ஆறாது சினம் @ விமர்சனம்

aara 7

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்க, அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் , ராதா ரவி ஆகியோர் நடிக்க அறிவழகன் இயக்கி இருக்கும் படம் ஆறாது சினம் .

சினம் கனமா ? இல்லை ரணமா ? பார்க்கலாம் .

பிரபல ரவுடி ஒருவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள களம் இறங்குகிறார் காவல் துறை அதிகாரி அரவிந்த் (அருள்நிதி) . செயலாக்கத்தில் எதிர்பாராதவிதமாக ரவுடியின் மனைவி கொல்லப்படுகிறார்.
ரவுடியை சுட முயலும்போது காவல்துறை ஆணையரின்  போன் அதை தடுத்து விடுகிறது .
 சிறைக்குப் போய் வெளியே வரும் ரவுடி என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் கண் முன்னாலேயே அவரை விட்டு விட்டு,
 aara 1
மதங்களைக் கடந்த அவரது காதல் மனைவி மியா (ஐஸ்வர்யா  ராஜேஷ் ) அன்பு மகள் இருவரையும் சுட்டுத் தள்ளுகிறான் .
காரணம்? ”உன்னை சுட்டுட்டா நீ செத்துருவ . அது உனக்கு வலி இல்ல . என் மனைவியை என் கண் முன்னால்  நீ கொன்ன நொடியில் இருந்து நான் அனுபவிக்கும் வலியை இனி நீ அனுபவிக்கணும்டா” என்கிற லாஜிக் .
காதல் மனைவியையும் மகளையும் இழந்த கொடுமையில் இருந்து தாங்க முடியாத வேதனை , ரவுடியை அன்றே சுட்டுக் கொன்று இருந்தால் தனது மனைவி மகள் செத்திருக்க மாட்டார்கள் என்ற கோபம்,
 இவற்றால் ஆறாத சினம் கொள்ளும் அரவிந்த், போலீஸ் வேலையை துறந்து முழு நேர குடிகாரனாக  ஆகிறார் . 
aara 9
அப்பா இல்லாத நிலையில் அரவிந்தால் படிக்க வைக்கப்பட்டு ஆளாக்கப்பட்ட தம்பியும் அரவிந்தை புறக்கணித்து விட்டு சொத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு ,
தனக்கு பிடித்த பெண்ணை தன்  இஷ்டப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பிரிந்து போகிறார் . 
இதற்கிடையில் மனைவியோடு அன்பாக இருக்கும் சில கணவர்கள் பல்வேறு ஊர்களில் கொல்லப்படுகிறார்கள். அதை விசாரிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி சற்குணம் (ரோபோ ஷங்கர் ) பயங்கரமாக சொதப்புகிறார்.
அரவிந்தின் திறமை மீது நம்பிக்கையும் அவன் மீண்டு வரவேண்டும் என்ற அக்கறையும் கொண்ட காவல்துறை இணை ஆணையர் செங்கோடன் (‘டத்தோ’ ராதாரவி) அரவிந்தை சந்தித்து மனதை மாற்றி,
 அவரிடம்  வழக்கை  ஒப்படைக்கிறார் 
 செய்யப்படும் கொலைகள் எல்லாம்,  சம்மந்தப்பட்டவர்களின் மனைவிமார்களை வாழ்க்கை முழுக்க தீரா வலியில் ஆழ்த்தி அவர்களைப் பழிவாங்கவே செய்யப்படுகிறது என்பதை அரவிந்த் கண்டு பிடிக்கிறார் .
aara 2
அது மட்டுமல்ல , தொடரும் கொலைகாரனின் குறியில்  வரும் அடுத்த நபர் யார் என்ற விஷயம் அவரை மேலும் அதிர வைக்க , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த ஆறாது சினம் 
பாபநாசம் இயக்குனரான ஜித்து ஜோசப் மலையாளத்தில் இயக்கிய மெமரீஸ் என்ற படத்தின் மறு உருவாக்கமே இந்த ஆறாது சினம் .  
மூலப் படத்தின் ஆன்மா கெடாமல் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன் . 
அது மட்டுமல்ல .. மனைவி , மகளை இழந்த  அரவிந்தின் தொடர் துயரை காட்சிப் படுத்தி இருக்கும் விதத்தில் அறிவழகன்  நெகிழ வைக்கிறார்
