இயக்குனர் முருகதாசின் முருகதாஸ் புரடக்ஷன்ஸ் மற்றும் பர்ப்பிள் புல் பட நிறுவனம் தயாரிப்பில் கவுதம் கார்த்திக், ரேவதி, புகழ் , ரிச்சர்டு ஆஷ்டன் நடிப்பில் பொன் . குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம்.
பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் தமிழகத்தில் மலைக்காட்டுக்கு நடுவில் இருக்கும் செங்காடு என்ற உயர் ரக பருத்தியை அதிக அளவில் ஏற்றுமதி செய்து அதிக லாபம் சம்பாதிக்க, அங்குள்ள மக்களை பதினாறு மணி நேரம் வேலை வாங்குவது, களைப்பில் சற்றே அசந்தாலும் முள் சவுக்கால் வெளுத்து, கொதிக்கும் நீரில் அமிழ்த்தி கொடுமைகள் செய்வது என்று அரக்கனாக இருக்கிறன் ராபர்ட் கிளைவ் என்ற அதிகாரி, (ரிச்சர்டு ஆஷ்டன்)
பெண்கள் யாரும் வயதுக்கு வந்தால் அவர்களை தூக்கிக் கொண்டு போய் வன்புணர்வு செய்வதே வேலையாக இருக்கிறான் அவரது மகன் ( ஜேசன்)

வேறு வழியின்றி அதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் ஜமீந்தார் ( மது சூதனன் ) தனக்கு மகள் இருப்பதே தெரியாமல் வீட்டுக்குள் பூட்டி வைத்து வளர்க்கிறார் . அவள் பருவத்துக்கு வருகிறாள் ( ரேவதி)
சிறுவயதில் அம்மாவை இழந்து அந்தப் பெண்ணால் சோறு கொடுத்து வளர்க்கப்படும் சிறுவன் ஒருவன் வளர்ந்து இளைஞன் ஆகிறான். அவனுக்கு மட்டுமே அவள் இருப்பது தெரியும் . அதே நேரம் அவன் ராபர்ட் கிளைவிடம் வேலை செய்கிறான் .
ஒரு நிலையில் ஜமீந்தார் மகளுக்கும் அவனுக்கும் காதல் வருகிறது. கிளைவ் மகன் ஜமீந்தார் மகளை கண்டு பிடித்துத் தூக்க, அவன் கொலை செய்யப்படுகிறான்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விடுகிறது . அதை ஊர் மக்க்ளிடம்சொல்லாமல் ஒட்டு மொத்த ஊர் மக்களையே கொன்று பழி தீர்க்க கிளைவ் முயல நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
அட்டகாசமான படமாக்கல் மற்றும் இயக்கத்தில் கவர்கிறார் இயக்குனர் பொன் குமார் . செல்வகுமாரின் ஒளிப்பதிவு, சந்தானத்தின் கலை இயக்கம், சான் ரோல்டனின் இசை , சுதர்சன் படத் தொகுப்பு . பூர்ணிமா மற்றும் பெருமாளின் உடைகள் யாவும் மிக அருமை . இயக்குனரோடு இவர்களும் சேர்ந்து நம்மை அந்தக் கால கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர் .

கவுதம் கார்த்திக், ரேவதி, சிறப்பாக நடித்துள்ளனர் . ஒரு சீரியஸ் கேரக்டரில் புகழ் அசத்தி இருக்கிறார் . ராபர்ட் கிளைவ் ஆக வரும் ரிச்சர்டு ஆஷ்டன் சும்மா மிரள வைக்கிறார் . பாட்டி கதாபாத்திரமும் அவரது நடிப்பும் அபாரம் சில அட்டகாசமான உணர்ச்சிகரமான அர்த்தமுள்ள காட்சிகளை எழுதி இயக்கி இருக்கிறார் பொன் குமார் .
உதாரணமாக ஒரு ஏழைப் பெண்ணை ராபர்ட் கிளைவின் மகன் தூக்கிக் கொண்டு போகும்போது மனம் வலித்தாலும் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பார் ஜமீந்தார் . அந்த ஏழைப் பெண் சீரழிக்கப்படுவார் . ஒரு நிலையில் அது ஜமீந்தார் மகளுக்கு தெரிய வரும் . பின்னாளில் ஜமீன்தார் மகளுக்கும் வெள்ளைக்காரனால் சீரழிக்கப்படும் ஆபத்து உள்ள சூழல் . அப்போது ஜமீன்தாரிடம் அந்த ஏழைப் பெண் விசயத்தை நினைவூட்டி ஜமீந்தார் மகள் சொல்வார் , ” உங்க பொண்ணுக்கு எல்லாம் நல்ல சாவே வரக் கூடாதுப்பா. “
அண்மைக் காலத்தில் தமிழ் சினிமாவில் வந்த மிக நுட்பமான காட்சி இது .

இப்படி பல சிறப்புகள், வித்தியாசமான கதை இருந்தும் இரண்டாம் பகுதியில் திசை கெட்டுத் தடுமாறும் திரைக்கதை , மீசைக்கு ஆசைப்பட்டு கூழை குப்பையில் கொட்டிய கதையாக, பல மொழி ரிலீசுக்கு ஆசைப்பட்டு எடுத்த காரணத்தால் தமிழ் ரசிகனுக்கு டப்பிங் படம் போல தோன்றும் விதம், லாஜிக் குறைபாடுகள் , இன்றைய சூழலோடு எந்த வகையிலும் கனெக்ட் செய்யாமல் துண்டாக படத்தை துவங்கி முடித்தும் வைத்தது போன்ற காரணத்தால் படம் பலவீனம் ஆகி விட்டது .