சவுந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு தயாரிக்க, ஜான் விஜய் , சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர், ரவீணா நடிப்பில் எஸ் சுரேஷ் குமார் இயக்கி இருக்கும் படம் அகடு . அகடு என்றால் பொல்லாங்கு , தீமை என்று பொருள் .
ஒரு டாக்டர் தம்பதி (விஜய் ஆனந்த் – அஞ்சலி நாயர்)) தனது மகளோடு (ரவீணா)) கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார்கள் . ஐ டி வேலையில் அலுப்படைந்த ஒருவன் தன் நண்பர்கள் மூவரோடு வருகிறான் .
டாக்டர் குடும்பமும் நண்பர்களும் (ஸ்ரீராம் கார்த்திக், சித்தார்த் மற்றும் இருவர் ) ஒரே ஹோட்டலில் தங்குகின்றனர் . நண்பர்கள் ஒருவனிடம் கேமரா இருக்க, போட்டோகிராபியில் ஆர்வம் உள்ள டாக்டர் தம்பதியின் மகள் அவனிடம் பழகுகிறாள் .
உதவி மூலம் நட்பு வளர்ந்து ஆண் டாக்டர் , இளைஞர்களுடன் சேர்ந்து தண்ணி அடிக்கிறார் . மறுநாள் கேமரா வைத்திருந்த இளைஞன், டாக்டர் தம்பதியின் மகள் இருவரையும் காணவில்லை.
அந்த இளைஞன் சிறுமியைக் கடத்திக் கொண்டு போய் விட்டான் என்று டாக்டர் தம்பதி புகார் கொடுக்க, எப்போதும் கேரட் மண்டும் ஒரு இன்ஸ்பெக்டர் (ஜான் விஜய் ) அதை விசாரிக்க, இடையில் கஞ்சா விற்பது , வழிப்பறி செய்வது ஆகியவற்றை செய்யும் சில நபர்கள், இறுக்கமான ஒரு பாரஸ்ட் ஆபீசர் கதாபாத்திரங்கள் வர , நடந்தது என்ன என்பதே இந்த அகடு .
கொடைக்கானல் லொக்கேஷன், சாம்ராட்டின் உறுத்தாத ஒளிப்பதிவு , தியாகுவின் நல்ல படத் தொகுப்பு, மெட்ரோ இசையமைப்பாளர் ஜான் சிவ நேசனின் குறிப்பிடத்தக்க இசை , பால குமார் ரேவதி ஆண்டோ நடன இயக்கத்தில் ஓர் ரசனையான பாடல், (ஆட்டக்காரப் பெண் அழகு மற்றும் உற்சாக நடனம் ) இவற்றின் துணையோடு,
எளிய கதைக்கு இயல்பான திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கும் சுரேஷ்குமார் , கிளைமாக்ஸ் நேரத்தில் ஓர் எதிர்பாராத கதை சொல்லி அசத்துகிறார் .
பாரஸ்ட் ஆபீசர் காட்சிகள், கஞ்சா வழிப்பறி இளைஞர்கள் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க யூகிக்கும்படி இருப்பது ஒரு குறை எனினும் கடைசி காட்சிகள் பாராட்டுப் பெறுகின்றன .
படம் முழுக்க இன்னும் சிரத்தையான திரைக்கதை அமைத்து, இன்னும் சிறப்பான பொருத்தமான நடிப்பை வாங்கி இருந்தால் படம் இன்னும் மிக சிறப்பாக வந்திருக்கும்.
என்றாலும் அகடு … கசடு இல்லை