சினிஷ் இயக்கி இருக்கும் படம் பலூன் . உயரப் பறக்குமா ? பார்க்கலாம் .
தரமான படங்களை படைக்கத் துடிக்கும் அறிமுக இயக்குன இளைஞன் ஜீவா (ஜெய் ) , தன் மனைவி ஜாக்குலின் (அஞ்சலி)வேலைக்குப் போய் சம்பாதித்தும்,
பணம் போதாத நிலையில் கூட்டுக் குடும்பமாக உள்ள அண்ணனின் (சுப்பு பஞ்சு) பொருளாதாரத்தில் வாழ்கிறான் .
அதனால் அண்ணன் மற்றும் உறவினர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாகிறான் .
இந்த நிலையில் ரொம்ப நம்பிக்கை கொடுத்த தயாரிப்பாளர் ஒருவர் , இவன் சொல்லும் கதை நன்றாக இருந்தாலும் கூட ,
கதை பேசும் சமூகப் பிரச்னைகளால் அந்தப் படத்தை எடுக்கத் தயங்குகிறார் .
அதற்குக் காரணம் யாராவது சினிமா எடுக்க ஆரம்பித்தாலே அதில் புகுந்து பிரச்னை செய்து பணம் பார்க்க நினைக்கும் சாதி அமைப்புகள் .
எனவே ‘பேசாம ஏதாவது பேய்ப் படம் பண்ணு . அதற்குக் கதை கொடு;’ என்று தயாரிப்பாளர் சொல்ல , அதே முடிவுக்கு வருகிறான் ஜீவா
அதே நேரம் கிறிஸ்துமஸ் விடுமுறையும் வருவதால் மனைவி ஜாக்குலினுக்கும் விடுமுறை கிடைக்க ,
ஜாக்குலின் , அண்ணன் மகன் பப்பு (மாஸ்டர் ரிஷி) , இரண்டு உதவி இயக்குன நண்பர்கள் (யோகி பாபு, கார்த்திக்) ஆகியோருடன் சேர்ந்து கதை எழுத ஊட்டிக்குப் போகிறான் .
அங்கே இருக்கும் ஒரு பேய் வீடு பற்றி அறிகிறான் . அந்த வீட்டில் பல காலம் முன்பு சார்லி என்ற, பலூன் விற்பவன் ( இரண்டாவது ஜெய் ) இருந்ததாகவும் ,
அவன் செண்பகவல்லி என்ற பெண்ணை ( ஜனனி ) காதலித்ததாகவும் தவிர ஒரு சிறுமியை ( பேபி மோனிகா) தத்து எடுத்து வளர்த்ததாகவும் அவர்கள் அனைவரும் கொல்லப் பட்டதும் தெரிகிறது .
அவர்கள் அங்கே பேயாக இருப்பதும் சொல்லப் படுகிறது .
இந்த நிலையில் செத்துப் போன சிறுமியின் ஆவி பப்புவை பிடிகிறது . செண்பக வல்லியின் ஆவி ஜாக்குலினைப் பிடிக்கிறது.
தன் கணவன் சார்லியைப் பார்த்தால்தான் போவேன் என்று செண்பகவல்லியின் ஆவி சொல்ல , அது முடியாத நிலை .
காரணம் சார்லி வர வேண்டுமானால் ஜீவா சாக வேண்டும் . ஏனெனில் சார்லியின் மறு பிறப்புதான் ஜீவா என்ற திடுக்கிடும் உண்மை வெளிப்படுகிறது .
இப்படி ஒரு அதிர்ச்சிக்குப் பிறகு நடந்தது என்ன என்பதே இந்த பலூன் .
டைட்டில் போடும் விதத்திலேயே அசத்த ஆரம்பித்து விடுகிறார் இயக்குனர் .
படம் முழுக்க அழகான ஷாட்கள் , சிறப்பான ஃபிரேமிங் ,அழுத்தமான படமாக்கல் என்று , கைவசப்பட்ட திரைக்கதையை சிந்தாமல் சிதறாமல் படமாக்கி மனம் கவர்கிறார் இயக்குனர் சினிஷ்.
இவருக்குள் ஒரு நல்ல பிலிம் மேக்கர் இருப்பதை உணர முடிகிறது . வளர வாழ்த்துகள் .
டைட்டிலில் டைரக்ஷன் கார்டுக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் பெயரைப் போட்டு பெருமை தந்திருக்கிறார் இயக்குனர் . அதற்கேற்ப பின்னணி இசையால் பெரும் பலம் சேர்த்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா .
மர்மம்., வன்மம் , அவலம், எளிமை, இளமை , நெகிழ்வு , அமானுஷ்யம் என்று அத்தனை உணர்வுகளையும் தன் இசையால் மொழி பெயர்க்கிறார் யுவன் . ஒலி வடிவமைப்பும் மிக சிறப்பு
சரவணனின் ஒளிப்பதிவு நேசத்துக்குரியது . இருள் ஒளி ஆளுமை , வண்ணப் பயன்பாடு, துல்லியம் என்று எல்லா வகைகளிலும் ஸ்கோர் செய்யும் ஒளிப்பதிவு .
ரூபனின் படத்தொகுப்பும் சிறப்பு
இட்டை வேடங்களை தனக்கே உரிய பாணியில் ஜஸ்ட் லைக் தட் செய்திருக்கிறார் ஜெய் .
அஞ்சலி சிறப்பாக நடித்துள்ளார் . ஒரு இடைவேளைக்குப் பிறகு அவரிடம் இருந்து நல்ல குரல் நடிப்பையும் பார்க்க முடிகிறது .
யோகி பாபுவின் காமெடி பன்ச்கள் பாதிக்குப் பாதி தேறுவதால் படத்தில் காமெடி கலகலப்புக்கு பஞ்சமில்லை .
பப்புவாக நடித்து இருக்கும் மாஸ்டர் ரிஷி வாவ் … துறுதுறுப்பாய் அட்டகாசமாய் உற்சாகமாய், மிக சிறப்பாக நடித்துள்ளான் . அதுவும் எல்லோரையும் கலாய்க்கும் யோகி பாபுவையே இவன் கலாய்க்கும் காட்சிகள் செம செம .
இவற்றுக்கும் மேலாக டைரக்டரும் தன் பங்குக்கு வசன காமெடியால் கவர்கிறார் . உதாரணம் …
“கமல் படத்துக்கு பூஜை போட்டுட்டாரு . வா அங்க போய் பிரச்னை பண்ணுவோம் “
” பூஜைதான் போட்டு இருக்காரு . அங்க போய் என்ன பிரச்னை பண்ண முடியும்?”
“அவர் பூஜை போட்டாலே பண்ணலாம் யா .. “
உதவி இயக்குனராக வரும், படத்தின் நிஜ அசோசியேட் இயக்குனர் கார்த்திக் யோகியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் .
இதுவரை பல்வேறு பேய்ப் படங்களில் நாம் பார்த்த பல காட்சிகளையும் இந்தப் படத்தில் இன்னும் ஒரு முறை அழகான மேக்கிங்கில் கலர்ஃபுல்லாக பார்க்க முடிகிறது
நெகிழ்வான கிளைமாக்சுக்கு பிறகு வரும் அந்த கூடுதல் கிளைமாக்ஸ் … ஓர் அடடே சுவாரஸ்யம் .
அதன் முடிவு ..
ஹா ஹா ஹா ….
சினிமாக்காரர்களை எதிர்த்து அநியாயமாக பிரச்னை பண்ணி பணமோ புகழோ சம்பாதிக்க நினைப்பவர்களின் மீது.. இயக்குனருக்குள்ள பேய்த்தனமான கொலை வெறியைக் காட்டுகிறது .
மொத்தத்தில் பலூன்….கண்கள் விரிய அண்ணாந்து பார்க்கச் சொல்லும் கலர்ஃபுல் ஜாலம் .
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————
சினிஷ், யுவன் சங்கர் ராஜா , சரவணன் , மாஸ்டர் ரிஷி