போகி @ விமர்சனம்

Vi சினிமா குளோபல் நெட் வொர்க்ஸ் அண்ட் லைக் சார்பில் விஜயசேகரன் தயாரித்து எழுதி இயக்க, நபி நந்தி, சரத், சுவாசிகா , பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், சங்கிலி முருகன், எஸ் பாஸ்கர் நடிப்பில் வந்திருக்கும் படம் .  

ஒரு போட்டோ எடுக்க……  குளித்து முடித்து எண்ணெய் வைத்து தலை சீவி பவுடர் அடித்து சாமி கும்பிட்டு விபூதி குங்குமம் வைத்து பஸ் ஏறி ஸ்டுடியோ போய்,….. போட்டோ எடுப்பவரையும் கேமராவையும் பிரம்மிப்பாகப் பார்த்து … போட்டோ எடுத்து வந்து பிரேம் போட்டு சுவரில் மாட்டுவது….  ஒரு திருவிழா போல இருந்தது உண்டு . 

ஆனால் இன்று செல்போன் கேமரா  , பிளக் பாயின்ட் கேமரா  , பட்டன் கேமரா, ஒட்டும் ஸ்டிக்கர் கேமரா,  விரல் இடுக்கில் ரகசிய கேமரா என்று வந்த பிறகு, 

அதன்  வேகத்தில் பாலியல் வக்கிரமும் பெருகிய நிலையில்  இன்று தனிமை என்பதே இல்லாமல் போய் விட்டது . ஒருவரின் நிர்வாணம் அவரே அறியாமல் கேமராவில் பதிவாகிறது . பெண்களின் நிர்வாண வீடியோக்கள் ஆண்களின் நிர்வாண வீடியோக்கள் கூட பெரும் பணம் சம்பாதித்து தருகிறது . 

ஒரு பெண்ணின் பாத்ரூம் மற்றும் படுக்கையறை நிகழ்வுகளை லைவில் யாரோ எங்கோ வந்து ரசித்துக் கொண்டே இருக்கிறார்கள் . பாதிக்கப்பட்டவருக்கே தெரியாமல் இதைச் செய்யும் நபர்கள் பெரிய மாபியாக்களாக கோடிகளில் புரள்கிறார்கள். 

அப்படி சிக்கியவர்களை பிளாக் மெயில் செய்து மீண்டும் மீண்டும் பாலியல்  ரீதியாகப் பயன்படுத்துவதோடு, அந்த பெண்களை வைத்தும் , வீடியோக்களை வைத்தும் பணம் சம்பாதிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.   

– என்பதை சொல்ல நினைக்கிறது இந்தப் படம்.

அதோடு பிணவறையில் பெண்களின் நிர்வாண உடல்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் மனித மிருகங்கள் என்பது மட்டுமின்றி , செத்த பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி போட்டோ மற்றும்  வீடியோ எடுத்து . தூங்கும் பெண்கள் போலக் காட்டி பணம் சம்பாதிக்கும் அராஜகத்தையும் படம் நாடகத்தனமாக  சொல்கிறது . 
மருத்துவ வசதி இல்லாமல் மலை கிராமத்தில் இருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவி( போன ஜென்மத்து லப்பர் பந்து சுவாசிகா) மருத்துவம் படிக்க வந்து , பிணவறை போட்டோ எடுக்கும் கூட்டத்தை அம்பலப்படுத்த முயல்கிறாள் . 

அவளுக்கு ஒரு பாசமுள்ள அண்ணன்  அவனுக்கு ஒரு சின்ன வயசு காதலி, என்று படம் போக , சொத்தையாக , சாரி மொத்தமாக என்ன ஆச்சு என்பதே படம். 

எடுத்துக் கொண்ட கதை ஒரு கடல் . அதில் ஒரு துளியை எடுத்து அதில் பாதியை வீணாக்கி விட்டு , மீதி பாதியில் பாதியை ஆவியாக்கி விட்டு கால்வாசியை வைத்து ஒரு  எரி கட்ட ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதுதான் இந்தப்  படம். 

பக்குவம் இல்லாத காட்சிகள், குழந்தைத்தனமான இயக்கம் மற்றும் நடிப்பு , எந்த விஷயத்தை எப்படி சொல்வது என்ற தெளிவு இல்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் வாய் வைக்கும் திரைக்கதை, எதை முதலில் சொல்வது , எந்த வரிசையில் சொல்வது என்ற தெளிவு இல்லாத திரைக்கதை.

செல்போனில் பேசும் ஒரு சீன் பெண்ணுக்கு (பூனம் கவுர்)  எல்லாம் ஒரு பாட்டு வைக்கும் அதிசயம் எல்லாம் இந்தப் படத்தில்தான் நடக்கும் . எம் எஸ் பாஸ்கர் ஒரு சீன வந்தார். ஏன் வந்தார். எதுக்கு வந்தார்? அது சீரியஸா காமெடியா ? ஒரே குஷ்டமப்பா. 

நாயகன் சிறப்பாக இருக்கிறார் நடிக்கிறார் . 

சுவாசிகா  வழக்கம் போல சிறப்பு . 

ஏனப்பா .. ஆயிரக்கணக்கான கேமராக்கள் பற்றி படம் எடுக்கும் உங்களுக்கு அந்தப் படத்தை எடுக்க ஒரு நல்ல கேமரா(மேன்) கிடைக்கவில்லையா? அப்படி ஒரு ஒளிப்பதிவு ! 

இந்தக் குற்றவாளிகளை எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பினால் (நான் படத்துல வர்ற கதாபாத்திரங்களை சொன்னேன்)  என்ன நடக்கும் என்பது பற்றி ஒரு பெண் பேசும் காட்சி மட்டும் ஆறுதல். 

கடைசியில் , போகி போல உல்லாசமாக வாழ்ந்தபடி ஆபாசத்தை வியாபாரம் செய்யும் அந்த மனித மிருகங்களை,  போகி அன்று பழையதை எரிப்பது போல எரிப்பார்கள் . அதனால்தான் படத்துக்கு போகி என்று பெயர் என்று பார்த்தால்..  அதுவும் நடக்கவில்லை. குற்றவாளிகளை ஒண்ணும் செய்ய முடியாது என்ற உயரிய தத்துவம் சொல்லி படத்தை முடிக்கிறார்கள் 

அப்புறம் என்ன வெண் பொங்கலுக்கு இந்தப் படத்துக்கு  போகி என்று பெயர் வைத்தார்கள் என்று புரியவில்லை.  . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *