
இயக்குனர் மிஷ்கின் கதை எழுதி, தனது ‘லோன் உல்ஃப் புரொடக்ஷன்’ சார்பில் தயாரிக்க,
இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,
ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சவரக்கத்தி
முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவெடுத்து இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் எனப்படும் சிறு முன்னோட்ட வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக,
இயக்குனர் கே பாக்கியராஜ், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், நடிகர் நாசர், இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் சசி,
நடிகர் பிரசன்னா, செல்வா, எஸ் வி ஆர், தமிழச்சி தங்கப்பாண்டியன், மருது, நந்த கோபால், வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர் ரகுநந்தன், பா வா செல்லதுரை
மற்றும் ‘சவரக்த்தி’ படக்குழுவினரான தயாரிப்பாளர் – எழுத்தாளர் மிஷ்கின், இயக்குனர் ஜி ஆர் ஆதித்யா, ராம் – பூர்ணா, ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் அரொல் கொரெலி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
“ஞானத் திமிர் தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம்.
அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலைஞன் மிஷ்கின். அவருடைய படங்கள் யாவும் நம் மனதில் ஆழமாகப் பதியுமாறு தான் இருக்கும்.
அந்த வகையில் ‘சவரக்கத்தி’ திரைப்படமும் மிஷ்கினின் அடுத்த ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்.
” என்றார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.
“பொதுவாகவே மக்கள் இரண்டு இடங்களில் உலக அரசியல் பற்றியும், செய்திகள் பற்றியும் காரசாரமாக விவாதிப்பார்கள். ஒன்று ஐ நா சபை, மற்றொன்று முடி திருத்தகம்.
இப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதை களம் எப்படி மிஷ்கினின் சிந்தனையில் உதயமானது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது.
இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் இரண்டு இயக்குனர் சிகரங்களை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கி இருக்கும் ஜி ஆர் ஆதித்யா அவர்களுக்கும்,
ஒட்டுமொத்த ‘சவரக்கத்தி’ படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்’ என்றார் இயக்குனர் கே பாக்யராஜ்.
“நான் என்னுடைய சிறு வயதில் பார்த்த ‘பிச்சை’ என்னும் சிகை அலங்கார கலைஞரின் வாழ்க்கைக் கதை தான் இந்த சவரக் கத்தி .
இந்த படத்தில் நடித்த ராம் மற்றும் பூர்ணா ஆகிய இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கின்றனர்.
என்னை பொறுத்த வரை தமிழ் சினிமாவில் அழகான ஆண் யார் என்று கேட்டால் அது ராம் என்று தான் சொல்வேன்….
அதேபோல், கேரளாவில் இருந்து உதயமான கதாநாயகிகளில், தன்னுடைய குரலுக்கு தானே தமிழில் டப்பிங் செய்த முதல் கதாநாயகி பூர்ணா.
அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முதல் முறையாக ஒரு நகைச்சுவை கதையை நான் எழுதி இருக்கிறேன்.
நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் திரைப்படமாக எங்களின் ‘சவரக்கத்தி’ திரைப்படம் இருக்கும்.” என்றார் மிஷ்கின் .