வாலு படத்தை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனம் கொடுத்த கடன் தொடர்பான வழக்கில் இரு தரப்பும் சமாதானம் செய்து கொண்டது.
அதே நேரம் பணக் கடன் தொடர்பான வேறு சில பிரச்னைகளும் வாலு படத்தை நறுக்கப் பார்த்தன .
இந்த நேரத்தில்தான் சிம்புவின் படத்தை வெளியிட விஜய் உதவி செய்யும் செய்தி வந்தது . சிம்பு தன்னை அஜித்தின் ரசிகராக தன்னை இயல்பிலும் சினிமாவிலும் அறிவித்துக் கொண்ட நிலையிலும் வாலு படத்தின் வெளியீட்டுக்கு விஜய் ஆதரவுக்கரம் நீட்டுவது குறிப்பிடத்தகுந்த விசயமாக பேசப்பட்டது
அதை அடுத்து புலி படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட விழாவில் கலந்து கொண்ட, சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் “என் மகன் சிம்பு அஜித்தின் ரசிகன் என்றாலும் , இப்போது சிம்பு நடித்த படத்துக்கு ஒரு சிக்கல் என்றதும் தானே உதவிக்கு வந்து வாலு படத்தை ரிலீஸ் செய்ய கை கொடுக்கிறார் விஜய் . காரணம் சிம்புவும் தமிழன். விஜய்யும் தமிழன். சிம்பு அஜித்துக்கு ரசிகன் என்றால் விஜய்க்கு தம்பி ” என்றார் .
இந்த நிலையில்தான் வாலு படம் வரும் பதினான்காம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது .
அதுபற்றிப் பேச பத்திரிக்கையாளரகளை சந்தித்த டி.ஆர்.” என் மகன் தல அஜித்தின் ரசிகன் என்று அறியப்பட்டவன்தான். ஆனாலும் சிம்புவுக்கு விஜய் உதவி செய்து இருக்கிறார் . சிம்பு யார் ரசிகன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் ஒரு காட்சி . அதில் ரயிலில் வரும் விஜய்யிடம் ஒருவர் ‘ நான் டி.டி.ஆர் ‘ என்று கூற பதிலுக்கு விஜய் ‘ எனக்கு டி.டி.ஆர் எல்லாம் தெரியாது. டி.ஆர் தான் தெரியும். நான் அவர் ரசிகன் ‘ என்று கூறுவார் .
அண்மையில் மலேசியாவில் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி நடத்திய இண்டர்நேஷனல் சூப்பார் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் நான் விஜய் பற்றி மனதாரப் பாராட்டிப் பேசிய பல விஷயங்கள் பலரையும் கவர்ந்தது . அந்த நிகழ்ச்சியில் நானும் விஜய்யின் தாயாரான ஷோபாம்மாவும் நடுவர்களாக இருந்தோம் . அங்கு இருந்த போது குடும்ப நண்பர்களாக பழகினோம் .
இந்த சூழலில் என் மகன் சிம்பு நடித்த வாலு படத்தை வெளியிட முடியாமல் நான் கஷ்டப்படுவதை உணர்ந்த விஜய் தனது பி ஆர்.ஓவும் புலி படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வக்குமாரையும் , விஜய்யின் படங்களை தொடர்ந்து வாங்கும் கோவை விநியோகஸ்தர் காஸ்மோஸ் சிவகுமாரையும் அனுப்பி எனக்கு உதவ சொன்னார் .
இது மட்டுமல்ல .. இனி தொடர்ந்து எனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக மற்ற பல படங்களையும் வாங்கி வெளியிடுவேன் . எல்லாவற்றுக்கும் முதல் கட்டமாக வாலு படம் வரும் 14 ஆம் தேதி தமிழகம் எங்கும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகமெங்கும் சுமார் ஆயிரம் திரையரங்குகளிலும் வெளிவருகிறது .” என்று முத்தாய்ப்பாகக் கூறி முடித்துக் கொண்டார் டி.ராஜேந்தர் .