ஆறு அத்தியாயம் @ விமர்சனம்

ஷங்கர்  வி தியாகராஜன் தயாரிப்பில்  , கேபிள் ஷங்கர், ஷங்கர் வி தியாகராஜன், அஜயன் பாலா , சுரேஷ்  EAV, லோகேஷ்,   ஸ்ரீதர் வெங்கடேசன் என்ற ஆறு இயக்குனர்கள், 

ஆளுக்கு ஒன்று என இயக்கிய  ஆறு குறும்படங்களின் தொகுப்பாக வந்திருக்கும் படம் ஆறு அத்தியாயம் . 

ஆபத்துக்களை தடுக்கும் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அதை கேள்விப்படும் போது அதை தானே செய்ததாக நம்பும் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ,(தமன் குமார்) , மன நல மருத்துவரை  (எஸ் எஸ் ஸ்டான்லி ) சந்திக்க வந்த பிறகு நடக்கும் நிகழ்வை சொல்லும் வகையில், 
 
 கேபிள் ஷங்கர் எழுதி  இயக்கியுள்ள குறும்படம் சூப்பர் ஹீரோ . (ஒளிப்பதிவு சி ஜே ராஜ்குமார், இசை பி சி சாம்  படத் தொகுப்பு விஜய் சங்கர் )
 
பாலியல் பலத்காரம் செய்து பெண்களைக் கொல்லும் ஒருவனை (பாப் சுரேஷ்) அவனால் அப்படி கொல்லப் பட்ட ஒரு  இளம்பெண்ணும் ( திவ்யா) ஒரு சிறுமியும் (பேபி சாதன்யா) எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதை சொல்லும் வகையில் , 
 
ஷங்கர்  வி தியாகராஜன் எழுதி  இயக்கி இருக்கும் படம் இனி தொடரும் . ( (ஒளிப்பதிவு சி ஜே ராஜ்குமார், இசை பி சி சாம்  படத் தொகுப்பு விஜய் சங்கர்  )
 
இனி தொடரும் படம்…

நண்பனையும் (பசங்க கிஷோர்) அவன் காதலிக்கும் பெண்ணையும் (மது  ஸ்ரீ)  அசிங்கப் படுத்தும் நண்பர்களுக்கு கிடைக்கும் அனுபவத்தை சொல்லும் வகையில், 

 
அஜயன் பாலா  எழுதி இயக்கிய மிசை (ஒளிப்பதீவு பொன் காசி ராஜன் , இசை ஜோஷுவா படத் தொகுப்பு பாலா )
 
ஊரோரமாக அக்கம் பக்கம் அதிக வீடுகள் இல்லாத இடத்தில் மாமா (கேபிள் ஷங்கர்) கட்டி இருக்கும் வீட்டுக்குப் போய்,  ‘பேயை’ப் (காயத்ரி) பார்த்த அனுபவத்தை  பெறும்  இளைஞனின் ( குளிர் சஞ்சீவ்) நிலை சொல்லும் வகையில், 
 
சுரேஷ் EAV எழுதி இயக்கி இருக்கும் படம்   அனாமிகா . (ஒளிப்பதிவு அருன் மொழி சோழன், இசை தாஜ்நூர் , படத் தொகுப்பு  மணி )
 
தன்னிடம் காதல் சொல்ல வந்த பெண்  மற்றும் அம்மா பார்த்த மணப் பெண் ( சந்திரிகா , சங்கீதா) இருவரையும் தன்னிடம் இருந்து பிரித்து விடும் ஓர் ஆவியால் பாதிக்கப்பட்டு , நம்பூதிரியை (பிரான்சிஸ் ) பார்க்க வந்த இளைஞன (விஷ்ணு) கண்டுபிடிக்கும் ‘ரகசியத்தை’ சொல்லும் வகையில் ,
 
   பேய்க் குறும்படங்கள் அடங்கிய  ஆ என்ற  படத்தை இயக்கிய இயக்குனர்களில் ஒருவரான  ஹரீஷின் (இன்னொருவர் ஹரி )  கதைக்கு ,
 
திரைக்கதை வசனம் எழுதி படத் தொகுப்பு செய்து லோகேஷ் இயக்கி இருக்கும் படம் சூப் பாய் சுப்பிரமணி (ஒளிப்பதிவு அருண் மணி பழனி ,  இசை  சதீஷ் குமார்))
 
சூப் பாய் சுப்பிரமணி…..

