
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் தயாரிக்க,
கலையரசன் , ஜனனி அய்யர், ஷிவதா , ஆகியோர் நடிப்பில் உருவாகும் படம் அதே கண்கள் .
பல அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வளர வைக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்திலும் ரோகின் வெங்கடேசன் என்ற புது இயக்குனரையே அறிமுகப்படுத்துகிறது .
இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் உதவியாளராகப் பணியாற்றியவர் இந்த ரோகின் வெங்கடேசன்.
ரெஸ்டாரன்ட் நடத்தி வரும் சமையல் கலைஞன் வருண், அவனது நீண்ட கால தோழியும் பத்திரிகையாளருமான சாதனா அவனை விரும்புவதோடு, வருணின் பெற்றோரையும் சந்தித்து தனது ஆசையை சொல்கிறாள் .
அதே சமயம் துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபா என்ற பெண்ணை சந்தித்த வருண் அவள் மீது காதல் கொள்கிறான் . அவளும் அவனை காதலிக்கிறாள் .
இந்த மூன்று பேரும் தங்கள் கல்யாணக் கனவை நோக்கி நகர, நடக்கும் அசாதாரண நிகழ்வுகள் அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதுதான் படத்தின் கதையாம் .
பத்திரிக்கையாளராக ஜனனி அய்யர் . துணிக்கடை அழகுப் பொம்மையாக ஷிவதா .
“தோழி காதலியாவதும் காதலி கடைசியில் தோழியாவதும்தான் கதையா ?” என்று இயக்குனரிடம் கேட்டேன் .
“பெண் தோழிக்கும் காதலிக்கும் மெல்லிய கோடுதானே வித்தியாசம் (அப்படியா சார் ? இந்தத் தம்பியோட பெண் தோழிகள் எதுக்கும் நாலடி தள்ளி நின்னே பேசவும்)
ஆனால் அது கதையல்ல . ஆணுக்கும் பெண்ணுக்குமான புரிதல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ” என்கிறார் .
”அதே கண்கள் என்பது ஒரு புகழ் பெற்ற பழைய படமாச்சே ?”
”இந்தக் கதையில் கண்ணில்லாத கதாபாத்திரம் முக்கியப் பங்கு வகிப்பதால் அந்தப் பெயர் வைத்தேன் ”
இந்த அதே கண்கள் படத்தில் ‘ஊமை விழிகள்’ இயக்குனர் அரவிந்தராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது ஒரு அழகான கோஇன்சிடன்ட்!
கன்யானிகுமரி , ஈரோடு பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இப்போது இறுதிக் கட்ட வேலைகளில் பிசியாக இருக்கிறது .