ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரிக்க ,
கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘யாக்கை’ இசை யுவன்ஷங்கர் ராஜா.
இந்த யாக்கை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் முன்னோட்டமும் இரண்டு பாடல்களும் திரையிடப் பட்டன. படம் ஒரு மெடிகல் திரில்லர் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
திரையிடப்பட்ட பாடல்கள் இரண்டும் மெல்லிசையாக இருந்தன என்பது சிறப்பு . இரண்டையும் மிக அழகான லோக்கேஷன்களில் சிறப்பாக எடுத்து இருந்தார்கள்.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் , தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர், தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் தேனப்பன், இர்பான்,
இயக்குனர் பெரோஸ், ஜாஸ் கண்ணன், ‘DIVO’ மியூசிக் ஷாஹிர், இயக்குனர் இளன், இயக்குனர் ராஜா ராமன், நடிகர் சரவணன் ஆகியோரும்,
மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன், இயக்குனர் குழந்தை வேலப்பன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார்,
படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கிருஷ்ணா சுவாதி, ‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி கிருஷ்ணன், சிங்கம் புலி, மாரிமுத்து என,
ஒட்டுமொத்த யாக்கை படத்தின் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்
“யாக்கை என்றால் உடம்பு என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அப்படி அல்ல .. உயிர் உள்ள உடலைக் குறிக்கும் சொல்தான் ‘யாக்கை’.
இத்தகைய வலிமையான தமிழ் சொல்லை தலைப்பாக கொண்டுள்ள யாக்கை படத்தின் கதையும் வலுவானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
தன்னுடைய முதல் படத்திலேயே இது போன்ற தனித்துவமான கதை களத்தை தேர்வு செய்த ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்..
இயக்குனர் குழந்தை வேலப்பனுக்குப் பாராட்டுகள் ” என்றார் இயக்குனர் கரு பழனியப்பன்.
“ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை ஒரு தரமான நடிகராக மென்மேலும் உயர்த்தி கொண்டே போகும் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது
யாக்கை படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
“என் மனதோடு ஒட்டி இருக்கும் ஒரு திரைப்படம் யாக்கை…. எங்களுடைய ‘யு 1 ரெகார்டஸ்’ நிறுவனம் ஆரம்பித்த பிறகு நான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யாக்கை’ என்பதே அதற்கு முக்கிய காரணம்
இது போன்ற ஒரு உற்சாகமான இளம் படக்குழுவினருடன் பணியாற்றுவது, எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது” என்று கூறினார் யாக்கை படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.
உயிருள்ள உடம்பு என்பது ரத்தமும் சதையுமாக இயற்கையின் இயல்பால் உருவாவது . ஆனால் இந்த உடம்பில் மருத்துவம் என்ற பெயரால் இரசாயனங்களைக் கொட்டி அழிக்கிறோம் .
இதன் பின்னால்உள்ள முதலாளித்துவ அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கிரைம் திரில்லர் படம் இது ” என்றார் இயக்குனர் குழந்தை வேலப்பன்
பயம் என வேண்டா ‘யாக்கை’க்கு, திரைக்கதை போற்றி செயின் !