அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் எம் கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், இயக்குனர் வசந்த பாலன் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், பரணி, காளி வெங்கட் நடிப்பில் வசந்தபாலன் இயக்கி இருக்கும் படம்.
சிறுவனாக இருந்த போது தான் ஆசைப்பட்ட சாக்லேட்டை தனக்கு வாங்கித் தர முயன்ற அப்பாவுக்கு (காளி வெங்கட்) ஏற்பட்ட அவமானம் மற்றும் அது தொடர்பான சம்பவங்களால் மனசு பாதிக்கப்பட்ட நிலையில் வளர்ந்து ஆளாகி , இப்போது ஆன்லைன் உணவு டெலிவரி பாயாக இருக்கும் இளைஞன் ஒருவன் ( அர்ஜுன் தாஸ்) . அவமரியாதை செய்பவர்களை எல்லாம் கொலை செய்யும் எண்ணம் அவனுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்கள் சில பலர் அவனை மரியாதை இன்றி நடத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாத அவனுக்கு, தான் அடிக்கடி டெலிவரிக்கு போகும் ஒரு வீட்டில் இருக்கும் வேலைக்கார இளம்பெண்ணை (துஷாரா விஜயன்) அந்த வீட்டின் முதலாளியம்மா (சாந்தா தனஞ்செயன்) மிகுந்த அவமரியாதையாக நடத்துவதைப் பார்க்கும் சூழல் வருகிறது .
அந்தப் பெண்ணின் மீது காதல் வந்திருக்கும் நிலையில் , அவளுக்கு நடக்கும் அவமானங்களை பொறுக்க முடியாத சூழல் . கிழவியைக் கொலை செய்யும் எண்ணம் அவனுக்கு வருகிறது
இந்த நிலையில் அந்த முதலாளியம்மா செத்துப் போக, அடுத்து நடக்கும் சம்பவங்களால் காதல் ஜோடி மீது கொலைப்பழி விழுகிறது . பெற்ற தாயையே மதிக்காத , ஈவு இரக்கம் இல்லாத- அந்த முதலாளியம்மாவின் மகனும் ( அர்ஜுன் சிதம்பரம்) , மகளும் (வனிதா ) அமெரிக்காவில் இருந்து வந்து, போலீஸ் துணையோடு காதல் ஜோடியை உச்சபட்ச கொடுமைக்கு ஆளாக்க, நடந்தது என்ன என்பதே படம்.
உணவு டெலிவரிபாய்களின் தொழில் பிரச்னை, ஏழை வேலைக்காரப் பெண்களை பணக்கார முதலாளிகள் நடத்தும் விதம் இவற்றை பார்சல் செய்து ஒரு படத்தை டெலிவரி செய்கிறார் வசந்த பாலன். தரமான இயக்கத்தால் பாராட்டுப் பெறுகிறார்
“உன் குரலும் அன்பும் கண்டிப்பா பணக்கார முதலாளிகளுக்கு உரியது இல்லன்னு முன்னயே தெரியும் “என்ற வசனம் படத்தில் ஒரு வசந்தம்
நடிக்க சிரமமான ஒரு கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் அர்ஜுன் தாஸ் . அவர் ரத்தப் புயலாகப் பாய , கண்ணீர்த் தென்றலாக படம் முழுக்க கலங்க வைக்கிறார் துஷாரா . மிக சிறப்பான நடிப்பு .
வனிதாவும் அர்ஜுன் சிதம்பரமும் கொடுமைக்காரர்களாக நடிப்பில் பாராட்டுப் பெறுகிறார்கள் .
படபடவென பேசும் கிராமத்து பாசக்கார சுயமரியாதை உள்ள கிராமத்து மனிதராக மனதில் நிற்கிறார் காளி வெங்கட்
பாடலாலும் பின்னணி இசையாலும் படத்துக்கு யானை பலம் சேர்க்கிறார் ஜி வி பிரகாஷ் . கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகள் அபாரம்.
எட்வின் சகாயின் ஒளிப்பதிவு படத்துக்கான மன நிலைக்கு ரசிகனை அழைத்துப் போய் உட்கார வைக்கிறது
சுரேஷ் கல்லேரியின் கலை இயக்கம் அருமை
ரவிகுமாரின் படத் தொகுப்பும் எஸ் கே ஜீவாவின் வசனமும் நேர்த்தி .
கதாநாயகி போனில் சொல்லும் பொய்யில் சட்டென்று பிரேக் டவுன் ஆகிறது படம். எல்லோரும் அவரவர் வசதிக்கு நடந்து கொண்டு அதற்கு ஒரு நியாயம் சொன்னால் எப்படி?
ஓர் ஏழை காதல் ஜோடி .. எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக சரியாக உண்மையாக இருந்தார்கள் …அவர்களுக்கு வரும் பிரச்னை ….அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்.. ஜெயித்தார்கள் அல்லது தோற்றார்கள் என்றால்தானே படம் பார்ப்பவன் அவர்களோடு ஒன்ற முடியும்?
முதலாளி கையைத் தட்டி விட்டு சாக்லேட் எடுக்கும் அப்பா, போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து படபடவென சுடும் அமெரிக்க அகங்காரி.. இப்படி பல காட்சிகள் யதார்த்தம் மீறி இருப்பது பலவீனமே.
யதார்த்தமான பிரச்னையை எடுத்துக் கொண்டு இப்படி சினிமாத்தனமான முடிவைக் கொடுப்பது அநியாயம்
செத்துப் போன பாட்டியின் லெட்டர் கிடைக்கும்போது, அதிலேயே வீடு கை மாறிய விவகாரம் வந்து அடுத்த ஐந்து நிமிடங்களில் படம் முடிந்து இருந்தால் ரசிகர்களுக்கு நீதி கிடைத்து இருக்கும்