உள்குத்து @ விமர்சனம்

ஜி.விட்டல் குமார் மற்றும் ஜி சுபாஷினி தேவி தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ், நந்திதா, பால சரவணன், ஸ்ரீமன்,  ஜான் விஜய், திலிப்  சுப்பராயன், சரத் லோஹித்சவா ,  நடிப்பில் , 

திருடன் போலீஸ் படத்தை  எழுதி இயக்கிய கார்த்திக் ராஜு இரண்டாவதாக எழுதி இயக்கி இருக்கும் படம் உள்குத்து . நம்பி வருபவனை முதுகில் குத்துமா  படம் ? பார்க்கலாம் . 
 
மீனவக் குப்பம் ஒன்றில் புதிதாக நுழையும் இளைஞன் ராஜா (தினேஷ்) , அங்கிருக்கும் சுறா சங்கர் ( பால சரவணன்) என்பவனுக்கு நண்பன் ஆகிறான் . அவனுடனேயே தங்குகிறான்.
 
சுறா சங்கரின் தங்கை கடலரசிக்கும் (நந்திதா) ராஜாவுக்கும் இயல்பாக காதல் உருவாகிறது . 
 
பெரிய காரில் இருந்து இறங்கும் பணக்காரர் ஒருவரிடம் ராஜா ஒருமுறை கோபமாக பேசிக் கொண்டு இருப்பதைப் பார்க்கும் சுறா சங்கர் ,
 
‘பணக்கார வீட்டுப் பையன் ராஜா  அப்பாவிடம் கோபித்துக் கொண்டு வந்திருக்கிறான் ; கொஞ்சநாளில் சரியாகி விடும் .
 
தங்கை பணக்கார வீட்டில் வாழ்க்கைப் படட்டும்’ என்று சந்தோஷப்படுகிறான் . 
 
இந்த நிலையில் கடற்கரையில் சல்லாபித்துக் கொண்டு இருக்கும் ஒருவனை சுறா சங்கர் கண்டிக்க, அவனை ராஜா துவம்சம் செய்கிறான் .
 
ராஜாவின்  அடிதடி பலம் கண்டு சுறா சங்கர் வியக்கிறான் . அப்போதுதான் தெரிகிறது , சுறா சங்கருக்காக ராஜா அடித்தது சாதாரண ஆளை அல்ல ….  கந்து வட்டி,  ரவுடித்தனம், ஏகப்பட்ட கொலைகள்  செய்து கொண்டு ,
 
உடல் பலம், ஆள் பலம் , பணபலத்தோடு , சுத்துப்பட்டு எல்லா குப்பங்களையும் கட்டி ஆளும் காக்கா மணி என்ற (சரத் லோகித்சவா ) கொடூர தாதாவின் மகனும்
 
அப்பாவுக்கு சற்றும் சளைக்காத கொடூரனுமான சரவணனின் (திலீப் சுப்பராயன்) கையாளைதான் ராஜா அடித்துள்ளான் என்பது, 
 
சுறா சங்கருக்கு , குப்பத்துத் தலைவர் ( செஃப் தாமு ) மூலம் தெரிய வருகிறது . சுறா சங்கர் பயப்படுவது போலவே தீப்பிடிக்கிறது . 
 
சரவணன் தன்  பெரும்பலம் மூலம் ராஜாவை தேட , அதன் விளைவாக  காக்கா மணியும் ராஜாவை தேட , அவனை காப்பாற்றுவது பெரும் பிரச்னை என்று சுறா சங்கர் நடுங்க , 
 
விவகாரமோ தலை கீழாக விஸ்வரூபம் எடுக்கிறது . 
 
ராஜா குப்பத்துக்குள் வந்ததே காக்கா மணி மற்றும் சரவணனின் பெரும் சேனையை ஒற்றை ஆளாய் போரிட்டு சிதற அடிக்கத்தான் !
 
இதில் உள்ள உள்குத்து என்ன ? ராஜா குத்தும் உள்குத்து என்ன என்பதை வெண்கலக் கடையில் யானை புகுந்த கதையாய்  சொல்லும் படம்தான்  இந்த உள்குத்து . யதார்த்த வாழ்வில் இருந்து இயல்பாக எடுக்கப்பட்ட செண்டிமெண்ட், கிளைமாக்ஸ் பகுதியில் சீரியசையும் காமெடியையும் தைரியமாக  மிக்ஸ் பண்ணி அசத்தியது என்று தில்லாக தனது முதல் படமான திருடன் போலீஸ் படத்தைக் கொடுத்த கார்த்திக் ராஜு , 
 
இந்த உள்குத்து படத்திலும் அப்படியே ஒரு இயல்பான பிரச்னையை கதையை எடுத்துக் கொண்டு அதற்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்து அட்டகாசமான படமாக்கலோடு சிறப்பாக இயக்கி,  இரண்டாவது படத்திலும்  வெற்றி பெறுகிறார் . 
 
எல்லோரும் கந்து வட்டிப் பிரச்னையில் வாங்கியவர் கொடுப்பவர் சம்மந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பேசிக் கொண்டு இருக்க, அதில் இருந்து மாறுபட்டு …
 
அப்படி கந்து வட்டிக் கொடுப்பவரிடம் இருந்து பணம் வசூலித்துக் கொடுக்கும் நபர்கள் ( ஜான் விஜய், ஸ்ரீமன்) , கடன் வாங்கியவரின் நிலைக்காக பரிதாபப்பட்டதால் நடப்பது என்ன என்று, 
 
ஓர் வித்தியாசமான சிந்தனையில் கதையை அமைத்துக் கவர்ந்து,  தன்னை தக்க வைத்துக் கொள்கிறார் கார்த்திக் ராஜு  . 
 
