எம்ஜிஆரின் இரட்டை நாடியைப் பிடித்த ‘அஞ்சுக்கு ஒண்ணு ‘

IMG_2206
பேரன்ட் பிக்சர்ஸ் சார்பில் எவர்கிரீன் எஸ் சண்முகம் தயாரிக்க, அமர் , சித்தார்த், ஜெரால்டு, நசீர், ராஜசேகர், உமா ஸ்ரீ , மேக்னா ஆகிய புதுமுகங்களுடன் சிங்கம் புலி ஒரு முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்க , ஆர்வியார் என்பவர் இயக்கி இருக்கும் படம் அஞ்சுக்கு ஒண்ணு.

கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் மூலம் அந்த  கூலித் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படமாம் இது. அந்த ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் வருகிறாள் . அதன் பின் அவர்களது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை என்றார் இயக்குனர் .

படம் சம்மந்தப்பட்ட கலைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு மிக எளிமையாக நடந்த பாடல் மற்றும் முன்னோட்ட விழாவில் படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள்.

கிராமப்புற கரகாட்ட பாட்டு ஒன்று லேசான விரச நெடியோடு — ஆனால் பட்டையைக் கிளப்பியது.

சிறுவயதில் கிராமத்தில் அம்மா அப்பா தங்கையுடன் வாழ்ந்த ஒரு பெண்,  பிழைப்பு தேடி சென்னை வந்து பல சிரமங்களை அனுபவித்து பிறகு நண்பர்களோடு மீண்டும் பிறந்த ஊருக்குப் போய்…..

IMG_2183

இப்போது சிதிலமடைந்து கிடக்கும் தனது வீட்டைப் பார்த்து,  அம்மா , அப்பா , தங்கையுடன் வாழ்ந்த நினைவுகளை எண்ணி மருகும் பாடல் ஒன்று,  மனதைப் பிசைந்தது .

“அஞ்சுக்கு ஒண்ணு என்று படத்துக்கு பேர் வச்சிருக்கீங்க . ஆனால் படத்தின் ஐந்து ஹீரோக்களும் இரண்டு ஹீரோயின்களும் இருக்கிறார்களே. அந்த இன்னொரு ஹீரோயினை எந்தக் கணக்கில் வைப்பது ?” என்று கேட்டேன்

”அஞ்சு என்பது எண்ணிக்கை அல்ல . அஞ்சம்மா என்ற பெண்ணின் சுருக்கமான பெயர் . அந்த அஞ்சம்மாவுக்கு , அதாவது அஞ்சுவுக்கு இந்த ஐந்து பேரில் யார் கணவன் என்பதுதான் கதை ” என்ற இயக்குனர் ” எடுத்த எடுப்பிலேயே சஸ்பென்சை உடைக்க வச்சிட்டீங்களே ..” என்று கூறி விட்டு , தொடர்ந்து ” அழுக்கான புழுதி வாழ்க்கையின்  இயல்பை இதில் அழகோடு சொல்லி இருக்கிறேன்” என்றார் .

IMG_2188

படத்தில் நடித்த இளைஞர்கள் எல்லாம் பேசும்போது ” இந்தப் படத்துக்காக 45 நாட்கள் அழுக்கு சட்டை போட்டோம் . பல நாட்கள் குளிக்கவே இல்லை . ஏன் பல் துலக்கக் கூட இல்லை ” என்று குறிப்பிட்டார்கள் . ஒருவர் “நான் எட்டு வருஷம் கஷ்டப்பட்டு இந்த வாய்ப்பை பெற்றேன் ” என்றார் .

சிங்கம் புலி பேசும்போது ” இங்கே பேசிய இந்த இளைஞர்களில் ஒருவர் எட்டு வருஷம் கஷ்டப்பட்டேன் என்று ரொம்ப நெகிழ்ந்து கூறினார் . நாற்பது வருஷம் கஷ்டப்படுறவன் எல்லாம் இங்க இருக்கான் . குளிக்கல பல் துலக்கல என்பதையெல்லாம் பெரிய தியாகம் போல சொன்னார்கள். நான் கடவுள் படத்துக்கு நான் ரெண்டரை வருஷம் ஒரே சட்டையை துவைக்காம போட்டு தாடி வளர்த்து நிஜ  பிச்சைக்காரன் போலவே  ஆகிட்டேன்.

நான் அந்தப்  படத்துக்கு அசோசியேட் . அந்தப் படத்துல ஒரு சீன்ல நடிக்க நிஜ பிச்சைக்காரர்கள் பல பேரைக் கொண்டு வந்தாங்க . நான் அவங்களோட கும்பல்ல போய் உட்கார்ந்ததும் ஒரு பொம்பள ‘ நீ எந்த ஊர் கோவில் வாசல்ல இருப்ப ?’ன்னு கேட்டுது .

அட என்னை விடுங்க .
 IMG_2201

சினிமா சாதாரணமா எல்லாருக்கும் கிடைச்சிடாது. எம்ஜிஆருக்கு நாடியில சின்ன ஒரு பள்ளம் இருக்கும். இரட்டை நாடி என்று சொல்வார்கள் . அதனால் ஆரம்பத்தில் அவருக்கு யாரும் ஒரு குளோசப் கூடத் தரவில்லை . பிறகு அவர் ஹீரோவாக ஆன பிறகு கூட , அந்த இடத்தில்  சிறு தாடி போல வைத்து மறைத்தார்கள்.

ஆனால் பின்னாளில் அந்த இரட்டை நாடிப் பள்ளத்துக்கு என்று தனியாக லைட்டிங் பண்ணிக் கொண்டாடிய  உலகம் இந்த சினிமா உலகம் .

சிவாஜி சார் எல்லாம் இன்னும் முப்பது நாற்பது வருஷம் வாழ்ந்திருக்க வேண்டியவர். ஒழுங்கான மைக் கூட இல்லாத காலத்தில் ரொம்ப தூரத்தில் உட்கார்ந்து இருக்கும் கடைசி ரசிகனுக்கும் பேசுவது கேட்கவேண்டும் என்பதற்காக கத்திக் கத்திப் பேசியே ஆவி போனதால்தான் சீக்கிரம் மறைந்தார் . ஆனா நாம இப்போ டிஜிட்டல் மைக் உலகத்துல இருக்கோம்.

அவங்க எல்லாம் பட்ட கஷ்டத்துக்கு முன்னால் பல்லு விளக்காதது , குளிக்காதது , பழைய துணியைப் போட்டது , எட்டு வருஷம் மட்டுமே சினிமா சான்ஸ் தேடியது இதெல்லாம் பெரிய விசயமே இல்லை .

உங்களை விட அதிக கஷ்டங்களை அதிக நாட்கள் பட்ட  பலரும் இன்னும் வாய்ப்புக் கூட கிடைக்காமல் இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு வாய்ப்புக் கொடுத்த இந்தப் படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றியோடு இருங்கள் ” என்றார் .

உண்மை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →