
லக்ஷ்மி ராம கிருஷ்ணன் , நிதின் சத்யா, சுப்புலட்சுமி ஆகியோர் நடிப்பில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கி இருக்கும் படம் அம்மணி . இவள் மின்மினியா ? இல்லை வெண்ணிலவா ? பார்க்கலாம் .
அரசு பொது மருத்துவமனையில் ஆயாவாக வேலை பார்க்கும் சாலம்மாவுக்கு (லக்ஷ்மி ராம கிருஷ்ணன்) இரண்டு மகன்கள் ஒரு மகள் .
பெயிண்டிங் வேலை பார்க்கும் மூத்த மகன் குடிகாரன் . அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் உண்டு . ஆட்டோ ஓட்டும் இரண்டாவது மகனுக்கும் மனைவி குழந்தைகள் உண்டு .
மகள் காதல் கல்யாணம் செய்து கொண்டு போய் விட அவளோடு சாலம்மாவுக்கு தொடர்பு இல்லை.
சாலம்மா தனது, ஊழியர் சேமநல வருங்கால வைப்பு நிதி பணத்தில் லோன் போட்டு இடம் வாங்கி வீடு கட்டி மகன்கள் மருமகள்கள் பேரக் குழந்தைகளோடு வாழ,
சாலம்மவைப் பார்க்க அவளது மகள் வயிற்றுப் பேரன் வருகிறான் .
மகன்கள் மருமகள்கள் அவனை ஏற்க மறுத்தாலும் , சாலம்மாவுக்கும் கூட அவன் மீது கோபம் இருந்தாலும் பாசம் மட்டும்வி ட்டுப் போகவில்லை .
தன் வீட்டில் ஒரு தனி கட்டுமாணத்தில் அவனை தங்கச் சொல்கிறாள் . உண்மையில் அந்த வீட்டில் அம்மணி என்ற ஒரு வயதான பாட்டி வாடகைக்குக் குடி இருக்கிறாள்.
குப்பை பொறுக்கி விற்று கிடைத்ததை சாப்பிட்டு வாழும் அம்மணி வாடகையை கரெக்டாக கொடுத்து விடுவாள்.
வயது முதிர்ந்த அந்த பாட்டி அவ்வளவு வறிய நிலையிலும் வாழ்வில் எது பற்றியும் கவலை இல்லாமல் அன்றன்றைய வாழ்வை அன்றன்றைக்கு ரசித்து வாழும் விதம்,
எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு கவலைப் படும் குணம் உள்ள சாலம்மாவை ஆச்சர்யப்படுத்துகிறது .
சாலம்மாவுக்கு ரிட்டயர்டு ஆகும் காலம் வருகிறது. அந்த நிலையில் வரும் பென்ஷன் பணத்துக்கு குறி வைத்து மகன்கள் இருவரும் மருமகள்களும் காத்து இருக்கிறார்கள்.
மகள் வயிற்றுப் பேரனும் ஒரு வேலைக்கு டெபாசிட் கட்ட பணத்தை எதிர்பார்க்கிறான் .
ஒய்வு பெறும்போது வரும் பணம் லோனுக்கே சரியாகப் போய்விட , கையில் பணம் இல்லாமல் நிற்கும் சாலம்மாவுக்கு உறவுகளின் உண்மை முகம் புரிகிறது
அவள் விரக்தியின் உச்சிக்குப் போகிறாள் . அப்போது அம்மணி மூலம் அவளுக்கு நடக்கும் சில நிகழ்வுகள் உணர்வுகள் பாடங்களின் விளைவுகள் போன்றவை ஏற்படுத்தும் தெள்ளத் தெளிவே இந்தப் படம் .
