வி ஆர் இன்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் வி.ரவி தயாரித்து நாயகனாக நடிக்க,
ரித்திகா, செவ்வாழை, ராஜ சிம்மன் ஆகியோர் நடிப்பில், வி.சுரேஷ் நட்சத்திரா என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஏகனாபுரம் .
இது ரசனைபுரமா ? விசனபுரமா ? பார்க்கலாம்
பின் தங்கிய கிராமம் ஒன்றில் நல்லது கெட்டதுகளுக்கு பறையடிக்கும் தொழில் செய்கிற இளைஞனுக்கும் (வி. ரவி)
ஊர் ஊராகச் சென்று வாத்துக் கிடை போட்டு பிழைக்கும் நாடோடி குடும்பத்தில் பிறந்து, அம்மா இறந்த நிலையில் சித்தி மற்றும் அப்பாவோடு வாழ்ந்தபடி ,
மேற்படி கிராமத்துக்கு வந்து கிடை போட்டு வாத்து மேய்க்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் ( ரித்திகா) காதல் .
வாத்து முட்டை வியாபாரியான ஒரு காமுகன்(ராஜ சிம்மன்) , சித்திக்கு பண உதவி செய்வதன் மூலம் நாயகியை ஆசை நாயகியாக்கிக் கொள்ள முயல்கிறான் .
நாயகனின் சிறு வயதில், அவனது அம்மாவுக்கும் ஒரு ஆணவம் கொண்ட பணக்காரப் பெண்ணுக்கும் நடந்த சண்டை கைகலப்பாக ,
பணக்காரப் பெண்ணின் மகளான சிறுமி நாயகியின் அம்மாவை அடிக்க , பதிலுக்கு அந்த சிறுமியை இவன் அடித்த அடி, அவளது பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது .
அதனால் வளர்ந்த பின்பு அவள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . கணவன் விட்டு விட்டுப் போய்விடுகிறான் .
இப்போது ஊரிலேயே வசதியான பெண்ணாக இருக்கும் அவள், நாயகன் சந்தோஷமாக இல்லற வாழ்வை அனுபவிக்க விட மாட்டேன் என்று சபதம் போட்டு செயல்படுகிறாள் .
இந்த பலமான வில்லன் வில்லிகளுக்கு இடையே சிக்கிய இந்த ஏழை எளிய காதல் என்ன ஆனது என்பதே இந்தப் படம்
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் எளிமை . கிராமத்துக்குள் வாழும் உணர்வை தரும் படமாக்க்கல் .
எந்த பயமோ அழுததமோ கமர்ஷியல் குறித்த திட்டமோ இல்லாமல் நினைத்ததை நினைத்தபடி எடுத்துள்ளார்கள்.
அதனாலேயே கத்துக் குட்டித்தனங்களையும் மீறி சில கவிதைகளையும் அங்கங்கே பார்க்க முடிகிறது .
மதிய நேர சீரியல் நடிகை மாதிரி செயற்கையாக நடித்துள்ள அந்த வில்லியை தவிர மற்ற எல்லாருமே இயல்பாக இருக்கின்றனர் . நடிக நடிகையர் தேர்வில் ஜொலிக்கிறார் இயக்குனர் .
அதே நேரம் செயற்கையான வசனங்கள் , படு செயற்கையான திருப்பங்கள் , அடுத்து என்ன நடக்கும் என்பதை சுலபமாக உணரத்தும் காட்சிகள் எல்லாம் படத்தை பலவீனமாக்குகின்றன .
கிளைமாக்சில் என்ன நடக்கும் என்பதை முன்பே ஒரு காட்சியில் சொல்லி அதையே கிளைமாக்சாக காட்டுவதோடு , முன்னையே சொன்னம்ல என்று அதை போட்டு வேறு காட்டுவது சிறுபிள்ளைத்தனம் .
இதெல்லாம் அந்தக் கால சிறுகதை பாணி .
ஏகனாபுரம் … ஆளில்லா ஊர்





