
நாடோடிகள் நிறுவனம் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சமுத்திரக் கனி மற்றும் மதியழகன் இருவரும் தயாரிக்க,
சமுத்திரக்கனி , தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன் ஆகியோர் நடிக்க ,
சமுத்திரக்கனி எழுதி இயக்கி இருக்கும் படம் அப்பா .
இந்தப் படத்துக்காக பல பிரபலங்கள் தங்களது தந்தை பற்றிப் பேசும் வீடியோக்கள் இப்போது பெரும் பிரபலம் .
கருத்தாக்க ரீதியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப் படத்துக்காக, சமுத்திரக் கனியுடன் பேசியது நிஜமாகவே சுவையான அனுபவம்.
வெகு இயல்பாக சுவாரஸ்யமாக பல்வேறு சமூக விசயங்களோடும் தொடர்புப்படுத்தி தனது அப்பா படம் பற்றி சமுத்திர ஆழமாகப் பேசுகிறார் கனி
“இது சில அப்பாக்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் கதை .
இயல்பாக சுதந்திரமாக பிள்ளையை வளர்க்கும் அப்பாவாக நான் . அதிக பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவாக தம்பி ராமையா ,
‘பாம்புக் கறியா இருந்தாலும் நடுத்துண்டம் நமக்கு’ என்பது போல எதிலுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் கூட்டததில் ஒருவராக வாழ்ந்து,
அடையாளமே இல்லாது முடிந்து போகும் நபர்களின் பிரதிநிதியான ஓர் அப்பாவாக நமோ நாராயணன் …
இவர்கள் பிள்ளைகள் , அந்த பிள்ளைகளின் அம்மாக்கள் ஆகியோர் பற்றிய படம் இது .
படம் துவங்கிய பத்து நிமிடத்துக்குள் படம் பார்க்கும் ஒவ்வொருவரும், படததில் வரும் ஓர் அப்பாவோடு , தனது சொந்த அப்பாவை ஒப்பிட்டுப் பார்க்க முடியும் .
அப்படி ஓர் அனுபவமாக இந்தப் படம் இருக்கும் .
அப்பா எது சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிற அம்மாக்கள் , அப்பா என்ன சொன்னலும் அதற்கு எதிராகவே பேசி,
அவரை நோகடித்து எல்லாவற்றையும் கெடுத்து அதனால் பிள்ளைகளையும் கெடுக்கும் அம்மாக்கள்,
அப்பாவோடு இயல்பாக இருக்கிற அம்மாக்கள் , பயந்து நடுங்கி சுய கருத்து எதுவும் இல்லாமல் வாழ்ந்து மடியும் அம்மாக்கள் .. இவர்களால் பிள்ளைகளின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை இந்தப் படம் பேசும் .
இதை பிரசாரமாக சொல்லாமல் போரடிக்காமல் , நாம் இப்போது உட்கார்ந்து பேசுகிறமாதிரி இயல்பாக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன் .
இப்படி சுவையாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே கதை எழுதிய பிறகு திரைக்கதையை முடிக்க மட்டும் நான்கு வருடங்களை எடுத்துக் கொண்டேன் .
பார்ப்பவர்களை இந்தப் படம் சிரிக்க வைக்கும் . கண்ணீர் சிந்த வைக்கும் . ரசிக்க வைக்கும் .
இந்தப் படத்தை பார்த்து முடித்த பிறகு , அப்பா இருந்தால் அவரை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும் . அப்பா இறந்தவர்களுக்கு அவரை எண்ணி ஏக்கம் வரும் .
ஆனால் அது மட்டுமே இந்தப் படத்தின் நோக்கம் இல்லை
ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூற்று நாற்பது மார்க் வாங்கிய பெண், மார்க் கம்மி என்று தற்கொலை செய்து கொள்கிறாள் .
சில நாட்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலின் உயரமான மொட்டை மாடியில் இருந்து ஒரு பெண் ஓடி வந்து குதித்து தரையில் விழுந்து சிதறி செத்துப் போனாள் . ஏன் ?
அந்தப் பெண்களுக்கு தன் தோல்வியை சொல்லி ஆறுதல் தேட , அப்பா என்ற ஒரு ஹீரோ இல்லை . அதுதான் பிரச்னை
பிள்ளைகளை பேச அனுமதியுங்கள் . அவர்கள் உணர்வுகளை கேளுங்கள் . தோல்விகளில் ஆறுதலாக இருங்கள் .
தப்பே செய்தாலும் பிள்ளைகளுக்கு ‘நம்ம அப்பா இருக்கிறார் , அவரிடம் போனால் சரியாகி விடும்’ என்ற நம்பிக்கை வரும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லும் படம் இது .
நானெல்லாம் சின்ன வயசில் பள்ளியில் வாத்தியாரும் அடித்து , வீட்டுக்குப் போனால் அப்பாவும் அடிப்பார் என்ற பயத்தில் எங்கே போவது என்று தெரியாமல் அலைந்து இருக்கிறேன் .
அன்று வாழ்க்கை முறை நமக்கு கொடுத்த போராட்ட உணர்வு நம்மை யோசிக்க வைத்தது .
இன்றைய வாழ்க்கை முறையில் அந்த போராட்ட குணம் அமையாத நிலையில் நம்பிக்கை தரும் அப்பா இல்லாத பிள்ளைகள் தற்கொலை வரை போய் விடுகிறார்கள் .
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு நம்பிக்கையை கொடுங்கள் என்று சொல்லும் படம் இது .
“விவரம் தெரிந்த பிறகு தன் அப்பாவின் கையை பிடிக்கும் உரிமையே தனக்கு தனது 23 ஆம் வயதில்தான் வந்தது” என்று ஒரு பேட்டியில் கமல் கூறி இருந்தார் .
அன்று அப்பா பிள்ளை இடையே இடைவெளிகள் இருந்தாலும் மற்ற உறவுகள் இருந்தன .
ஆனால் இன்று பல கூட்டுக் குடும்ப உறவுகள் குறைந்து விட்ட நிலையில், அப்பா பிள்ளை இடையே இடைவெளி கூடாது என்பதை சொல்லும் படம் இது .
ஆயிரம் உறவுகள் வந்தாலும் என்றென்றும் நமக்கான உயர்ந்த உறவு பெற்றவர்கள்தான் . அந்த உறவின் விதையான அப்பாவின் பெருமை சொல்லும் படம் இது .
படத்துக்கு இசையால் அப்பாவாகி இருப்பவர் இசைஞானி இளையராஜா . சம்பளத்துக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தப் படத்துக்காக இசை கொடுத்தார் அவர் .
அவர் முந்தைய படத்துக்கு வாங்கிய தொகையை நானே வெளியே கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் பிறகு அந்த மரியாதையை செய்தேன் .
அவர் இசை கொடுத்த பிறகு இந்தப் படம் இன்னும் சிறப்பாக பெரும்பலத்தொடு அமைந்து இருக்கிறது ” என்கிறார் உற்சாகமாக .
வரும் ஜூலை ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது அப்பா .
“