பிளான் ஏ ஸ்டுடியோ சார்பில் அமீன் மற்றும் அக்பர் தயாரிக்க, அஷ்ரப் , லாரன்ஸ் ராமு .அதிதி செங்கப்பா ஆகியோர் நடிக்க, பிரபு யுவராஜ் இயக்கி இருக்கும் படம் ர. பழந்தமிழில் ர என்ற ஓரெழுத்துச் சொல்லுக்கு கவர்தல் என்று பொருள் . ரா ரா என்று ரசிகர்களை தியேட்டருக்கு கவர்ந்து இழுக்குமா இந்தப் படம் ? பார்க்கலாம் .
இளைஞன் அஜய் (அஷ்ரப்) தன் காதல் மனைவி ரென்யாவை (அதிதி செங்கப்பா) , அவளது பெற்றோருக்கு தெரியாமல் திருமணம செய்து கொண்டு தன் வீட்டுக்கு கொண்டு வந்து, அம்மா , அக்கா , அக்கா மகளான சிறுமி ஆகியோர் அடங்கிய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழத் துவங்குகிறான் . வீட்டில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலையில் இந்தத் தம்பதி, தன் நண்பர்கள் சிலருக்கு தண்ணி பார்ட்டி கொடுக்கிறர்கள் காலையில் ரென்யா செத்துக் கிடக்கிறாள் .
அடுத்த சில நாளில் அவள் ஆவியாக வருகிறாள். அந்த ஆவியோடு பேச அஜய் முயல , அதன் விளைவாக மிக மோசமான ஒரு சைத்தானிடம் சிக்கிக் கொள்கிறான் . அதன் விளைவாக பல அழிவுகள் பின்னால் ஏற்பட இருக்கிறது என்று எச்சரித்த ஒரு புரஃபசரும் கொல்லப்படுகிறார். ஒரு நிலையில் அஜயின் குடும்பத்தில் இருந்து இன்னொரு உயிரும் போகிறது . இந்த மரணகளுக்கு யார் காரணம் அல்லது எது காரணம் என்று …
ம்ஹும் !
படம் சொல்லும் விஷயங்கள் கடைசிவரை எல்லா ரசிகர்களுக்கும் பிடிக்குமா , தெளிவாகப் புரியுமா என்பது எல்லாம் அப்புறம் … அனால் ர படம் சொல்லி உணர வேண்டிய படம் அல்ல . பார்த்து உணர வேண்டிய படம் .
இதுவரை தமிழில் பார்த்திராத ஒரு தன்மையில் ஒரு வாகில் வந்திருக்கிறது இந்தப் படம் .
உலகத்தில் அமானுஷ்ய உலகத்தில் உள்ள தீய சக்திகளை விட மனிதனின் பேராசைதான் ஆபத்தானது, அந்த சுயநலம் மற்றும் பேராசை ஆகிய சிவப்புக் கதவுகளை திறந்து உள்ளே போனால் மனிதன் மற்ற தீய சக்திகளை விட பெரிய தீய சக்தியாக மாறுவான் என்று இரண்டு விசயங்களையும் ஒரு நேர்க் கோட்டில் நிறுத்திய விதமும் அபாரம் !
நாலு சீன்கள் ரெண்டு பாட்டு கொஞ்சம் பேய் தோற்றம் காட்டும் கேரக்டருக்கு இந்த புள்ளையே போதும் என்று எண்ணி அதிதி செங்கப்பாவை கதாநாயகியாக போட்டு இருக்கிறார்கள் . ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் கன்னித்தீவு அதிபர் செங்கப்பனைப் போலவே இருக்கிறார் அவர் .
அஷ்ரப் , அவரது நண்பனாக நடித்து இருக்கும் லாரன்ஸ் ராமு இருவருக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு . சிறப்பாக செய்து இருக்கிறார்கள் .
ராஜ் ஆர்யனின் இசை, திகில் பிகிலை பிரம்மாதமாகவே ஊதுகிறது . சபாஷ் . இயக்குனர் பிரபு யுவராஜின் நிதானமான அழுத்தமான ஷாட்களுக்கு சரவணன் செய்திருக்கும் ஒளிப்பதிவு அதன் வண்ணச் சிதறல்கள், ஒளி இருள் பயன்பாடு எல்லாமும் அபாரம் பிரேம் பூமி நாதனின் படத்தொகுப்பு .. அதிலும் ஒலித்தொகுப்பு மிரட்டுகிறது . உண்மையில் இந்தப் படத்தின் சிறப்பே இந்தப் பத்தியில் சொல்லி இருக்கும் விசயங்கள்தான்.
கிளைமாக்சை உருவாக்கும் அந்த திருப்பம் கதை ரீதியாக ஓகேதான் . ஆனால் சொன்ன விதம்தான் திருப்தியில்லை . அதுவரை சின்னச் சின்ன விஷயங்களை கூட பார்த்து பார்த்து செதுக்கியவர்கள் முக்கியமான் அந்த திருப்பத்தை படமாக்கிய விதத்தில் மட்டும் அம்மி கொத்தி இருக்கிறார்கள் .
எனினும்
படமாக்கல் முறையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தருகிறது இந்தப் படம் .
ர…. லக லக லக !