அருவி @ விமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு தயாரிக்க, அதிதி பாலன், அஞ்சலி வரதன், கவிதாபாரதி, ஷோபா பார்த்தசாரதி, சிறுமி தர்ஷினி , குழந்தை பிரனிதி நடிப்பில், 
 
 அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி இருக்கும் படம் அருவி . இந்த அருவி குற்றாலமா இல்லை குத்தாலமா ? பார்க்கலாம் . 
 
சுத்தமான காற்று , சுவையான தண்ணீர் கொண்ட ஓர் இயற்கை எழில் பிரதேசத்தில் , எப்போது  குழந்தை பிறக்கும் என்று ஏங்க வைத்துப் பிறந்து அழகுக் குட்டிச் செல்லமாக (பிரனிதி) ஜொலித்து ,
 
தேவதை போன்ற சிறுமியாக ( தர்ஷினி)  பாசமும் நேசமுமாக வளர்க்கப்பட்டு , அழகு அறிவு ரசனை போன்ற எல்லா சிறப்புகளோடும் வளைய வரும் இளம் பெண் அருவி ( அதிதி பாலன்), !
 
தவறான சேர்க்கை காரணமாக வித்தியாசமாக பார்க்கப்பட்டு , அதனால் ஏற்பட்ட ஒரு பாதிப்பின் காரணமாக , உயிரெனப் பராமரித்த அம்மா அப்பா தம்பியால் புறக்கணிக்கப் பட்டு , 
 
எமிலி என்ற திருநங்கையின்  (அஞ்சலி வரதன்) ஆதரவுடன் வாழும் அருவியை  மூன்று ஆண்கள்  தத்தம் பாணியில் சுயநலமாக நடந்து சாக்கடையாக்குகிரார்கள்.அடுத்தவரின் அந்தரங்கத்தை அரங்கத்துக்குக் கொண்டு வந்து , அதன் மூலம் பிரபலம் ஆகும் சொல்வதெல்லாம் சத்தியம் என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியின் மூலம், விஷயம்  வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட படபிடிப்பு நடக்கிறது . 
 
அங்கு நடக்கும் நிகழ்வுகள் அருவி , குற்றவாளிகள்,, சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி நடத்துபவர்களை எல்லாம் எப்படி பாதிக்கிறது ?
 
அருவிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன ? தன்னை தவறாக நடத்தியவர்களை அருவி எப்படி பாதித்தாள் என்பது அருவி !
 
அண்மைக் கால தமிழ் சினிமா கண்ட அற்புதமான கருத்துள்ள படம் அருவி . கொண்டாடித்தீர்க்க  வேண்டிய கொடை !
 
யாரும் எதிர்பாராத ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டு அதில் அன்பு மனித நேயம் ,எல்லாம் சொல்கிற ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். 
 
பணக்கார வர்க்கத்தை மேலும் மேலும் பணக்கரனாக்க அவர்கள் பல்வேறு வகையிலும் மறைமுகமாக பரிந்துரைக்கும் பொருட்களை வாங்கி வாழ்வதே கவுரவம் என்று நம்பி,  அதற்காகவே ஓடி ஓடி பணம் சேர்த்துக் கொட்டி  வாங்கி ,
 
அதற்கான கடனை அடைக்க மேலும் மேலும்   மாடு போல உழைத்து பணம் சேர்த்து .. இப்படி யாரையோ மேலும் மேலும் பணக்காரனாக ஆக்க உழைக்கும் வாழ்வை சந்தோஷம் என்று நம்பும் நடுத்தர வர்க்கத்தை தன்னிலை உணர வைக்கும் வசனம்…இயக்குனரின் எவரெஸ்ட் உயர சிந்தனை தன்மைக்கு அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது . 
 
‘இந்த திரைக்கதை இந்த இடத்தில் வசமா சிக்கும் என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்’ என்று நாம் காத்திருந்த இடத்தில் அழகாக, 
 
‘சொல்வதெல்லாம் சத்தியம்’ நிகழ்ச்சியை புகுத்தி படத்தை சுவாரஸ்யமாக செலுத்தி ஆச்சர்யப்படுத்துகிறார் அருண் பிரபு புருஷோத்தமன் .
 
அதுவும் கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் அவர் காட்டி இருக்கும் உயர்ந்த நிலை பக்குவமும் அதை படமாக்கி இருக்கும் விதமும் ஒஅர் இரவாவது  படம் பார்ப்பவரின் தூக்கம் கெடுக்கும் . 
 
அந்த முடிவிலும் விரக்தியின் உச்சம் தொடாமல் நம்பிக்கைப் புன்னைகையோடு படத்தை முடிக்கும் விதம் சிலிர்ப்பானது . 
 
தமிழ் சினிமாவுக்கு ஓர் அற்புதமாக இயக்குனர் கிடைத்து இருக்கிறார் . 
 
அருவியாக நடித்திருக்கும் அதிதி பாலன்…. ! 
 
நடிப்புத் திறமையிலும் அனுபவம் பெற்ற நடிகைகளே நடிக்க சிரமப்படும் ஒரு கதாபாத்திரத்தை முதல் படத்திலேயே பிரம்மாதமாக நடித்து அசத்தி இருக்கிறார் . 
 
சந்தோஷத்திலும் நேர்மை, உற்சாகத்திலும் நிதானம் , சோகத்திலும் குறும்பு, கொந்தளிக்க விடாத கோபம் என்று அந்த கதாபாத்திரமும் அதிதியும் கட்டிப் பிடித்துக் கானம் பாடிக் காதலிக்கிறார்கள் . 
 
 
அந்த கால் சிரிப்பு, அரை கோபம், முக்கால் சோகம் காட்டும் முகபாவனைகள்.. 
 
அடடா … குருவித் தலையில் பனங்காய் அல்ல .. பறங்கிக் காயை பக்காவாக மூக்கில் சுமந்து முன்னேறி இருக்கிறது இந்த அறிமுகத் தும்பி . சபாஷ் அதிதி  பாலன் 
 
நெஞ்செலும்பு தெரிய நிஜமாகவே உடல் மெலிந்து நடித்திருக்கும் அந்த கடைசி காட்சியில்  கண் கலங்க வைக்கிறார் . அந்த காட்சியில் குரல் நடிப்பும்  கோமேதகம் !
 
சொல்வதெல்லாம் சத்தியம்  நிகழ்ச்சி நடத்துனர் லக்ஷ்மி கோபால்சாமியாக வரும் ஷோபா பார்த்தசாரதி,   உதவி இயக்குனர் பிரதீப் , மற்றும்  சுபாஷ், ”ரோல்லிங் சார்….” என்ற ஒரு வார்த்தையில் சிரிக்க வைக்கும் கேமராமேன் என்று, 
 
எல்லோருமே நன்றாக நடித்து உள்ளனர் .   டைரக்டராக வரும்   டைரக்டர் கவிதா பாரதி, நடிக்கவே இல்லை . அப்படியே கேரக்டராகி விட்டார் 
 
கெட்ட மனிதனிடமும்  கூட உள்ள நல்ல குணத்தை கிராமத்து பணியாரக் கிழவி கதையின் மூலம் சொல்வது எல்லாம் ஒரு முழுமையான படைப்பாளியின் அடையாளம் 
 
திரு நங்கை கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு கண்ணியம் சேர்த்து கண்ணியம் பெறுகிறது  திரைப்படம் .
 
 அருவி படத்தில் அருவி என்ற நாயகி அருவியில்  அலையாடும் காட்சிகள் முதற் கொண்டு ஒளி ஆளுமை உட்பட அத்தனை விதத்திலும் பொருத்தமான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்  ஷெல்லி கேலிஸ்ட் 
ஆரம்பக் காட்சிகளை படு வேகமாக சொல்லி , முக்கியமான இடத்தில் திகைக்க வைத்து பிறகும் அழுத்தமும் ஆழமுமாக  படம் பயணிக்க பக்க பலமாக இருந்துள்ளது  ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டாவின் படத் தொகுப்பு  
 
 பிந்து மாலினி, வேதாந்த் இருவரின் இசையும் படத்தின் உணர்வுகளை அழகாக நமக்குள் ஏற்றி வைக்கிறது 
 
அருவியின் பாட்டில் சுத்தும் விளையாட்டு கடைசியில் அவளையே குறி வைப்பது , பிரதீப் சொல்லும் நாட்டமை கதையை கிளைமாக்சில் பொருத்துவது இவற்றில் மூலம் டைரக்டோரியல் டச் களில் ஜொலிக்கிறார் இயக்குனர் .
 
இப்படி ஓர் அற்புதமான படத்தைத் தயாரித்த ட்ரீம்  வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு இருவருக்கும் மனம் நிறைய பாராட்டுகள். பையும்  நிறைய வாழ்த்துகள் 
 
அருவி … அமுத மழை 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
**************************************
அருண் பிரபு புருஷோத்தமன், அதிதி பாலன், ஷெல்லி கேலிஸ்ட் , ரேமண்ட் டெர்ரிக் க்ராஸ்டா, மற்றும்  எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *