பேய்கள் இருப்பது உண்மை என்றால் அந்தப் பேய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ‘உண்மையில் நாம் கூட இந்த மாதிரி எல்லாம் இல்லையே’ என்று காது வழியே கரும்புகை விடும் அளவுக்கு…. விதம் விதமான பேய்களைக் கொண்டு கோடம்பாக்கத்தில் பேய்ப் படங்கள் உருவாகி வருகின்றன.
அந்தப் படங்களில் கதை சொல்லும் விசயத்தில் வித்தியாசமோ அல்லது படமக்காப்பட்ட விதத்தில் சாமர்த்தியமோ கொண்ட படங்கள் ஓடும் என்பதே இது போன்ற படங்களை தயாரிப்பவர்களின் பேய்த்தனமான நம்பிக்கை.


அந்த நம்பிக்கை அணிவகுப்பில் திலகேஸ்வரி மூவீஸ் சார்பில் பி.கே.ஜேம்ஸ் மற்றும் ஷீலா குரியன் தயாரிக்க, மலையாளத்தின் பல படங்களை உருவாக்கிய ஜெஸ்பால் ஷண்முகனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் முதலில் மலையாளத்திலும் அடுத்து தமிழிலும் உருவாகி இருக்கும் படம்தான் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணிவரை
பெயர் சொன்னால் போதும் கதை எளிதில் விளங்குகிறது அல்லவா?
ஆம் மக்களே!
மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை அதாவது ஒரு இரவில் ஒரு பேயிடம் சிக்கிய இளைஞனின் கதை இது.
அழகான ஓர் இளம்பெண் அழகில்லாத ஓர் இளம்பெண் ஆகிய தோழிகள் இருவர் ஒரே இளைஞனை காதலிக்கிறார்கள். அழகில்லாத பெண்ணின் அழகிய கவிதையில் மயங்கி அவளை நெருங்கும் இளைஞனை, அழகான பெண்ணே ஒரு கவிதையாக ஈர்த்துக் கொள்கிறாள்.
தொழிகளுக்குள் பொறாமை ஏற்பட்டு, விளைவாக அழகில்லாத பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

சுமார் இருபது வருடம் கழித்து சம்மந்தப்பட்ட ஒரு பங்களாவில் அந்த காதலன் தங்க, அங்கு பேயாக வரும் அந்த அழகில்லாத பெண் (பேயானதும் இன்னும் அழகிலாம போயிருக்குமே …அதுக்கு தற்கொலை பண்ணிக்காமலே இருந்திருக்கலாம் !) அவனை படுத்தும் பாடுதான் இந்தப் படம்.
கடைசியில் ஜெயித்தது ஆவியா இல்லை அந்த அப்பாவியா என்பதுதான் முடிவு
மம்முட்டியின் சகோதரி மகனான் அஷ்கார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சூரி கிரண், கௌரி கிருஷ்ண என்று இரண்டு வல்லிய பெண்குட்டிகள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
நிழல்கள் ரவி சபிதா ஆனந்த் இவர்களுடன் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷீலா குரியன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அபிராமி ராமநாதன், கலைப்புலி எஸ் தாணு, ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்கள்.


“வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது . இங்கே ஜாதி மதம் மொழி வேறுபாடு எல்லாம் பார்க்க மாட்டோம் . திறமை உள்ள யார் எங்கே இருந்து வந்தாலும் தமிழ் சினிமாவில் ஜெயிக்கலாம் ” என்று அபிராமி ராமநாதனும் ஜாகுவார் தங்கமும் பேசியபோது….
ஜேம்சும ஷீலாவும்
சந்தோஷமாய் கைதட்டினார்கள்.
கே. ஏ.,லத்தீஃப் இசையில் பாடல்கள் கேட்க இனிமையாகவே இருந்தது. லொக்கேஷன்கள் சிறப்பாக இருந்தன. டிரைலரில் ஒலிகள் மிரட்டியது.
ஓட்டு மொத்தப் படமும் தரமாக இருந்து மிரட்டினால் ரிலீசை எண்ணி தயாரிப்பாளர் மிரள வேண்டியது இல்லை. வாழ்த்துகள் !

Comments are closed.