வாழ்வின் விளிம்பில் இருக்கும் ஏழை மக்களின் உலகம் , அவர்களுக்குள்ளும் இருக்கும் பொறுப்புணர்ச்சி , கவுரவம் , கம்பீரம், மன உணர்வுகள் , இழப்புகள் , குழப்பங்கள் , பிரச்னை எதிர்கொள்ளல்கள்… இப்படி … இப்படி…
பல விசயங்களை கதை திரைக்கதை வசனமாக்கி கொஞ்சம் கூட சினிமாத்தனம் இன்றி அதை படமாக்கி ஓர் அற்புதமான படத்தை கொடுத்துள்ள லக்ஷ்மி ராம கிருஷ்ணனுக்கு அழுத்தமான கை குலுக்கல்கள் .
சின்ன சின்ன காட்சிகள் சின்ன சின்ன வசனங்கள் முக பாவனைகள் ஏற்படுத்தும் உணர்வுகள் , அதில் கனமான சிம்பாலிசம் மற்றும் நேரடி விவரிப்பு என்று…
அர்த்தமும் அக்கறையும் கவிதையும் நெகிழ்வும் கலக்கும் டைரக்ஷன் . சபாஷ் லக்ஷ்மி . கிரேட் .
கமர்ஷியல் என்ற பெயரில் வழக்கமான மசாலாத்தனமாக திரைக்கதையை கொண்டு போக , ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அதை எல்லாம் புறக்கணித்து விட்டு,
மிக நேர்மையாகவே ஒரு நல்ல தரமான கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ள திட்டவட்டம், வட்டமிட்டு கட்டம் கட்டி பாராட்டுதலுக்குரியது . ஆசம் லக்ஷ்மி .
மிகச் சிறந்த கதாபாத்திரத் தேர்வுகள் , அவர்களிடம் சிறப்பாக வேலை வாங்கிய விதம் எல்லாமே அருமை .
சாலம்மாவாக நடை உடை பாவனை , உணர்ந்து நடித்தல் என்று, நடிப்பிலும் காதலிக்க வைக்கிறார் லக்ஷ்மி ராம கிருஷ்ணனன் ( என்ன … அந்த குறலும் மாடுலேஷனும்தான் கொஞ்சம் ஒத்துழைக்க மறுத்து த’கிக்’குது )
அம்மணிப் பாட்டியாக வரும் சுப்பு;லக்ஷ்மி குடுகுடுவயதிலும் குறும்பு கொப்பளிக்கும் பாட்டியாக அசத்தி இருக்கிறார் .
ஆனால் இவரை பிராமணப் பெண்மணி என்ற சொன்ன விதத்தில்தான் யதார்த்தம் ஊசிப் போன பதார்த்தம் போலாகிறது.
எடுத்த எடுப்பில் டைட்டில் பாடல் இசையிலேயே நம்மை அப்படி மயக்கிக் கட்டிப் போடுகிறார் இசையமைப்பாளர் கே. பின்னணி இசையிலும் அப்படி ஓர் ஆழமும் அர்த்தமும் . வாழ்த்துகள் தம்பி .
இம்ரான் ஹமத், கே ஆர் ஆகியோரின் ஒளிப்பதிவு இயக்குனரின் ஃபிரேமிங் சென்ஸ் உடன் இணைந்து இயைந்து இழைந்து அசத்துகிறது .
ரெஜித், கே ஆர் ஆகியோரின் படத்தொகுப்பு கனமான நிதானமான கதைப் போக்கை தொய்வடைய விடாமல் சுவாரஸ்யமாக கொண்டு போகிறது .
மறைந்த நா. முத்துக் குமாரின் மழை இங்கில்லையேல் பாடல் வரிகள் பக்குவப் பாடம் .
படம் முடிந்து வரும்போது ஒவ்வொரு ரசிகனும் இதுவரையிலான தனது வழக்கமான வாழ்க்கை முறை குறித்த சுய விசாரணைக்கு சில நிமிடங்களாவது ஆளாவான் . அதுதான் இந்தப் படத்தின் அர்த்தமுள்ள வெற்றி !
அம்மணி … பொன்மணி
மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————–
லக்ஷ்மி ராம கிருஷ்ணன் மற்றும் கே .