புகழ் பெற்ற ஓர்  ஓவியன் (வினோத் கிஷன்) ஒரு முக்கியமான ஓவியத்துக்காக கோகிலா என்ற  வரலாற்று உண்மைக் கதையில் இருந்து- அநியாயமாக கோரமாக இறந்து போன கோகிலா என்ற பெண்ணின் முகத்தை எடுத்து ஓவியம் வரையப் போக ,

 
ஓவியத்துக்கு கண் திறக்கும் வேளையில் நடக்கும் விபரீதங்களை சொல்லும் வகையில் ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதி இயக்கிய படம் சித்திரம்  கொல்லுதடி (ஒளிப்பதிவு மனோராஜா, இசை ஜோஸ் பிராங்க்ளின்  , படத்தொகுப்பு விஜய் ஆண்ட்ரூஸ் )
 
இந்த  ஆறு படங்களின் தொகுப்பே  ஆர் அத்தியாயம் . இப்படி தொகுப்பதை அந்தாலாஜி என்கிறார்கள் . 
 
ஒரு வகையில் இறையருட் செல்வர்  ஏ பி நாகராஜன் எழுதி இயக்க , நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் சாவித்திரி நடித்த திருவிளையாடல் படம்  கூட ஒரு அந்தாலாஜி படம்தான் .
 
ஆனால் அன்றைய ரசனையைக் கருத்தில் கொண்டு , ஒரே கதாபாத்திரங்களே எல்லா கதைகளிலும் வருவதோடு எல்லா கதைகளுக்கும் பொதுவாக ஓர் ஆரம்பம் மற்றும் முடிவு கொடுப்பார்கள் . ( ஏ பி என் இயக்கிய பல  படங்கள் அப்படியே )
 
பின்னர்  நேரடி அந்தாலஜியை ஹாரர் அந்தாலஜியாக  தங்களது ஆ  படம் மூலம் தமிழில் துவக்கி வைத்தார்கள் ஹரி ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் . 
 
சூப்பர் ஹீரோ…

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆறு குறும்படங்களை ஜஸ்ட் ஒரு  படமாக திரையிட்டார் . 

 
இந்த ஆறு அத்தியாயம் கூட ஹரி ஹரீஷ் இரட்டையர்கள் இயக்கிய ஆ போலவே ஒரு ஹாரர் அந்தாலாஜி படம்தான் . வித்தியாசம் என்ன என்றால் அதற்கான  பரிமாணத்தை இந்தப் படம் விரிவாக்கி இருக்கிறது . 
 
அதை விட முக்கிய சிறப்பு என்ன என்றால் , ஆறு படங்களையும் அடுத்தடுத்து முடித்து உதிரியாக்கி விடாமல் , ஆறு படங்களும் அடுத்து அடுத்து கிளைமாக்ஸ்க்கு முன்பு நிறுத்தி விட்டு அடுத்த படத்துக்குப் போய் விடுகிறார்கள் . கடைசியாக ஆறு கிளைமாக்ஸ்களையும் அடுத்துடுத்து சொல்கிறார்கள் . 
 
அதில் குழப்பமோ மறதியோ வராத அளவுக்கு இந்த குறும்படங்களும் , அவற்றை வரிசைப் படுத்திய விதமும்  ரசிகர்களை  கட்டிப் போடுகிறது பாருங்கள் . அங்கே ஜெயித்து இருக்கிறார்கள் இந்த படைப்பாளிகள் . சபாஷ் !
 
