தம்பி தெய்வா மீடியாஸ் நிறுவனம் சார்பில் சொ.சிவகுமார் பிள்ளை தயாரிக்க, ராபர்ட், கார்த்திக், சரவணன், சிரஞ்சீவி ஆகிய நான்கு புதுமுகங்கள் கதையின் நாயகனாக நடிக்க,
இவர்களுடன் ‘சேதுபதி’ ஜெயச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க , கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ஸ்ரீரஞ்சன் இயக்கியிருக்கும் படம் . ஆடவர் .
படத்திற்கு சீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார். ரமேஷ் கமல் நடனம் அமைத்துள்ளார்.
சுனாமி குறித்து ஆய்வு செய்வதற்காக வரும் நான்கு இளைஞர்களும், அதன் மூலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும்,
அதில் இருந்து மீண்டு தங்களின் ஆய்வில் வெற்றி பெற்றார்களா இல்லையா, என்பதுதான் இந்த ஆடவர் படத்தின் கதை.
‘ஆடவர்’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்ற வகையில் படத்தில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே நடித்துள்ளனர். ஒரு காட்சியில் அல்ல,

ஒரு ஃபிரேமில் கூட பெண்கள் இடம் பெறாதது இப்படத்தின் தனிச் சிறப்பு மட்டும் இன்றி, முதல் முயற்சியும் கூட.
தவிர மாஸ்டர் கிரண் என்ற 10 வயது சிறுவன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனை கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறதாம்.
கேரள அரசின் விருது பெற்ற தஷி இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. . எப்படி பெண் கதாபாத்திரம் இல்லாமல்,
வித்தியாசமான முறையில் படத்தை படமாக்கியிருக்கிறார்களோ அதேபோல், பாடல்கள் வெளியீட்டு விழாவையும் வித்தியாசமான முறையில் நடத்தியிருக்கிறார்கள் ‘ஆடவர்’ குழுவினர்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்,
எஸ்.ஆர்.எம்-ன் சிவாஜி திரைப்படக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சுப்பையா பாரதி, டாக்டர் ஏ.சுப்பிரணியம்
மற்றும் துறைத்தலைவர் ஆர்.டி.பாலாஜி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். ஒரு திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவில்,
திரைப்படக் கல்லூரி மாணவர்களும், அத்துறையின் பேராசிரியர்களும் பங்கேற்றது இது தான் முதல் முறையாகும்.
தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ் அமுதன் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சிவாஜி திரைப்படக் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்த ,
இந்த பாடல்கள் வெளியீட்டு விழாவில், கானா உலநாதனும், டியாலோ கோபுவும் படத்தின் பாடல்களை நேரடியாக பாடினார்கள்.
படத்தில் வரும் “அழகா இருக்கு சென்னை மச்சான்…” என்று தொடங்கும் பாடல் சென்னையின் பெருமைகளைப் பேசுவதுடன்,
சென்னையில் ஏழை பணக்காரன், ஜாதி மதம் பேதமின்றி மக்கள் வாழ்வதையும் சொல்கிறது . கானா உலகநாதன் பாடியிருக்கிறார்.

“வீசுடா மச்சான்…வீட்டுக்கு நல்லது…” என்று தொடங்கும் பாடல், மதுவுக்கு எதிரானதாகவும், மது பழக்கத்தில் அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலையும் கானா உலகநாதன் பாட, மற்றொரு பாடலை டியாலோ கோபு பாடியிருக்கிறார். இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் சொ.சிவகுமார் பிள்ளை மற்றும் கலைவேந்தன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.