மறக்க முடியாத பதிவாக அமைந்ததோடு மரியாதைக்குரிய வெற்றி பெற்று , அனைவரையும் கவர்ந்து ஓடிக் கொண்டு இருக்கும் ‘அறம்’ திரைப்படத்தின்,
கதாநாயகனாக , குழிக்குள் விழுந்த குழந்தையின் கொந்தளிக்கும் தந்தையாக நடித்த ராம்ஸ் என்ற ராமச்சந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது.
படத்தில் தனது பொருத்தமான நடிப்பால் அனைவரின் பாராட்டுக்கும் உள்ளான இவர் அடிப்படையில் ஓர் உதவி இயக்குனர்.
அடுத்த விசயங்களை அவரே சொல்லட்டும் . 
“நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன். 17 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்தேன். முதலில் ஒளிப்பதிவுத் துறையில்தான் பயில வந்தேன்.
ஆனால் காலம் என்னை துணை இயக்குனராக ஆக்கியது . அப்படியே சில படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
அதில் வந்த தொடர்பின் வாயிலாக ‘அறம்’ இயக்குனர் கோபி நயினாரைச் சந்திக்க நேர்ந்தது. ‘அறம்’ படத்தின் கதையை படிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார்.
படிக்கும்போதே, படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.
அந்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்கப் போகிறேன் என்பது அப்பொழுது கூட எனக்கு தெரியாது. அப்புறம் அவர் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். 
கோபி சாரின் தெளிவு, சமூகப் பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவை அறத்துக்கு உரம் ஆனது .
ஒரு சின்ன கதாபாத்திரத்திடம் இருந்து கூட படைப்பு ரீதியாக படத்துக்குத் தேவையான பங்களிப்பு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர் அவர்.
எனக்கு இவ்வளவு நல்ல பெயர் வரக் காரணமாக இருந்த இந்த கதாபாத்திரத்தை தந்த அவருக்கு, நான் வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
நயன்தாரா மேடம் மிகவும் எளிமையானவர். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட எல்லோரிடமும் சகஜமாக பழகினார்.
எங்களை ஊக்குவிக்கவும் செய்தார். தயாரிப்பாளர் ராஜேஷ் எல்லோரையும் ஒரே மாதிரிதான் கவனித்தார். அவரது உபசரிப்பு எங்களை நெகிழச் செய்தது.
படப்பிடிப்பு நடந்த இடமும், காலமும் மிக கடுமையானது. இன்று எங்கு போனாலும் எல்லோராலும் பாராட்டப்படும் இந்த கதாபாத்திரம் கிடைத்தமைக்கு,
நான் நிச்சயமாகக் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்” என்கிறார் ராமசந்திரன்.
ராம்ஸ், இன்னும் உங்களுக்கு காத்திருக்கின்றன உயரங்கள் !உயருங்கள் !!