ஆரம்பத்தில் ஒரு ஃபீல் குட் படமாக ஆரம்பித்து, 
 
சற்றே புன்னகை அப்புறம் வாய் விட்டு சிரிக்க வைக்கும் காட்சிகள் , என்று பயணிக்கும் படம் … 
 
சரவணின் கையாளை ராஜா அடிக்கும் காட்சியில் ராக்கெட் ஏறுகிறது . 
அதன் பிறகு  பர பர என்று பயணிக்கிறது . அதே வேகத்தில் காமெடி காட்சிகளும் கலகலக்க வைக்கின்றன .
 
முக்கியமான இடத்தில் நிறுத்திக் கதை சொல்லி அதிர வைத்து நெகிழ வைக்கும் இயக்குனர் கார்த்திக் ராஜு மீண்டும்  விறுவிறுப்பாக படத்தைக் கொண்டுபோய் ,
கடைசியில் நிஜத்தில்  ரவுடித்தனம் செய்வோரிடம் சில கேள்விகளை முன் வைத்து , நல்லவர்களுக்கு ஆதரவாக நின்று படத்தை முடிக்கிறார் . 
 
அந்த கேள்விகளோடு படம் பார்ப்பவர்கள் எழுந்து வர முடியும் . அதுதான் உள்குத்து படத்தின் வெற்றி .பொதுவாக ஒரு கமர்சியல் தமிழ்  சினிமாவில் ஒரு காட்சியின்  கடைசியில் என்ன நடக்குமோ  அதை  இந்தப் படத்தில்  பல காட்சிகளில்  ஆரமபத்திலேயே சொல்வது, 
 
இந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜுவின் சிறப்பான திரைக்கதை உத்தியாக ஜொலிக்கிறது . இதுதான் இந்தப் படத்தில் மிக முக்கியமான கார்த்திக் ராஜு ஸ்பெஷல் ! 
 
உதரணமாக சரவணன் வந்து ராஜாவிடம் ‘என் ஆளு மேலே கை வைப்பியா ?” என்று கேட்டு முடிப்பதற்குள் அவன் மேலேயே அடி விழும் .
 
இது போல படம் முழுக்க , காட்சி , காட்சித் தொகுப்பு என்று படம்  முழுக்க வைத்து இருப்பதால்தான் ஜெட் வேகத்தில் போகிறது படம் .
 
சபாஷ் கார்த்திக் ராஜு . !
 
                                                                                                                      இயக்குனர் கார்த்திக் ராஜு
அதே போல ஒரு படத்தில் கடல் புறப் பின்னணியைக் கையாள்வது என்பது ஓர் இயக்குனருக்கு சிரமமான விஷயம் . பின்னாடி கடல் இருக்கும் . ஆனால் அந்த உணர்வு இருக்காது . 
 
இது கடல் புறப் பின்னணியில் அமைந்த படம்தான்  . மீனவர்களுக்கான தனிப்பட்ட பிரச்னையை அணுகும் படம் இல்லை . 
பொதுவாக உழைக்கும் வர்க்கத்தின் பிரச்னயை சொல்லும் படமே இது  .
 
எனினும் கடல் புறப் பின்னணியை , ஒளிப்பதிவாளர் பி கே வர்மாவின் சிறப்பான ஒளிப்பதிவின் துணையோடு அற்புதமாகக் கையாண்டு இருக்கிறார் இயக்குனர் . 
 
படத்தில் தீப்பொறி பறக்கும் சண்டைக்காட்சிகள் அமைத்து அசத்தி இருப்பதோடு சரவணனாக சிறப்பாக நடித்துள்ளார் திலீப் சுப்பராயன் .கடல் புறத்தை சுருட்டி விழுங்கி கண்களுக்கு விருந்தாக்கும்  பி கே வர்மாவின் ஒளிப்பதிவு படத்துக்கு யானை பலம் தருகிறது என்றால், 
 
மனசின் மர்மப் பக்கங்களுக்கு நுழைந்து நோண்டும் அபாரமான – ஜஸ்டின்  பிரபாகரனின் – –  பின்னணி இசை படத்துக்கு சேனை பலம் தருகிறது .
 
தினேஷ் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார் . 
 
அட்டகாசமான காமெடி வசனங்கள் மட்டுமல்லாது ரீயாக்ஷன்கள் மூலமும் காமெடியில் கலக்குகிறார் பால சரவணன் . 
 
காக்கா மணியாக வரும் சரத்  லோகித்சவா வில்லனாக மிரட்டுகிறார் . நந்திதா   ஒகே . ஜான் விஜய் , சாயா சிங் , ஸ்ரீமன் குறை  ஒன்றும் இல்லை .
 
பிரம்மாண்டமான உயரம்  , உருவம் படைத்த சரத்தை,  தினேஷ் அடித்து வீழ்த்துவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கும் விதத்தில் ஜொலிக்கிறார் இயக்குனர்  கார்த்திக் ராஜு . 
 
அதற்கு ஜஸ்டின் பிரபாகரன், திலீப் சுப்பராயன் , பி கே வர்மா மூவரும் உதவுகிறார்கள் . 
 
ரவுடியா இருந்து என்ன சாதிச்சீங்க என்ற கேள்வி அபாரம் . 
 
உள்குத்து … வெற்றிக் குத்து . 
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
கார்த்திக் ராஜு, ஜஸ்டின் பிரபாகரன், திலீப் சுப்பராயன், பி.கே.வர்மா   

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *