பிரபல தெலுங்கு நடிகர் , இயக்குனர் எழுத்தாளர் என்று பன் முகம் கொண்ட தெலுங்கு திரைப்படக் கலைஞர் கொல்லப்புடி மாருதிராவ் . இவரை நீங்கள் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற பல தமிழ்ப் படங்களிலும் பார்த்து இருக்கலாம் .
இவரது மூன்று மகன்களில் ஒருவரான சீனிவாசராவ் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு , 1993 ஆம் ஆண்டு அஜித் குமார் – காஞ்சன் நடிக்க பிரேம புஸ்தகம் (காதல் புத்தகம்) ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த வேளையில், விசாகப் பட்டினத்தில் கப்பலில் இருந்து கடலில் விழுந்து மரணம் அடைந்தார். பிறகு அந்தப் படத்தை அவரது தந்தை கொல்லப்புடி மாருதி ராவே இயக்கி முடித்து வெளியிட்டார். கொல்லப்புடி சீனிவாஸ்
ஒரு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து அது நிறைவேறும் சூழலில் அநியாயமாக உயிர் இழந்த சீனிவாசராவ் பெயரில் ஆண்டு தோறும் இந்திய அளவில் முதல் படம் இயக்கிய இயக்குனர்களில் இருந்து, சிறப்பான படத்தைக் கொடுத்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து….
சிறந்த அறிமுக இயக்குனருக்கான கொல்லப்புடி சீனிவாஸ்’ விருதை வழங்கி வருகிறது , கொல்லப்புடி மாருதி ராவ் குடும்பத்தினர் மற்றும் சுகாசினி மணிரத்னம் ஆகியோர் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கொல்லப்புடி சீனிவாசராவ் நினைவு அறக்கட்டளை . கொல்லப்புடி மாருதி ராவ்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பண முடிப்புடன் வழங்கப் படும் இந்த விருது தேசிய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவருடமும் முதல் பட இயக்குனர்கள் பற்றிய ஒரு சிறப்புரை இடம்பெறும்அந்த சிறப்புரை சிறப்புரை புத்தக வடிவமாகவும் வெளிவரும்.
இந்தி, மலையாளம், தெலுங்கு, அசாமி, பெங்காலி , கன்னடம், மராத்தி , குஜராத்தி மொழிப் படங்கள் வென்ற இந்த கொல்லப்புடி சீனிவாஸ் விருதை ஒரு முறை ஜானகி விசுவநாதன் இயக்கிய குட்டி என்ற தமிழ்ப் படமும் வென்றுள்ளது .
பார்வையாளராக அனுஷ்கா
ஆங்கிலம் – 4, மலையாளம் – 3 அசாமி – 1 பெங்காலி- 1, தெலுங்கு -2 , இந்தி -3 மராத்தி -1 குஜராத்தி -1 தமிழ் -1 என்பதே இதுவரையிலான விருது விவரம் . இந்திய திரை உலகின் முன்னோடிகள் பலரும் முந்திய வருடங்களில் இந்த விருது வழங்கும் விழாவுக்கு வந்து இருந்து சிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் 18 ஆவது கொல்லப்புடி சீனிவாஸ் தேசிய விருதுக்கான தேர்வுக்கு வந்த ஹிந்தி, மலையாளம்,மராத்தி,பெங்காலி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட பல் வேறு மொழிகளை சேர்ந்த 27 படங்களில் இருந்து, தேர்வுக் குழுவினரான இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீநிவாஸ் ராவ் , இயக்குனர் வசந்த் , நடிகை ரோகினி ஆகியோர் ஒன்று சேர்ந்து ….
இந்தியில் Q’ என்ற படத்தை இயக்கிய சஞ்சீவ் குப்தா என்ற அறிமுக இயக்குனரை இந்த ஆண்டு விருதுக்காகத் தேர்ந்தெடுத்தனர். விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆந்திர நடிகர் சிரஞ்சீவி, நம்ம ஊர் கார்த்திக் சுப்புராஜ், இந்தி இயக்குனர் ஃபரா கான் , சுகாசினி மணிரத்னம், நடிகர் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டனர் . “அறிமுக இயக்குனர்கள் மீதான எனது நம்பிக்கை ‘ என்ற தலைப்பில் சித்தார்த் பேசினார் . (இந்த வருட சிறப்புரை )
“மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து ஷங்கர் சார் படத்தின் மூலம் நடிகன் ஆனவன் நான். ஆனாலும் இதுவரை நான் நடித்த 25 படங்களில் 14 படங்களை அறிமுக இயக்குனர்களே இயக்கினார்கள். அந்தத் தகுதி காரணமாகவே எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் .
ஒரு சினிமா ரிலீஸ் ஆவது என்பது பிரசவம் மாதிரி . ஒரு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவ வலியில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் . பிறக்கப் போகிற குழந்தைதான் அந்தப் படம். அந்தத் தாய்தான் இயக்குனர் . . சுகப்பிரசவம் ஆகுமா என்று தவிக்கும் கணவர்தான் தயாரிப்பாளர் . பிரசவம் பார்க்கும் டாக்டர்தான் விநியோகஸ்தர்கள். உதவி செய்யும் நர்ஸ்தான் நடிக, நடிகையர்.
வெளியே நல்லபடியாக பிரசவம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கும் உறவினர்கள்தான் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள். ‘எனக்குத் தெரியும் அது ஆண் குழந்தைதான் . சிவப்பாக இருக்கும்’ என்று, எல்லாம் தெரிந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் மற்ற பார்வையாளர்கள்தான் மீடியா . இனி அந்தக் குழந்தையை செலுத்தப் போகிற — மருத்துவமனைக்கும் வெளியே இருக்கிற – உலகம்தான் ரசிகர்கள் .
குழந்தை சிறப்பாக இருந்து விட்டால் எல்லோரும் அதற்கு உரிமை கொண்டாடுவார்கள் . ஆனால் சரி இல்லாமல் போனால் அம்மாவை மட்டுமே குறை சொல்வார்கள். இந்த நிலையில் முதல் படத்திலேயே தரமான இயக்குனர் என்று பெயர் வாங்கும் அறிமுக இயக்குனர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். “என்றார் .
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன் பேச்சில்
”மனிதக் குழந்தையாவது எப்படிப் பார்த்தாலும் அதிக பட்சம் பத்து மாசத்தில் பிறந்திடும் . ஆனா இந்த சினிமா க் குழந்தை பிறக்க சில சமயம் ரெண்டு வருஷம் மூணு வருஷம் கூட ஆகும். அதுக்கு மேலயும் ஆகும் . அப்போ அந்த குழந்தையை வயித்துலேயே வச்சிருக்கற வலி இருக்கே . அது ரொம்ப கொடுமை.
அதுமட்டுமல்ல.. பொதுவா குழந்தை எப்போ பிறக்கணும்னு என்பதை அம்மாவின் உடல்நிலை குழநதையின் வளர்ச்சியும் முடிவு செய்யும் . ஆனா சினிமா குழந்தை எப்போ பிறக்கும்னு டாக்டர்தான் முடிவு பண்ணுவாரு ” என்று பேசி அரங்கக் கலகலக்க வைத்தவர்,
தொடர்ந்து ” இந்த விருது நிகழ்ச்சி உண்மையிலேயே ரொம்ப சிறப்பான விஷயம். சில நிகழ்ச்சிகள் ல நமக்கு அவார்டு தர்றேன்னு சொல்லி கூப்பிட்டு ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே ட்ரில் கிளாஸ் மாதிரி நிக்க வச்சிருவாங்க . அப்போ எல்லாம ‘ஏண்டா இப்படி ஒரு அவார்டு வாங்கின படத்தை எடுத்தோம்’னு இருக்கும் .
ஆனா இங்க சஞ்சீவ் குப்தா மட்டும் பாராட்டப்படுகிறார் .
சித்தார்த், நான் , சுகாசினி, ஃபாராகான் , சிரஞ்சீவி சார் எல்லாரும் சஞ்சீவ் குப்தாவை மட்டுமே கவுரவிக்கிறோம். இந்த விழாவே அவருக்குதான் . இது ரொம்ப சிறப்பான விஷயம் ” என்றார் .
ஃபாரா கான் பேசும்போது
” இது உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சியான விழா. தன் குடும்பத்தில் நடந்த ஒரு சோக நிகழ்வை அறிமுக இயக்குனர்களுக்கான திருவிழாவாக மாற்றி இருக்கிறார் மாருதிராவ் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நான் பெருமையாக நினைக்கிறேன் .”
எல்லோரும் ஆங்கிலத்தில் பேசி இருக்க , கார்த்திக் சுப்புராஜ் தமிழில் ஆரம்பித்து ஆங்கிலம் கலந்து பேச….
47 நாட்கள் என்ற தமிழ்ப்படத்தின் மூலமே முதன் முதலாக ஹீரோவாக அறிமுகம் ஆன சிரஞ்சீவி 98 சதவீதம் சுத்தமான சுந்தரத் தெலுங்கிலும் , 2 சதவீதம் ஃபாராகானுக்காக ஆங்கிலத்திலும் பேசிய பேச்சில்
” சீனிவாஸ் நல்ல சினிமாக் கலைஞனாக சாதித்து இருக்க வேண்டியவர் . நானும் சுஹாசினியும் நடித்த பல படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் . நல்ல அறிவாளி . உழைப்பாளி .
‘தல’ அஜித் நடிக்க பிரேமா புஸ்தகம் என்ற படத்தை இயக்கி முடித்து ஆடியோ வெளியீடு வரை வந்தார் . படத்தின் பேட்ச் ஒர்க்குக்காக விசாகப் பட்டினம் கப்பலில் படப்பிடிப்பு நடத்தியபோது தவறி கடலில் விழுந்து மரணம் அடைந்தார் .
அவரது பெயரால் அவரது தந்தை மாருதி ராவ் வழங்கும் இந்த விருது மிக உயர்ந்த விருது” என்றார்
கொல்லப்புடி சீனிவாஸ் பற்றி திரையிடப்பட்ட ஆவணப் படம் நெகிழ வைத்தது. அந்த சகோதரனின் நல்ல சினிமாக் கனவுகள் நல்ல படைப்பாளிகள் மூலம் தொடர்ந்து நனவாகட்டும் !
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462