கொலைகளுக்குக் காரணமாக அந்த ஃபிளாஷ்பேக் எடுக்கப்பட்டு இருக்கும் விதமும் மிக சிறப்பாக இருக்கிறது .
aara 6
அருள்நிதி , ஐஸ்வர்யா (திருமணக் காட்சி),  மற்றும் அந்தக் குழந்தை ஆகியோரை இயக்குனர் பயன்படுத்தி இருக்கும் விதமும் சிறப்பு . 
தமனின்  இசையில் ‘தனிமையே..’ பாடலின் மெட்டு , அந்த ஹம்மிங் , பின்னணி இசையில் அதை பயன்படுத்தி இருக்கும் விதம் எல்லாம் இனிமையாக இருப்பதோடு சரியான சமயங்களில் உள்ளத்தை உருக்கவும் செய்கிறது . 
போலீஸ் அதிகாரி அரவிந்த் கதாபாத்திரத்தை மிக அழகாக உள்வாங்கி உணர்வுப் பூர்வமாக லயித்து நடித்துள்ளார் அருள்நிதி . குரல் நடிப்பும் கதாபாத்திரத்துக்கு துணை நிற்கிறது .
ஐஸ்வர்யா ராஜேசுக்கு வாய்ப்பு கம்மி . ஏனோ தெரியவில்லை மேலோட்டமாகவே நடித்து உள்ளார் . எனினும் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அருமை.
aara 5
இந்த இருவர் காம்பினேஷனுக்கு இப்படி ஒரு குழந்தையா என்று வியக்கும் அளவுக்கு, மிக மிக  அழகாக இருக்கிறது அந்தக் குழந்தை .
டத்தோ ராதா ரவி,   சார்லி ஆகியோர் கேரக்டருக்கு தேவையானதை செய்து இருக்கிறார்கள் .
வில்லன் சந்தோஷாக வரும் இயக்குனர் கவுரவ் கடைசி சில காட்சிகளில் மட்டும் முகம் காட்டினாலும் சபாஷ்  
சற்குணம் கேரக்டர் சொதப்புகிறது என்பது திரைக்கதைப்படி  ஒகே . அதற்காக ரோபோ ஷங்கர் அதை நடித்து இருக்கும் விதத்திலும் சொதப்ப வேண்டுமா என்ன ?
சம்மந்தம் இல்லாமல் எதையாவது மைன்ட் வாய்சில் போட்டு நிரப்புவதை நிறுத்தி விட்டு காட்சியின் தன்மைக்கு ஏற்ப பேசினால் நன்றாக இருக்கும் .
aara 3
மெமரீஸ் படம் என்ற  மலையாளக் கண்ணாடியைக் கழட்டி விட்டுப் பார்த்தல் , நம்ம ஊர் ராஜேஷ்குமார் பாக்கெட் நாவலில் இதே  பாணியிலான ஆனால் இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார் . 
கணவன்மார்களைக்  கொன்று,  அதன் மூலம் தான் பழிவாங்க வேண்டிய பெண்களின் வாழ்வை நிர்மூலம் ஆக்குவதுதான் வில்லனின் எண்ணம் . அதுதான் கதையின் அடி நாதம் . 
ஆனால் அப்படிப் பழிவாங்கப் பட வேண்டிய பெண்களின் நடத்தை , குணம் எல்லாம்,  புருஷன் இறந்த பதினாறாம் நாளே  கரும காரியம் கூட செய்யாமல்,
 அடுத்த கல்யாணம் பண்ணிக் கொள்கிறவர்களின்  நடவடிக்கை போலவே இருக்கிறது . 
aara 4
‘உண்மையில் அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள்தான் .. வில்லன்தான் தப்பாக நினைத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை அநியாயமாக அழிக்கிறான்’ என்று திரைக்கதைப் போக்கு இருந்தால்,  
படம் பார்க்கும் ரசிகனுக்கு இன்னும் பதட்டமும் அக்கறையும் ஏற்பட்டு இருக்கும் . 
இயேசு நாதர் பற்றிய அரோமா மொழி பற்றிய அந்த விசயத்தை இன்னும் விளக்கமாக சொல்லி இருக்கலாம் . 
அதே போல அரவிந்தை விட்டுப் பிரிந்து பிரிந்து போன தம்பி பற்றிய காட்சிகளில் கடைசியில் நிறைவு இல்லை . 
எனினும் என்ன …
அறிவழகன், அருள்நிதி,  தமன் மூவரும் படத்தை அட்டகாசமாகத் தூக்கிப் பிடிக்கிறார்கள் .
ஆறாது சினம் … அன்பின் கனம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →