பி ஜி எஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் பி ஜி எஸ் வில்லனாக நடித்து தயாரிக்க உடன் FRIDAY ஃபிலிம் ஃபேக்டரி இயக்குனர் கே. பாக்யராஜ், பிளாக் பாண்டி, அங்கயற்கண்ணன், சுகைல் , பிரபு, கார்த்திக், கோவிந்தராஜன், சுபிக்ஷா , செபி, நிகிதா, பப்லு நடிப்பில் சிவ மாதவ் இயக்கி இருக்கும் படம்.
24 கேமராக்களைப் பயன்படுத்தி, 81 நிமிடத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்ட 90 நிமிட படம் இது . நாலேஜ் எஞ்சினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனீப் என்பவர் நடுவராக படத்தின் உருவாக்கத்தைப் பார்வையிட, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் இந்தப் படத்துக்கு உலக சாதனை விருதை வழங்கியுள்ளது .

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்திற்கு தொழுகைக்குப் பலரும் வருகின்றனர் . பாதிரியாரிடம் ( கே. பாக்யராஜ்) பலரும் தங்கள் குடும்ப சந்தோஷ – வருத்தங்களை பகிர்ந்து கொள்கின்றனர் . பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பலரும் உண்டு.
அவரைப் பிடிக்காத சிலரும் உண்டு .. சர்ச்சுக்கு கொடை வழங்கும் வெளிநாட்டினர் சிலரும் வந்திருக்கின்றனர். அப்போது உள்ளே நுழையும் ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல், மக்களை சரமாரியாக சுட்டுக் கொல்கிறது. அதன் தலைவன் (பி ஜி எஸ்) பாதிரியாரை மிரட்டி சர்ச்சின் கட்டிட வரைபடத்தையும் , பாதிரியார் கண்டுபிடித்து இருக்கும் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பு விவரங்களையும் கேட்கிறது

அது அவர்கள் போன்ற தீயவர்கள் கையில் கிடைத்தால் உலகுக்கு நல்லது இல்லை என்று அவர் மறுக்க, அவர்கள் மேலும் பலரை சுட நடந்தது என்ன என்பதே படம்.
டெலி போர்ட்டிங் (teleporting) எனப்படும்– ஒரு விஞ்ஞானக் கருவிக்குள் நுழைவது மூலம் , நினைத்த இடத்துக்கு நொடிக்குள் போகும் விஞ்ஞான தொழில் நுட்பம் பற்றி பேசும் படம் .
இயக்குனர் சிவ மாதவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
நிறுத்தாமல் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு கேமராவின் பார்வைக்குள் இன்னொரு கேமரா விழாமல் 24 கேமராக்களை பொருத்திப் படம் பிடிப்பதே ஒரு சாதனைதான். அதனாலேயே சில இடத்தில் அவுட் ஆப் ஃபோகஸ் , சரியில்லாத ஃபிரேமிங் இருந்தாலும் கூட ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரனைப் பாராட்டுவோம்.

அது போல இந்தப் படத்துக்கு படத் தொகுப்பு செய்வதும் கடுமையான வேலை. படத் தொகுப்பாளர் ஆர் கே ஸ்ரீநாத்துக்கும் பாராட்டுகள். ஸ்ரீமன் பாலாஜியின் கலை இயக்கமும் சிறப்பு.
வில்லனாக வரும் பி ஜி எஸ் உடல் மொழிகள் மூலம் கவனிக்க வைக்கிறார் .
படமாக்கலில் நேர்த்தி குறைவு என்றாலும் இப்படி ஒரு முயற்சியில் இந்த அளவுக்கு வந்திருப்பதே பெரிது .
டெலி போர்ட்டிங் விசயமும் அபாரம்