அஷ்வின் ஜெரோம், வர்ஷா பொள்ளம்மா , ராஜு சுந்தரம் ,பொன்வண்ணன் நடிப்பில் பிரசாந்த் ஜி சேகர் இயக்கி இருக்கும் படம் யானும் தீயவன் . ரசிகனுக்கு யாரிவன் ? பார்ப்போம் .
சின்ன வயதிலேயே கொடூர குணம் படைத்து பல கொலைகளை செய்த பசுபதி என்ற தாதாவை (ராஜு சுந்தரம் !) என்கவுண்டரில் போட்டுத் தள்ள,
போலீஸ் குறிப்பாக சேலையூர்வி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் (பொன்வண்ணன்) துடிக்க, , தாதாவுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் ஆதரவு காரணமாக, அது முடியவில்லை.
மைக்கேல் என்ற கிறிஸ்தவ இளைஞனுக்கும்(அஸ்வின் ஜெரோம்) சவுமியா என்ற பிராமணப் பெண்ணுக்கும் (வர்ஷா பொள்ளம்மா) காதல் . இருவரின் குடும்பமும் அதிகார பலம் கொண்ட குடும்பங்கள்.
ஒரு முறை பசுபதியின் ஆட்கள் கடற்கரையில் சவும்யாவிடம் தவறாக நடக்க முயல, அவர்களை மைக்கேல் அடிக்க, பசுபதி தன் ஆட்களுக்கு ஆதரவாக வர அவனையும் அடிக்கிறான் மைக்கேல் .
எனவே அவனை பழிவாங்க நினைக்கிறான் பசுபதி .
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் கல்யாணம் செய்து கொள்ளும் மைக்கேல் – சவும்யா ஜோடி ஒரு ஊரோரமான வீட்டில் குடி இருக்க, அங்கு வரும் பசுபதி ஆட்களிடம் சிக்கிக் கொள்கின்றனர் .
அவர்களை அணுஅணுவாக கொல்ல பசுபதி முயல, இந்த விசயத்துக்கும் அப்பாற்பட்டு பசுபதியை போட்டுத் தள்ள போலீஸ் களம் இறங்க அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த யானும் தீயவன் .
ஒரு சின்ன கதையை எடுத்துக் கொண்டு இயல்பாக சொல்லி இருக்கிறார்கள் . பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லை . பெரிதாக பாராட்டவும் ஒன்றும் இல்லை .
ஜெரோம் கம்பீரமாக இருக்கிறார் . அழகு அங்கம்மாவாக இருக்கிறார் வர்ஷா பொள்ளம்மா . இருவரின் நடிப்பும் கூட நன்று, குறிப்பாக பசுபதியிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் !
எப்படி பெரிதாக குறை சொல்ல ஒன்றும் இல்லையோ , அப்படி பெரிதாக பாராட்டவும் ஒன்றும் இல்லை .
கல்லூரியில் மைக் பாடுவதை கும்பலில் உட்கார்ந்து சவும்யா கேட்டு வியக்கும் டி. ராஜேந்தர் காலத்து காட்சிகளை தவிர்த்து புதுமையாக யோசித்து இருக்கலாம் .
நண்பர்கள் எல்லாம் அப்படி ஒரு வீட்டிலா காதல் ஜோடியை குடி வைப்பார்கள்?
பசுபதியின் சொந்த ஊர் ஸ்ரீலங்கா என்று ஒரு தகவல் . என்ன சொல்ல வர்றீங்க ஏன் டைரக்டக்டர்.. ஏன்? . விட்ருங்க . உதவி பண்ண முடியாட்டியும் உபத்திரவம் பண்ணாம இருப்போம் .
தென்னை மரத்தைப் பற்றி எழுத சொன்னால் , ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒரு மாதிரி எழுதுவான்
பனிரெண்டாம் வகுப்பு மாணவன் ஒரு மாதிரி எழுதுவான் .
கல்லூரி மாணவன் ஒரு மாதிரி எழுதுவான் .
பத்திரிகையாளன் கவிஞன் , எழுத்தாளன், இப்படி எல்லோரும் ஒவ்வொரு மாதிரி எழுதுவார்கள் .
பத்திரிகையாளன் கவிஞன் , எழுத்தாளன் எழுதுவது மற்றவர்கள் படிக்க .
ஐந்தாம் வகுப்பு மாணவன் எழுதுவதும் சரியாகத்தான் இருக்கும் . தப்பாக எதுவும் இருக்காது .
ஆனால் மாணவன் எழுதுவது மற்றவர்கள் படிக்க அல்ல . அவன் படித்துக் கொள்ள!
யானும் தீயவன் … தென்னை மரம் பற்றி ஐந்தாம் வகுப்பு மாணவன் எழுதிய கட்டுரை (மாதிரி)