3BHK@ விமர்சனம்

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்க , சித்தார்த்,  சரத்குமார், தேவயானி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா நடிப்பில்,   8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ்  இயக்கியுள்ள படம். 

விமர்சனத்துக்கு முன்பு ஒரு சுவாரஸ்யமான முன் கதை . 
 
2004 ஆம் ஆண்டு நான் மாலை முரசு குழும இதழ்களின் கட்டுரைப்பகுதி ஆசிரியராக இருந்த போது , தேவி வார இதழில் ஒரு  நாவல் போட்டி வைக்கலாமா என்றார் ராமச்சந்திர ஆதித்தன் அவர்கள்.   எங்கள் குழுமத்திலேயே பெண்மணி , கண்மணி என்று இரண்டு மாத நாவல்கள் வருவதால் அது வேண்டாம் என்று முடிவு செய்தோம்  . சாதாரண சிறுகதை, ஒரு பக்க கதைப் போட்டியும் பழசாகி இருந்தது . குறுநாவல் போட்டி என்பது வழக்கொழிந்து போன ஒன்றாக இருந்தது . 
 
எனவே தேவி வார இதழில் நான்கு வாரங்கள் பிரசுரிக்கும்படி இருக்க வேண்டும் . நான்கு சிறுகதை அளவுக்கு இருக்க வேண்டும் என்று எண்ணி சின்னஞ்சிறு நாவல் போட்டி என்று பெயர் வைத்தேன். அய்யாவும் ஏற்றுக் கொண்டார். முதல் பரிசு ஒருவருக்கு 25000, இரண்டாம் பரிசு இருவருக்கு தலா  15000 ,மூன்றாம பரிசு மூவருக்கு தலா  10000
 
வந்த நாவல்களை பரிசீலித்ததில் மூன்று நாவல்கள் ஒரே தரத்தில் இருந்தன. எனவே முதல் இரண்டு பரிசுத் தொகையை சேர்த்து அதோடு ஐயாயிரம் சேர்த்து   55000  என்பதை   60000 ஆக்கி மூவருக்கும் 20000 பரிசாகக் கொடுத்தோம். 
 
அந்த மூன்று கதைகளில் ஒன்றின் பெயர் ,வீடு. எழுதியவர் பெயர் இந்திரா.  வாடகை வீட்டில் ஓனரின் அதிகாரம் , பூச்செடி வைக்க- கிளி வளர்க்க இடமில்லை , அதிகரிக்கும் வாடகை , கரண்ட் பில் , ஓனருக்கு பயந்த  வாழ்க்கை இவற்றால் பாதிக்கப்படும் ஒரு பெண் கணவரை வற்புறுத்தி லோன் போட்டு சொந்த வீடு வாங்க வைக்கிறாள் . 
 
லோன் வாங்கி பில்டரிடம் காசைக்  கொட்டிக் கொடுத்து ஏமாந்து ஒரு வழியாக வீடு வாங்கி குடி புகுவார்கள் . ஆனால் அதன் பின் குடும்ப சூழல் செலவுகள் இவற்றால் லோன் கட்ட முடியாமல் வீடு மூழ்கி விடும் .மீண்டும் வாடகை வீட்டுக்கே வரும் அந்தப் பெண்ணின் கண்ணீர்தான் ‘வீடு’. (பாலுமகேந்திராவின் வீடு , இதற்கும் முந்தியது . )
 
உண்மையில் இந்தக் கதைக்கு முதல் பரிசு கொடுத்து இருக்க வேண்டும் . ஆனால் அடுத்து இதுதான் வரும் என்பதை படிக்கும் சாதாரண வாசகரும்  எளிதாக யூகிக்கும்படி எழுதி இருந்ததால், அது  மூன்று கதைகளில் ஒன்றாக மாறியது.  . ஆனால் அந்த  அளவு வரை அந்தக் கதை வந்ததற்கு காரணம் அந்தப் பெண்ணின் மன உணர்வுகளை அந்த எழுத்தாளர் விவரித்து இருந்த விதம் . எழுத்தில் வார்த்தைகள் வடிவமைப்பில் ஓர் ஆன்மா தெரிந்தது .  
 
வீடு என்ற அந்த சின்னஞ்சிறு நாவலை எழுதிய அந்த இந்திராதான்,  இன்றைய கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி . 
 
அப்போதைய இந்திரா என்னிடம் தொலைபேசியில் பேசும்போது , ” எழுதறத விட்ராதீங்க ஜோதி . உங்க வாக்கிய அமைப்பும் எளிய சொற்களைப் பயன்படுத்தும் வளமும் சிறப்பா இருக்கு “என்றேன் . ரொம்ப மகிழ்ந்தார் . குரலில் கண்ணீரோடு நன்றி சொன்னார். 
 
ஆனால் அப்புறம் என்னைப் போல் ஆகி விடக் கூடாது என்பதாலோ என்னவோ அரசியல்வாதி ஆகி விட்டார் . புத்திசாலி . மந்திரி ஆகவும் வாழ்த்துகள். 
 
அந்த வீடு சின்னஞ்சிறு நாவல் வந்து சுமார் இருபத்தி ஒரு வருடம் கழித்து இப்போது இந்த 3BHK படம் வந்துள்ளது .  (நோ நோ நோ .. இன்றைய ஜோதிம் மணியான அன்றைய இந்திரா எழுதிய கதை வேறு. இந்தப் படத்திஜ்ன் கதை வேறு.) 
 
ஒரு கம்பெனியில் கணக்கு எழுதும் அலுவலர் வாசுதேவனுக்கு (சரத்குமார்) மனைவி (தேவயானி) மகன் (சித்தார்த்) மகள் மீதா ரகுநாத்) என்று ஒரு அளவான குடும்பம் . 
 
வாடகை வீடு , அதன் தொல்லைகள், இயல்பாகவே உள்ள ஆசை இவற்றால் சொந்த வீடு வாங்க வாசுதேவனுக்கு ஆசை. அவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்க , மனைவி பலகாரங்கள் செய்து விற்று பொருளீட்ட, ஒரு வழியாக பில்டருக்கு அட்வான்ஸ் தர பணம் சேர்த்து தயாரானால்….  பையன் பிளஸ் டூ வில் ஜஸ்ட் பாஸ். அவனை நல்ல கல்லூரியில் சேர்க்க அந்தப் பணம் செலவாகிறது மகளை சாதாரண பள்ளியில் படிக்க வைக்க வேண்டிய சூழல் . 
 
ஒருவழியாக பில்டருக்கு அட்வான்ஸ் தர பணம் சேர்த்து மீண்டும் தயாரானால்., பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வரதட்சணை கல்யாணச் செலவு இவற்றுக்கு பணம் செலவாகி விடுகிறது 
 
ஒருவழியாக பில்டருக்கு அட்வான்ஸ் தர பணம் சேர்த்து மீண்டும் தயாரானால்., வாசுதேவனுக்கு ஹார்ட் அட்டாக் மருத்துவ செலவு. 
 
பையனை ஒரு பணக்கார நண்பரின் ஒரே மகளுக்கு கட்டி வைத்து அவனை செட்டில் செய்ய  வாசுதேவன் நினைத்தால் அவன் நிச்சயம் முடிந்த நிலையில் பிளஸ் டூவில் பெயில் ஆன பள்ளித் தோழியையே ( சைத்ரா) திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறான் . 
 
