அரிமா நம்பி @ விமர்சனம்

விமர்சனம்
ஏங்க வைக்கும் கிக் வாழ்க்கை
ஏங்க வைக்கும் கிக் வாழ்க்கை

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, விக்ரம் பிரபு,-  பிரியா ஆனந்த் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கி இருக்கும் படம் அரிமா நம்பி . படம் சரி மா என்று சொல்லும்படி இருக்கிறதா ? சாரி மா என்று சொல்லும்படி இருக்கிறதா? பார்க்கலாம்.

சென்னையில் ஒரு குளிர்ச்சி அறை- வொயிட் காலர் வேலை பார்த்தபடி ‘பப்’பில் நண்பர்களுடன் தண்ணி அடித்துக் கொண்டு,  காதலிப்பதற்காக ஒரு சரியான பெண்ணை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞனுக்கு (விக்ரம் பிரபு )  அதே பப்புக்கு தன் தோழிகளுடன் தண்ணியடிக்க வரும் ஒரு கல்லூரிப் பெண்ணை (பிரியா ஆனந்த்) ரொம்பவே பிடிக்கிறது . ஹாய் சொல்லி அப்புறம் பாட்டுப் பாடி பாட்டிலேயே காதல் சொல்லி…. கடைசியில் போன் நம்பர் வாங்கிக் கொண்டு போகிறார்கள் அடுத்த நாள் போனில் அவன் தரும் மெசேஜுக்கு உடனே அவளிடம் இருந்து பதில் வர, அன்று இரவு இரண்டு பேர் மட்டும் மீண்டும் சந்தித்து ரெட் ஒயினாக குடித்துத் தள்ளுகிறார்கள் .

அப்படியே அவளது அபார்ட்மென்ட் வரை போய் அங்கேயும் சரக்கடிப்பது தொடர, காதலும்  வருகிறது . அடுத்த சில நிமிடங்களில்  மர்ம நபர்களால்  அவள் கடத்தப் படுகிறாள் . இவன் போலீசுக்கு போனால் அங்கே இவனுக்கு உதவும் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் செத்துப் போகிறார் . இன்ஸ்பெக்டர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கிறார் .

பெண்ணின் அப்பாவான டி வி நிலைய அதிபர் , அவர் எடுத்த ஒரு ரகசிய வீடியோ , அதில் கேஸ் சிலிண்டர் வெடித்து இறந்து போனதாக கருதப்படும் நடிகை மேகா சிங்கிற்கு நடந்த கொடூரம் , அவளைக் கொலை செய்த மத்திய அமைச்சர் , அமைச்சருக்காக அதை வாங்க டி வி நிறுவன அதிபரை கொலை செய்யும் லோக்கல் ரவுடீஸ், வீடியோ ஹீரோ ஹீரோயின் கைக்கு வந்த பிறகு அடுத்த கட்டமாக களம் இறங்கும் ஹைடெக் ரவுடீஸ், கடைசியில் அமைச்சர் மற்றும் ஹீரோவுக்கான ஒன் டூ ஒன மோதல் …. என்று பழகிய கதை என்றாலும் பர பர திரைக்கதை , பக்காவான  படமாக்கல் … இதுதான் அரிமா நம்பி .

எந்த பீடிகையும் பினாத்தலும் இல்லாமல் எடுத்த எடுப்பில் நேரடியாக கதைக்குள் இறங்கும் இயக்குனரின் மெச்சூரிட்டி பாராட்டுக்குரியது . தங்களுக்கு வீசப்பட்ட முதல் காட்சி என்னும் பந்திலேயே சிக்சர் அடிக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர் ,இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கும் டிரம்ஸ் சிவ மணி , கலை இயக்குனர் முத்துராஜ் ஆகிய மூவரும் . இது கடைசி வரை தொடர்கிறது . அதுவும் டிரம்ஸ் சிவமணியின் பின்னணி இசை ஹாலிவுட் தரம்.

முதல் சில காட்சிகள் இன்றைய நம்மூர் நவ நாகரீக இளைஞர்களின் வாழ்க்கை முறையை அப்படியே காட்டி நடுத்தர வரக்கத்து ஆட்களை பெரு மூச்சுக்கு ஆளாக்குகிறது .

இயக்குனரின் மெச்சூரிட்டி
இயக்குனரின் மெச்சூரிட்டி

விக்ரம் பிரபு ஜம் ஜம் என்று இருக்கிறார் . ஜாம் ஜாம் என்று நடிக்கிறார் . பிரியா ஆனந்த் கவர்ச்சி கண்ணீர் இரண்டுக்கும் ஒகே . ஒரு சீரியசான போலீஸ்காரர் கேரக்டரில் கவர்கிறார் எம் எஸ் பாஸ்கர் . வில்லத்தனமான மந்திரி வேடத்தில் அசத்துகிறார் தெலுங்கு நடிகர்ஜே டி சக்கரவர்த்தி .

எந்த இடத்திலும் பயப்படாமல் பதறாமல் சொல்ல வந்த கதையை நிறுத்தி நிதானமாக அழுத்தமாக ஆழமாக சொல்கிறார்கள் . அதனால் படம் கொஞ்ச்ச்ச்ம் நீளமாக தோன்றினாலும் போர் அடிக்காமல் ரசிக்க வைக்கிறது

சுவிட்ச் ஆஃப் செய்யப்பட போன் பற்றிய அறிவிப்பில் வரும் மொழி, லேட்டஸ்ட்  டெக்னாலஜி கேமரா பற்றிய பேச்சு , சொல்லப்படாத விஷயத்தை தெரிந்தது போல பேசும் நபர்களை ஷார்ப்பாக கவனித்து அவர்களை இனம் காணுவது என்று … திரைக் கதையில் ‘சில ஓல்டு ஈஸ் கோல்டு’ சமாச்சாரங்களை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறார் ஆனந்த் ஷங்கர்.

நிஜ லொக்கேஷனில்  கொஞ்சம் செட் போட்டுக் கலந்து கட்டி கவர்கிறார்களோ என்ற அளவுக்கு பாடல் காட்சியின் அருவிக்குளம் ஈர்க்கிறது.

திருடும் பைக் மற்றும் கார்களில் ஹீரோவும் ஹீரோயினும் சாவகாசமாக பயணிப்பது….. போக முடியாத இடங்களுக்கு எல்லாம் ஹீரோ ஜஸ்ட் லைக் ஹட் போவது….. செய்ய சிரமாமான விசயங்களை எல்லாம் ஹீரோயிசம் என்ற பெயரில் செய்வது என்று….. லாஜிக் என்ற வார்த்தையையே அகராதியில் இருந்து தூக்கி விட்டு படம் எடுத்துள்ளார்கள் என்றாலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாததால் பாதகமில்லை.

அதுபோல அபார்ட்மெண்டில் எதுவுமே நடக்காதது போல பேசும் அந்த வாட்ச் மென் காட்சி இந்த பாணி திரைக்கதை நகர்வுக்கு தேவை இல்லாத ஒன்று.

கம்பியூட்டர் கோச்சிங் கிளாஸ்
கம்பியூட்டர் கோச்சிங் கிளாஸ்

பின்பாதியில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையிலான ஹைடெக் வார் அபாரம் . கண்காணிப்பு கேமரா, செல்போன் சிக்னலை வைத்து தான் ஒரு மனிதனை டிரேஸ் பண்ண முடியும் என்றில்லை . கம்பியூட்டர், லேப் டாப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட இணைய தளங்கள், வங்கி கணக்கு , ஏ டி எம் கார்டு, டெபிட் கார்டு, பான் நம்பர் , என்று எல்லாவற்றையும் வைத்து கண்காணிக்கலாம், கைப்பற்றலாம் என்று காட்டுகிறாகள்

அரசாங்கம் நினைத்தால் நாட்டில் மக்கள் பயன்பாட்டில்  உள்ள எல்லா தகவல் தொடர்பு சாதனங்களையும் முடக்க முடியும் ;  ஒரு பைலை சிடி , , சிப் முதலிய பார்மட்டடுகளில் இருந்து கம்பியூட்டர் மூலம்  அப்லோடிங் செய்யும்போது பாதியில் அது தடுக்கப்பட்டு அதன் பின்னர் அது தொடராமல் போனாலும் எந்த அளவுக்கு அப்லோடிங் செய்யப்பட்டதோ அதை ரிக்கவர் செய்து பார்க்க முடியும் என்பது உள்ளிட்ட பல  ஸ்பெஷல் தகவல்கள்  படத்தில் வருவது சுவாரஸ்யம் .

காதல் உருவான காட்சியில் இருந்து கடைசி காட்சியை வடிவமைத்து இருப்பது நேர்த்தி .

அரிமா நம்பி … போகலாம் நம்பி

மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————-
ஆனந்த் ஷங்கர், சிவ மணி , ராஜ சேகர், விக்ரம் பிரபு , முத்துராஜ்

About Senthilkumaran Su

பெயர் சு.செந்தில் குமரன் புனைப் பெயர் ராஜ திருமகன் கல்வித் தகுதி B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (1986 ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி விகடன் மாணவ நிருபர் திட்டம் (1988- 89) மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது (1989 ) விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Senthilkumaran Su →