சூப்பர் ஹீரோ படத்தை  மிகவும் டைட்டான பிரேம்கள் சிறப்பாக வைத்து  எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் எடுத்து ஒரு இன்டலக்சுவலான முடிவில்  முடிக்கிறார் கேபிள் சங்கர் . தமன் நன்றாக நடித்து இருக்கிறார் .
 
பேய்ப்படம் என்றாலும் அதில் ஓர் அழகான சோஷியல் மெசேஜ் சொல்லி, ‘ சட்டம் மூலம்தான்  என்றில்லை பேய்கள் மூலமும் குற்றவாளிகளை மிரட்ட முடியும்’ என்று சொல்கிறார் இனி தொடரும் பட இயக்குனர் சங்கர் தியாகராஜன் .
 
மிசை ….

கதையை துவங்கும் விதம் அபாரம் . அது அப்படியே தொடர்கிறது . அடுத்து வரும் காட்சிகளுக்கு ஏற்ற பொருட்களை முன் கூட்டியே காட்டும் விதமும் அதன் மூலம் சில  சொல்லப் படாத கதைகளை விளக்கும் விதமும் சிறப்பு . 

 
பேபி  சாதன்யா சிறப்பாக நடித்துள்ளார் . 
 
பொறமை கொண்டு நண்பனின் காதலை கொச்சைப் படுத்தும் நண்பர்கள் பற்றிய  விழிப்புணர்ச்சிக்கும் அந்தக் குணம் உள்ள நண்பர்கள் பார்த்தால் கூட மனம் மாறும் அளவுக்கு அழுத்தமான படத்தைக் கொடுத்துள்ளார் அஜயன் பாலா .
 
இயல்பு வாழ்வில் நிறைய பார்க்க முடிகிற  விஷயம் என்பதால் கூடுதல் கவனம் பெறும் படம் இந்த மிசை  . நெகிழ்த்தும் கவிதை போன்ற முடிவு 
 
பொன் காசி ராஜனின் ஒளிப்பதிவு கதையின் உணர்வுக் கூட்டலுக்கு மிக்க பக்க பலமாய் இருந்துள்ளது .  தவிர மிக நேர்த்தியான ஒளிப்பதிவு கூட . பசங்க கிஷோர் சிறப்பாக நடித்துள்ளார். 
 
பெண் சபலத்தை பேயோடு சேர்த்துக் காட்டி கதற வைக்கிறார்  அனாமிகா இயக்குனர் சுரேஷ் EAV.  இயல்பான உரையாடலில் துவங்கி அது சுவையாகி, பிளாஷ் பேக்குக்குள் நுழைந்து , சபலம் , பேய் , மிரட்டல் என்று போகிறது படம் . நல்ல படமாக்கல் .
 
அனாமிகா …..

பெரும்பாலும் யூகிக்க முடியாத – வித்தியாசமான ஒரு முடிவை தந்து அடடே போட வைக்கிறார்  சுரேஷ் EAV.  நம்மளே மிஸ் பண்ணி விட்ட உணர்வு தரும் கிளைமாக்ஸ் .

 
 தாஜ் நூரின் இசையும் சிறப்பு ஒலிகளும்   கவனம்  ஈர்க்கின்றன . 
 
திடீர் என்று நாம் ஓர் அட்டகாசமான கலகலப்பான சுவாரஸ்யமான  கமர்ஷியல் சினிமா பார்த்துக் கொண்டு இருகிறோமோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது லோகேஷ்  இயக்கி இருக்கும் சூப் பாய் சுப்பிரமணி . 
 
இன்றைய வெகு ஜன சினிமாவின்  வெற்றிகர  ஃபார்முலாக்களான , காதல், காமெடி , பேய் மூன்றையுமே  ஒரு குறும்படத்தில் கொடுத்த விதம் அபாரம் என்றால் ஒவ்வொரு காட்சியையும் அவர் உருவாக்கி இருக்கும் விதம் சிறப்பு .
 
