த்துகள்
குறைவான வசனத்தில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார் சாம்ஸ் .
ஆனால் ஒரு சிலர், ஸ்கூல் பேன்சி டிரஸ் காம்பெட்டிஷன் பிள்ளைகளை விட மோசமாக நடிக்கிறார்கள்.
யுவா கார்த்திக்கின் ஒளிப்பதிவு அருமை .
‘வாழ்க்கை உள்ளங்கையில் அள்ளும் தண்ணீர்தான் . அது உள்ளங்கையில் தங்கும் நேரம் உந்தன் கையில்தான் ” என்ற அற்புதமான வரிகளாகட்டும்…. அனமிகாவையும் சுனாமியையும் சேர்த்து சுனாமிகா என்று எழுதுவதாகட்டும்.. பாடல்களில் வியக்க வைக்கிறார் கவிப் பேரரசு வைரமுத்து எத்தனை பேர் வந்தாலும் என்னதான் காலமும் மொழியும் மாறினாலும் தனக்கான மைதானங்களில் எப்போதுமே அட்டகாசமாக அடித்து ஆடும் அந்த மகா கவிஞனை வியக்காமல் இருக்க முடியவில்லை .
ஆனால் அயன் படத்தில் வரும் ”பளபளக்குற பகலா நீ/” பாட்டின் டியூன் மட்டுமின்றி அதே ஆர்க்கெஸ்ட்ரேஷனையும் போட்டு, அந்தப் பாடலை ஆரம்பிக்கிறார் இசை அமைப்பாளர் வி பி ஆர் . ஞாயமா ஞாயமாரே?

ஜப்பான் குமார் காமெடி என்று எண்ணி ரொம்ப பொறுமையை சோதிக்கிறார்.
” எக்ஸ்கியூஸ் மீ …”
“ஹலோ நான்தான் எக்ஸ்கியூஸ் பண்ணனும் . நீங்க பண்றீங்க ..” என்று ஒரு வசனம்
எவ்வளவு அலட்சியம் பாருங்கள் !
நேர்த்தி இல்லாத திரைக்கதை. முதல் ஐந்து நிமிடக் காட்சிகளால் எந்தப் பயனும் இல்லை. ஆட்டோ டிரைவர் மிப்பு கேரக்டர் அபத்தத்தின் உச்சம். காமெடி என்பது பேமானித்தனம் அல்ல.
.
ஒரு வேகமாக வரும் காரை வழி மறித்து விசாரணை செய்கிறது போலீஸ். அடுத்த ஷாட்டில் வண்டிகளுக்குப் பின்னால் ஒரு காம்பவுண்ட் சுவர் இருக்கிறது . அய்யா…ஆ..ஆ..
எனினும் சதீஷ் , ஆனந்தராஜ், சாம்ஸ் இவர்களால் ஆங்காங்கே சிரிக்க முடிகிறது