வாசுதேவன் சொந்த வீட்டுக்கு குடி போனாரா ? எனில் எப்படி ? என்பதே இந்தப் படம் 
 
வீடு வாங்கும் கனவை வைத்து இரு படம் . அடிப்படையில் இந்தக் கதை மிக சுவாரஸ்யமான மக்களை ஈர்க்கிற விஷயம். அதற்கு ஏற்றார் போல  சொந்த வீடு என்பது அதிகாரம் . அது மேல நின்னு வெளியே பாத்தா இந்த சிட்டியையே ஜெயித்த மாதிரி இருக்கும் . என்று வசனங்களால் உருவேற்றி விடுகிறார்கள் 
 
படத்தின் மிகச் சிறந்த விஷயம் ஐ டி கம்பெனிகளில் உறிஞ்சப்படும் தொழிலாளர்களின் ரத்தம் பற்றிய பார்வை . ”ஐ டி க்கு பியூச்சர் இருக்கும் . ஆனா ஐடி கம்பெனியில வேலை செய்யறவங்களுக்கு இல்ல .. ” போன்ற சில இடங்களில் வசனம் அற்புதம் . 
 
பள்ளி,  கல்லூரி இளைஞனாக உடலை தனக்குத் தானே உள்ளுக்குள் அமிழ்த்திக் கொள்ளும் உடல் மொழிகளோடு அதற்கேற்ற முகபாவனைகளோடு அசத்தி இருக்கிறார் சித்தார்த் . 
 
சில சமயம் தப்பான மாடுலேஷன் , பேசும் வசனத்தின் வார்த்தைகளுக்கு இடையே தப்பான இடைவெளிகள்  என்று இருந்தாலும் வழக்கம் போல சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் மீதா  
 
”யார்றா இந்த வீராயி…?”  என்று கேட்கும் அளவுக்கு எளிய யதார்த்த தோற்றத்தில் அசத்துகிறார் சைத்ரா, சிறப்பான நடிப்பு  ஆனால் அவர் சொந்தக் குரலில் தமிழ் பேசி இருப்பதைப் பார்க்கும்போது சொந்த ஊரு செவ்வாய் கிரகமோ எனக் கேட்கத் தோன்றுகிறது. 
 
மூன்று கெட்டப்களில் கம்பீரமாக வருகிறார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் . 
 
இன்னொரு டி வி சீரியல் என்ற மூடிலேயே நடித்துள்ளார்  தேவயானி.
 
 யோகிபாபு நாலைந்து முறை சிரிக்க வைக்கிறார் . 
 
விவேக் பிரசன்னா, பஞ்சு சுப்பு ,மற்றும் சிலர் எல்லாம் ஏ ஐ யில் உருவாக்கப்பட்ட  கதாபாத்திரங்கள் போல இருக்கிறார்கள் . 
 
அந்த இன்டர்வல் சீன் அபாரம். மிக கஷ்டமான கையறு நிலையில் இன்னும் ஒரு நம்பிக்கை தகர்ப்பு என்பது எவ்வளவு பெரிய கொடுமை . நல்ல எழுத்து . 
 
அம்ரித் ராமநாத்தின் இசை சிறப்பு. தினேஷ் கிருஷ்ணன் , ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும் சிறப்பு . 
 
கடனோ முதலோ ஒரு வீடு வாங்க முயல்வது என்பது ஒரு உற்சாகமான விஷயம் . அந்த உற்சாகம் …..அப்புறம் ஏமாற்றம் … மீண்டும் உற்சாகம்….  இப்படி இருந்தால்தான் ரசிகர்கள் இயல்பாக பின் தொடர்வார்கள் . ஆனால் இங்கே முதல் காட்சியிலே” லால்லா… லால்லா…. லா லால்லா ” மூடுக்குப் போய் விடுகிறார்கள் . 
 
அப்பாவின் தப்பான முடிவுகள் என்பது யதார்த்தத்தில் நடக்கிற விஷயம்தான் . அதை மகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது சொல்ல வேண்டிய விசயம்தான் . ஆனால் இந்தக் கதையின் மெயின் நோக்கத்தில் இருந்து அது தனியே….  சொல்லப் போனால் எதிராக நிற்கிறது . 
 
அப்பா மகன், மகள் விசயத்தில் தவறான முடிவுகள் எடுக்கிறார் பையன் படிப்பில் மக்கு போன்ற விஷயங்கள்  வீடு வாங்கும் கனவு பற்றிய கதையின் வீரியத்தை குறைக்கின்றன . 
 
எப்படி இன்றைய கரூர் எம் பி  ஜோதிமணியான  அன்றைய இந்திரா எழுதி நான் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த  வீடு கதையில் சம்பவங்கள் எளிதாக யூகிக்க முடிவதாய் இருந்ததோ  அதே போல  இந்த 3BHK படத்திலும் அடுத்தடுத்து வரும் காட்சிகள் மிக எளிமையாக எல்லோராலும் யூகிக்க முடிகிறபடி இருக்கிறது, கடைசியில் கிளைமாக்ஸ் கூட அட இதானா இது கூட எங்களுக்குத் தெரியாதா என்று ஆடியன்ஸ் கேட்கிற அளவில்தான் இருக்கிறது .  (இந்த படம் கூட அரவிந்த் சச்சிதானந்தம் என்பவர் எழுதிய 3BHK வீடு என்ற கதையில் இருந்துதான் எடுக்கப்பட்டு இருக்கிறது) வீடு வாங்கும் விசயத்தில் இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்து அதிக மக்கள் அறியா விசயங்களை கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது . 
 
ஜோதிமணி அன்று எழுதிய அந்த நாவலில் கூட,  சின்னச் சின்ன விசயங்களுக்காக  வீடு வாங்க முடிவு செய்து பெரிதாக கால் வைத்து சிக்கி மீண்டும் முன்பை விட மோசமான நிலைக்கு வந்து விடாதீர்கள்’ என்ற ஒரு எச்சரிக்கையை அவர் ஸ்ட்ராங்காக அழகாக சொல்லி இருந்தார் . அதுதான் அந்த நாவலின் பலம்  ஆனால் இதில் அப்படி ஏதும்  இல்லை. வீடு குறித்த வலிந்து திணிக்கும் பெருமித உணர்வே இருக்கிறது .
 
அதிகரிக்கும் வங்கி வட்டி விகிதங்கள் , குடிமக்கள் மீதான அரசின் வரிகள் பற்றிய பார்வை ,  சம்பளம் உயர்வுகளில் இருக்கும் சுணக்கம் , கட்டுமான நிறுவனங்களில் அதிகரித்து இருக்கும் முறைகேடுகள் இவற்றை எல்லாம் வைத்துதான் இப்போது சொந்த வீடு என்ற விசயத்தையே பார்க்க வேண்டி உள்ளது .
 
எத்தனை வருடக் கடன் , அதுவரை குடும்பம் பிள்ளைகளின் படிப்பு கல்யாண செலவுகள் , பிள்ளைகளில் திறமை,  இவற்றை மனதில் வைத்துக் கொண்டு,  வீட்டுக் கடனுக்கான மாத வட்டி இன்ஸ்டால்மென்ட் தொகையால் குடும்பத்துக்கான செலவுகளில் பெரிதாக பாதிப்பு வராது என்றால் மட்டுமே வீட்டுக் கடன் வாங்க வேண்டும் . 
 
தவிர திரைப்படங்களில் ஹாலோ பிளாக் வீடுகளை புரமோட் செய்யக் கூடாது ; செங்கல் கட்டுமான வீடுகளையே காட்ட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து 
 
மறைந்த தொழிலதிபர் டாட்டாவுக்கு  சொந்த வீடு கிடையாது. ” என்னிடம் பணம்  இருக்கிறது. ஆனால் முப்பது  கோடி கொடுத்துக் கட்டிய வீடு எனக்கு  லட்சங்களில் வாடகைக்கு கிடைக்கிறது . அந்த வாடகையையும் நான் மாதாமாதம் கொடுத்தால் போதும் . அப்படி இருக்க ஒரு வீட்டுக்காக நான் ஏன் முப்பது  கோடி ரூபாயை முடக்க வேண்டும்? தவிர வாடகை வீடு என்றால் நாம் நினைத்தபடி அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியும் . புதுப் புது வீடுகளில் வாழலாம் ” என்ற ரீதியில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது,  என்றாலும் சிந்திக்கத் தக்கதே . 
 
இன்று வீடு வாங்குவது கட்டுவது பற்றி ஓர் அக்கறையுள்ள படம் என்ன சொல்ல வேண்டும்?
 
உங்கள் நிகழ்கால வாழ்வை , எதிர்கால ஆக்கப் பூர்வ திட்டங்களை பாதிக்கா வண்ணம் காசு கையில் இருந்தால் சொந்த வீடு வாங்குங்கள் / கட்டுங்கள் … அல்லது குறைந்த பட்சம் ஐம்பது சதவீதம் கையில் காசு இருந்தால்   வீட்டுக் கடன் பற்றி யோசியுங்கள். பல கோடிகள் இருந்தால் சொந்த வீடும் காட்டுங்கள் / வாங்குங்கள் . மேலும் கட்டி/ வாங்கி வாடகைக்கு விடுங்கள் என்றுதான் ஒரு படம் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். 
 
அதை விடுத்து வீடு என்பது அதிகாரம் ; சொந்த வீட்டுல மாடில நின்னு பாத்தா சென்னையையே ஜெயித்த மாதிரி என்று காசா கிராண்ட் கம்பெனியின் கட்டிடங்களைக் காட்டி  சும்மா உசுப்பேற்றுவது எல்லாம் …. 
 
கையில காசு இருந்து வீடு கட்டுபவனே இன்று படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல . தேவையான காசு அவனுக்கு கிடைக்கக் கூடாது உறவுகளே திட்டம் போடுவது, இவன் எப்படி கட்டி முடிக்கிறான் ன்னு பாக்கறேன் என்று உடன் பிறந்தவர்களே ஒதுங்கி நின்று வன்மைத்தோடு வேடிக்கை பார்க்கும் நிகழ்வுகள், அதனால் வீடு கட்டும் நபருக்கு வரும் கூடுதல்  மன உளைச்சல்கள் , கட்டிய வீட்டை வாங்குவதில் உள்ள பிரச்னைகள் ஏமாற்றங்கள், ஏமாற்றல்கள்…
 

ஒரு நல்ல பில்டரிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது சொன்னார் . ”சார் புதுசா அப்பார்ட்மென்ட் வாங்கறவங்க கிட்ட கேளுங்க . கோடி கொடுத்து ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கிட்டு ”இந்த வீட்டுக்கு எல்லாம் life ஒரு முப்பது வருஷம்தானே சார் ” என்று வாங்கியவரே சகஜமாக சொல்வார் .

ஆனால் உண்மை அதுவல்ல.

இன்றைய நிலையில் கொடுக்கிற தொகைக்கு கட்டப்படும் வீடுகள் குறைந்த பட்சம் அம்பது வருஷமாவது கை வைக்கத் தேவை இல்லை எனும் அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கணும். ஆனா முப்பது வருஷம்தான் தாங்கும்ன்னு வாங்கறவங்களே சொல்ற அளவுக்கு மூளையில் புகுத்தினோம் பாருங்க. அதான் கட்டுமானத் துறையின் வெற்றி ” என்றார்.

 
இவை எல்லாம்தான் இப்போ சொல்லப்பட விஷயங்கள் . இதுதான் இன்று அவல நகைச்சுவை கொண்ட சிறந்த படமாக இருக்கும் (காப்பி ரைட் ரிசர்வ்டு) 
 
எனவே 3BHK……. ஜஸ்ட் 1BHK
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *