கார்த்திக் நரேன், நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட்., மற்றும் வீனஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் கணேஷ் ஆகியோர் தயாரிக்க .
ரகுமான், அஸ்வின், பிரகாஷ் , டெல்லி கணேஷ் , சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார் மற்றும் பலர். நடிப்பில்
அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கி இருக்கும் படம் துருவங்கள் பதினாறு. இந்த துருவங்கள் வெற்றியில் மையம் கொள்ளுமா ? பார்க்கலாம் .
மனைவியை இழந்த போலீஸ் அதிகாரி தீபக் (ரகுமான்) அதில் இருந்து மீண்டு , கோவையில் மீண்டும் பணியில் இணைகிறார் .
அவரது ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் , ஒரு காரும் அதன் அருகில் சுடப்பட்டு கையில் துப்பாக்கி இருக்கும் பிணமும் இருப்பது தெரிய வருகிறது. அது குறித்த விசாரணையில் இறங்குகிறார் .
அது போலவே , மூன்று நண்பர்கள் குடித்து விட்டு காரில் வரும்போது எதிரில் வந்த ஓர் ஆளை அடித்து வீழ்த்தி உயிர் போன நிலையில் அந்த பிணத்தை காரில் ஏற்றிக் கொண்டு போகையில்
போக்குவரத்து போலீசையும் அடித்து வீழ்த்தி விட்டுப் போக, அதுவும் அவர் கவனத்துக்கு வருகிறது . கவுதம் என்ற ஒரு புதிய இளம் காவலரின் உதவியோடு விசாரணையில் இறங்குகிறார் .
இளைஞர்கள் , இளம் பெண்கள் , காதல் , நட்பு , ஈவ் டீசிங் , வஞ்சம் , லஞ்சம் , பிளாக் மெயில், பொய், பித்தலாட்டம் , பழி வாங்குதல் , குயுக்தி என்று
குற்றங்களின் அத்தனை திசையிலும் அமையும் நிகழ்வுகள் ஒரு நிலையில் அந்த போலீஸ் அதிகாரியையே மையம் கொள்கிறது . அப்புறம் என்ன என்பதே இந்தப் படம் .
மலையாளத்தில் வந்த லேகாயுட மரணம் ஒரு பிளாஷ் பேக், சி பி ஐ டைரி குறிப்பு ஆகிய படங்களின் பாணியிலான படம் இது . ஆனால் படமாக்கலில் அசத்தி இருக்கிறார்கள்
படம் துவங்கிய முதல் ஷாட்டில் கொட்டும் மழையில் கார் ஒன்று வந்து நிற்கும் . அந்த முதல் காட்சியே உணர்த்தி விடுகிறது இது வழக்கமான படம் இல்லை என்பதை .
அந்த அளவுக்கு மேக்கிங்கில் விழிகளை விரிய வைத்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் .
பொதுவாக படத்தில் ஒரு புது கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தும்போது அந்த கேரக்டரின் முகத்தை காட்டுவது எல்லாரும் பின்பற்றும் வழக்கம் . அந்த தியரியை அடித்து உடைத்து இருக்கிறார் இயக்குனர் .
அறிமுகம் ஆகும் கதாபாத்திரங்கள் முதுகு காட்டியே போய் வருகிறது . எங்கே தவிர்க்க முடியாத நிலை வருகிறதோ அங்குதான் முகம் காட்டப்படுகிறது .
தவிர பல கதாபாத்திரங்களின் முதுகு பகுதியை காட்டி காட்சிகளை நகர்த்துவதை ஒரு பாணியாகவே செய்து இருக்கிறார் . சஸ்பென்ஸ் திகில் படத்துக்கு அது அவ்வளவு அழகாக பொருந்துகிறது .
காட்சிகளை ஷாட்களாக பிரித்த விதம் , ஒவ்வொரு ஷாட்டிலும் பல கூட்டு நிகழ்வுகளை நிகழ்த்தும் விதம் இவையும் இயக்குனரை வியந்து பார்க்க வைக்கிறது .
சின்னச் சின்ன விசயங்களைக் கூட ஜஸ்ட் லைக் தட் பிரித்துப் போட்டுக் காட்டி பின்னர் வரிசைக்கிரமமாக விளக்கும் விதம், அப்நார்மலாக ஒரு காட்சி காட்டி பின்னர் அதை சரியாக பொருத்துவது ,
துளி கூட சிதறாத லாஜிக் என்று மிக பிரில்லியன்ட் ஆன திரைக்கதை பண்ணி இருக்கிறார் . (இது போன்ற வகை திரைக்கதையில் எடிட்டரின் பணி ரொம்ப முக்கியம் அதை சிறப்பாக செய்து இருக்கிறார் ஸ்ரீஜித் சாரங் )
கார்த்திக் நரேனின் இன்டலக்சுவல் வசனங்கள் இன்னொரு ரசனை விருந்து
படத்தின் மிகப் பெரிய பலம் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு . படத்தை வேறு தளத்துக்கு கொண்டு போவதில் ஒளிப்பதிவு மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது .
இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் எப்படிப்பட்ட புரிதல் இருந்தால் இது சாத்தியப் பட்டு இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை .
இப்படி அட்டகாசமாக வந்த எடுக்கப்பட்ட படத்தை தனது பின்னணி இசையின் மூலம் பிரம்மாண்ட பிரம்மாதப்படுத்துகிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்.
ஒரு படத்துக்கு இயக்குனர் , ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர் கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் அற்புத உதாரணம் .
தீபக் கேரக்டரில் மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறார் ரகுமான் . எத்தனை பேர் இருந்தாலும் எல்லா காட்சிகளிலும் கேமரா இவரை மையப்படுத்தியே இயங்கும் விதம்,
ஒரு புதுமை என்பது மட்டுமல்ல , ஒரு நடிகருக்கு வரப்பிரசாதமாக அமையும் பாணி இது . அதில் மிக சிறப்பாக நடித்துப் பயன்படுத்தி இருக்கிறார் ரகுமான் .
மற்ற நடிக நடிகையரும் குறையில்லாமல் நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர் .
ஆனால் இவ்வளவு சிறப்பு உள்ள இந்தப் படத்தின் அடிப்படைக் கதை அதாவது கன்டன்ட், கனமானதாக அழுத்தமாக இல்லாதது ஒரு குறையே .
அப்படி இருந்திருந்தால் இது தமிழ் சினிமாவை கலக்கும் படமாக வந்து இருக்கும் .
ரகுமான நன்றாக நடித்துள்ளார் எனினும் , இன்னும் கொஞ்சம் பிரபலமான ஒரு தமிழ் ஹீரோ இந்தப் படத்துக்குக் கிடைத்து இருந்தால் அது கூட ஒரு சாதகமான விசயமாக இருந்திருக்கும்
எனினும் நிச்சயமாக மேக்கிங்கில் இந்தப் படம் ஓர் அற்புதம் .
திரைக்கதை இயக்கம் மற்றும் தொழில் நுட்பத் துறைகள் சம்மந்தப்பட்ட விசயத்தில் திரைப்படக் கல்வியில் பாடமாக இந்தப் படத்தை வைக்கலாம் .
சினிமா ஆர்வம் உள்ளவர்கள் , மாற்று சினிமா ரசிகர்கள் , திரைப்படக் கலைஞர்கள் கொண்டாடும்ம் படமாக இது இருக்கும் . எந்த அவார்டுக்கு அனுப்பினாலும் தொழில்நுட்ப ரீதியாக விருது பெற்று வர வாய்ப்புள்ள படம் இது .