படத்தின் ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக –  பயனுள்ளதாக கையாண்டு இருக்கிறார்  ராஜேந்திரன் . 
 
ஹரீஷ் கொடுத்து இருக்கும் கதையின் கிளைமாக்ஸ்  கலகல லக லக . 
 
ஜஸ்ட் லைக் தட் ஒரு குபீர் சிரிப்பு முடிவு . 
 
இப்படி ஒரு அட்டகாசமான வசன காமெடி உள்ள படத்தை லட்டு மாதிரி ரசித்து சாப்பிடாமல் சொதப்பி நடித்து இருக்கும் நாயகன் விஷ்ணுவை என்ன சொல்லி திட்ட ?  முகம் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தால் போதுமா ? 
 
சித்திரம் கொல்லுதடி……..

அம்மா பார்த்த மனப் பெண்ணாக வரும் நடிகை  நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் . 

 
கொஞ்சம் முயன்றால் இதில் இருந்து ஒரு முழு நீள கலகல படமே உருவாக்கலாம் . சபாஷ் . 
ஆறிலும் பெஸ்ட் கதை என்றால் அது ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கி இருக்கும் சித்திரம் கொல்லுதடி படம்தான் . ஓவியம் , வரலாறு, அமானுஷ்யம் , நூல்கள்  செந்தமிழ் என்று பல பரிமாணங்களிலும் புகுந்து விளையாடி இருக்கிறார் . 
 
கதை .. கதைக்குள் கதை என்று உள்ளே போய் அப்புறம் முழுக்கை சட்டையை கழட்டிக் கொண்டு வருவது போல உருவிக் கொண்டு வரும் விதமும் அழகான திரைக்கதைக்கு அடையாளம் . 
 
சொல்லப் போனால் ஒரு முழு நீள திரைப்படத்தை மனிதர் குறும்படமாக  சுண்டக் காய்ச்சி இருக்கிறார் என்றே சொல்லலாம். அதனால் தரப்பட்டிருக்கும் வேகம் படத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது . 
 
இரவு நேரக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் மிக சிறப்பு . 
 
வினோத் கிஷன் சிறப்பான நடிப்பு . 
 
மனோ ராஜாவின் ஒளிப்பதிவு, ஜோஸ் பிராங்க்ளின் இசை , விஜய் ஆண்ட்ரூஸ் படத் தொகுப்பு மூன்றும் வெகு சிறப்பு . 
 
வரலாற்று ரெஃபரன்ஸ்களில் இயக்குனர் இன்னும் தெளிவாக இருந்து இருக்கலாம் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சோழ அரசன்  முதலாம்  ராஜேந்திர சோழன். ஆதி ராஜேந்திர சோழன் அல்ல . 
 
பொன்னியின் செல்வனில் வர்ணிக்கப்படும் ஏறி மதுராந்தகம் ஏரிஎன்று பெயரோடு சொல்லலாமே .
 
எனினும் சித்திரம் கொல்லுதடி அசத்தல் 
 
பொதுவாக எல்லா படங்களுக்குமே நடிகர் நடிகையர் தேர்வில் மட்டும் இன்னும் கவனமாக இருந்து இருக்கலாம் .
 அனாமிகா மிரட்டிய விதமும் சூப் பாய் சுப்பிரமணி ஜன ரஞ்சகப் படுத்திய விதமும் சித்திரம் கொல்லுதடி விழிகளை விரிய வைத்த விதமும் 
 

ஆறு அத்தியாயம் படத்தை ஒரு அட்டகாசமான முழு நீள  திரில்லர் படத்தின் தன்மைக்கு உயர்த்துகின்றன . 

 
அதேநேரம் இந்த வித்தியாசமான முயற்சியின் மூலம் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டார்கள் இந்த படைப்பாளிகள் !
 
ஆறு அத்தியாயம் …. அசத்தல் அத்தியாயங்கள் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *