ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ ஞானவேல் ராஜா, மற்றும் UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா, உப்பலா பட்டி பிரமோத் தயாரிப்பில் ,
அனுஷ்கா, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத், நடிக்க , அசோக் ஜி என்பவரின் இயக்கத்தில் வந்திருக்கும் படம் பாகமதி . அனுமதிக்கலாமா, பர்சில் கை வைக்க ? பேசலாம் .
நேர்மையான அமைச்சர் என்று பெயர் பெற்று இருக்கும் ஒருவரை (ஜெயராம்) வீழ்த்த விரும்பும் முதல்வரும் மற்ற அமைச்சர்களும் அவருக்கு எதிராக ஆதாரங்களை தேடுகிறார்கள் .
தனது கணவனையே கொன்று விட்டு இப்போது ஜெயிலில் இருக்கும் என்ற சஞ்சலா என்ற – மேற்படி அமைச்சரின் முன்னாள் உதவியாளரான ஐ ஏ எஸ் அதிகாரியை ( அனுஷ்கா) ,
தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து தகவல் பெற முயல்கிறார் . கண்டிப்பான சி பி ஐ அதிகாரி (ஆஷா சரத்) .
பந்தோபஸ்துக்கு வரும் போலீஸ் அதிகாரி , சஞ்சலாவின் கணவனின் அண்ணன் . அவருக்கு சஞ்சலா மேல் வஞ்சம் .
விசாரணை யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக ஒரு காலத்தில் சிற்றரசியாக இருந்த பாகமதி என்ற பெண்ணின் கோட்டைக்குள் வைத்து விசாரணை செய்கிறார்கள் .
இந்த நிலையில் பாகமதியாக மாறும் சஞ்சலா என்ன செய்தார் என்பதே பாகமதி .
அணைகட்டும் திட்டம் , அதற்காக கிராமங்களை துறக்கும் மக்கள் , அதில் தேவை இல்லாமல் சில கிராமங்களை சேர்த்து காலி செய்து அவற்றை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று பணம் கொழிக்க முயலும் அரசியல்வாதி,
அதற்கு எதிராக போராடும் நேரமையான இளைஞன் (நாயகன் உன்னி முகுந்தன்) , அவனை விரும்பி காதலிக்கும் சஞ்சலா ,
ஒரு நிலையில் அவளே அவனையே கொலை செய்வது ஏன் என்ற ஏரியா நல்லா இருக்கு .
அதே போல மகளின் குறும்பான உத்தி மூலம் விசாரணையில் சி பி ஐ அதிகாரி துப்பு துலக்கி வெற்றி பெறுவதும் ஒகே .
பாகமதி அரண்மனைக்கான கலை இயக்கம் அருமை .
மிக முக்கியமாக அயோக்கிய அமைச்சருக்கு அமித் ஷா போன்ற கெட்டப் கொடுத்து இருக்கும் இயக்குனருக்கு அன்பாக ஒரு ரசனை முத்தம் . சூப்பர் புரோ !
மற்றபடி… ம்ஹும் !
அருந்ததி எப்படி அனுஷ்காவின் தோற்றப் பொருத்தத்துகாகவே ஓடியதோ அது போல பாகமதி பாத்திரத்தை அனுஷ்காவின் தோற்றம் மட்டும் காப்பாற்றும் என்று நம்பி இருக்கிறார்கள் . ஆனால் அய்யகோ . !
திரைக்கதை இப்படி தலையைச் சுற்றி மூக்கை தொடும் … ம்ஹும் ..முதுகு மற்றும் காலை எல்லாம் சுற்றி மூக்கை தொடும் விசயமாக இருந்தால் அனுஷ்காவின் சிற்ப எழில் முகம் மட்டும் என்னதான் செய்ய முடியும் ?
பக்குவமும் நேர்த்தியும் இல்லாத பாத்திரப் படைப்புகள் , ஓவராக ஜவ்வு போல இழுக்கும் திரைக்கதை , புதிதாக எதுவும் இல்லாத காட்சிகள் , தேவைக்கும் மேல் பல காட்சிகள் நீளுவது , காரணமில்லாத டமார் டுமீர் சத்தங்கள் என்று பாகமதி நம்மை வெகுவாக சோதிக்கிறாள் .
பாகமதி கதையை சஞ்சலா பயன்படுத்திக் கொண்டார் என்றால் திரைக்கதையில் அப்படியே விட்றணும் . இல்லன்னா பாகமதியை களத்தில் இறக்கி , பாகமதியின் எதிரிதான் இந்த ஜென்மத்தில் நவீன வில்லன் என்று ஒரு லிங்க் கொடுத்து அதிர அடிக்கணும் .
இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் எதுக்கு இந்த கிளைமாக்ஸ் கோமாளித்தனம் ?
பாகமதி .. பாவமதி !