வட சென்னைப் பையன் ஒருவனுக்கும் வட இந்தியப் பெண் ஒருத்திக்கும் வட சென்னையில் 2002 மற்றும் 2003 காலகட்டத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படமாம் இது.
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், தமிழ்நாடு டிஜிட்டல் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
படத்தில் இடம் பெறும் சோகப்பாட்டு ஒன்று கவனம் கவர்ந்தது . இன்னொரு பாட்டில் நடிகை சுஜிபாலா கவர்ச்சி நடனம் ஆடுகிறார் .

” இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கும் அப்துல் ரகுமான் இதயம் , கிழக்கு வாசல் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர் . இப்போது ஒலிச்சித்திரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் .

இவரைப் போன்றவர்கள் பணியாற்றுவது இந்த பானு படத்துக்கு கிடைத்த சிறப்பு ” என்றார் .
ஜி.சேகரன் தன் பேச்சில் ” ஒரு ரயில்வே ஸ்டேஷன். அங்கே வழக்கமாக ஒரு தண்டவாளத்தில்தான் ரயில் வரும் . இன்னொரு தண்டவாளம இருக்கிறது . அதில் ரயில் வரவே வராது. இதை அறிந்த பலப் பல ஏழைக் குழந்தைகள் அந்த — ரயில் வராத தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு இருந்தன .
அப்போது வழக்கமாக ரயில் போகும் தண்டவாளத்தில் ரயில் வர , அந்த நேரம் பார்த்து என்கிருந்தோ வந்த வேறு ஒரு குழந்தை அந்த ரயில் போகும் தண்டவாளத்துக்குள் வந்து விட்டது . டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, பக்கத்தில் இருந்த இன்னொரு டிரைவர் , “அண்ணே! இந்த ஒத்தைக் குழந்தை ரயில்வே அமைச்சரின் குழந்தை “என்றான் .
உடனே டிரைவர் , ரயில்வே அமைச்சரின் குழந்தையைக் காப்பாற்ற , ரயிலே போகும் வழக்கம் இல்லாத – பல ஏழைக் குழந்தைகள் விளையாடும் அந்தத் தண்டவாளத்தில் வண்டியைத் திருப்பினான் . அந்தக் குழந்தைகள் எல்லாம் செத்துப் போயின .
அதுபோல்தான் தமிழ் சினிமாவிலும் நடக்கிறது .
பல சின்னப் படங்கள் ரிலீசுக்கான தேதியை முன்னரே அறிவித்து விட்டு பல நாள் காத்திருக்க, திடீரென ரிலீஸ் தேதி அறிவிக்கும் பெரிய படங்களுக்காக தியேட்டர்கள் போய் விட , சின்னப் படங்கள் எல்லாம் அந்த ஏழைக் குழந்தைகள் போல அடிபட்டு செத்துப் போகின்றன ” என்றார் .
பேசி விட்டு வந்து அமர்ந்த சேகரனிடம் அபிராமி ராமநாதன் எதோ சொல்ல “நீங்க அப்படிப் பேசினால் நான் மறுபடியும் எழுந்து விலாவாரியாகப் பேச வேண்டி வரும் ” என்றார் ஜி.சேகரன் .
அபிராமி ராமநாதன் பேசும் போது ” பெரிய படங்கள் வருடத்துக்கு இருபது வரும் . ஒவ்வொரு பெரிய படத்துக்கும் ஒரு வாரம் என்று வைத்துக் கொண்டாலும் இருபது வாரம்தான் பெரிய படங்கள் இருக்கும் . மீதி 32 வாரங்கள் திரையரங்குகளைக் காப்பாற்றுவதும் , ஏராளமான திரைக் கலைஞர்களுக்கு வேலை தருவதும் சின்னப் படங்கள்தான் ” என்றார் .
அதோடு முடிந்தது .