மன்னர் வகையறா @ விமர்சனம்

A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து  கதாநாயகனாக நடிக்க  கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க,  

இளையலதிலகம் பிரபு , ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், , சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி ஆகியோர் நடித்துள்ள படம்  மன்னர் வகையறா .

கலைப் புறா வா ? இல்லை வரவர கொரகொரவா? பேசலாம் . 

கிராமம் . பெரிய குடும்பம். (பிரபு – ,மீரா கிருஷ்ணா )  ஊரில்   நல்ல மரியாதை.  இரண்டு மகன்கள் . ஹீரோவுக்கு ( விமல்)  படிப்பு வராது . அவனுக்கு ஓர் அல்லக்கை மாமன் (ரோபோ ஷங்கர்)  . ஹீரோவுக்கு ஒரு பெண் மீது காதல் ( ஆனந்தி ).அண்ணன் (கார்த்திக் குமார் )  ஒரு பெண்ணைக் காதலிக்க  (சாந்தினி) , பெண்ணின் குடும்பத்தின் ரவுடித் தனத்தின் மீது பயந்து அந்த அண்ணன்  விஷம் குடிக்கிறான் . 

எனவே அண்ணனுக்காக அந்தப் பெண்ணைக் கடத்தி அவளை  அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்  நாயகன் . அதனால் அப்பாவை பலர் அவமானமாகப் பேசுகிறார்கள் . 

அண்ணனின் காதலியை திருமணம் செய்து  கொள்ள இருந்த மாப்பிள்ளை வேறு யாரும் அல்ல . பெண்ணின் சொந்த அத்தை (சரண்யா) மகன்தான் . 

பல காலமாகப் பிரிந்து கிடந்த உறவை இந்த திருமணத்தின் மூலம் நேர் செய்ய அவர்கள் முயன்ற நிலையில்தான் நாயகனின் செயலால் அது முடியாமல் போயிருக்கிறது . 

எனவே அவர்கள் மணப்பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொடுத்து  உறவை மீண்டும் சீர் செய்ய முயல , அந்தத்  தங்கை வேறு யாருமல்ல . நாயகனின் காதலிதான். 

விஷயம் அறிந்த நாயகனின் தந்தையே நாயகனிடம் காதலை விட்டுத்தர சொல்ல .. அப்புறம் என்ன நடந்தது என்பதே மன்னர் வகையறா 

(ஒண்ணும் இல்ல.. இப்படி குழப்பிக் குழப்பி சொன்னா ஒருவேளை உங்களுக்கு இது வித்தியாசமான புதிய கதை போல தெரியலாம் அல்லவா ? அதுக்குத்தான் )

என்ன சொல்லிப் பாராட்டலாம் ? ஆங்.. சண்டைப் பயிற்சி அபாரம் . விமல் நன்றாக நடித்தும் அடித்தும் இருக்கிறார் . 

அப்புறம் … ஆங் .. இறால் பண்ணை வளர்ப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் என்று ஒரு காட்சியில் சொல்லி இருக்கிறார்கள் . அதனால்தான் வில்லன் குடும்பத்துக்கும் ஹீரோ குடும்பத்துக்கும் பகையே வருது . சிறப்பு . 

ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . 

ஆனால் சினிமா என்பது கேமரா மீடியம் என்பதையே மறந்து மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . இடைவேளையில் நாம்  ஒண்ணுக்குப் போகும்போதும் கூட ஸ்கிரீனில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் . 

படம் முடிந்து கிளம்பிய பிறகும் பின்னாடியே துரத்தித் துரத்தி வந்து பேசிக் கொண்டே இருக்கிறார்கள் . 

ஆனந்தி ஓவர் ஆக்டிங் உலக நாயகி ஆகி விட்டார் . ரோபோ ஷங்கர் உட்பட பலரும் அப்படியே . 

சரண்யா, ஜே பி , நீலிமா ராணி, அப்புறம் மலையாள வாசனையோடு பேசும் அந்த பாட்டி ஆகியோர் , சீமந்தத்துக்கு போக முடியாமல் நாயகியின் அண்ணனுக்கு பயப்படும் காட்சி அருமை .. 

— என்று சொல்லி முடிக்க விட்டால்தானே ! ஓவர் நீளத்துக்கு நீட்டி முழக்கி தடுத்து விடுகிறார்கள் . 

பாட்டுக்கு தேவை தொகையறா என்று ஒரு பாடல் துவங்குதே . எழுதின புண்ணியவான் யாருங்க ? பாட்டுக்கு தொகையறா தேவை இல்லீங்க . தொகையறா இல்லாமலும் பாட்டு இருக்கும் . அப்போ ? பாட்டுக்கு சிறப்பு தொகையறா ! . எழுதுறதுக்கு முன்ன யோசிச்சு எழுதுங்க சாமிகளா !

இது இப்படி என்றால் படத்தில்  ‘அண்ணனுக்கு பயமில்ல .. அப்பனுக்கும் பயமில்ல.. ஊருக்கும் பயமில்ல .. ஒலகத்துக்கும் பயமில்ல… வாடா ஓடிப்போலாம் ” என்று கதாநாயகி பாடுவது போல ஒரு பாடலை இயக்குனர் பூபதி பாண்டியன் எழுதி உள்ளார் .இப்படி ஒரு கருத்து மிக்க பாடலை எழுத  வேண்டும் என்று அவர் கேட்டு எந்தக் கவிஞரும்  எழுத மனமில்லாமல் தெறித்து ஓடி விட்டார்கள்  போலிருக்கிறது . அவரே எழுதி விட்டார் . டைட்டிலில் ‘கட்டாயக்கவிஞர் ‘ என்று  ஒரு (நாள்)பட்டப் பெயரையும் போட்டுக் கொண்டுள்ளார். 

அவரால முடிஞ்ச சமூக சேவ…  சமூக சேவ… 

போலீஸ் ஸ்டேஷன் சீனில் தேவர் மகன் பட பஞ்சாயத்து சீனின்  பாதிப்பு . 

விஜய் நடித்த ஒரு படத்தின் ஓப்பனிங் சீனை அப்படியே கிளைமாக்சில் திணித்து விட்டார்கள் . அதற்கு சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் கிளைமாக்ஸ் போல ஒரு பில்டப்பு வேறு . இதனால் எல்லாம் இந்தப் படத்தை மட்டமாக நினைத்து விடாதீர்கள் 

பின்னே? இப்படிஎல்லாம்  இருந்தும் இந்த வார படங்களிலேயே இதுதான் கொஞ்சம் பரவாயில்லை  என்றால் … மற்ற படங்களைப் பற்றி என்ன சொல்ல ?

அய்யா சாமி .. ஒழுங்கா ஸ்கிரிப்டு பண்ணுங்கப்பா .. பண்ணுங்கய்யா .. பண்ணுங்க—…….!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *