உசுரே @ விமர்சனம்

ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் மவுலி எம். ராதா கிருஷ்ணா தயாரிக்க, டீஜே அருணாச்சலம், ஜனனி , மந்த்ரா, ஆதித்யா கதிர், தங்கதுரை, கிரேன் மனோகர், பாவல் நவகீதன், மெல்வின், ஜெயபிரகாஷ் நடிப்பில் நவீன் டி கோபால் எழுதி இயக்கி இருக்கும் படம். 

தமிழர்களும் தெலுங்கர்களும் வாழும் சித்தூர் . அங்கு உள்ள தமிழ்க் குடும்பங்கள், ஒரு குடும்பத்தில் அப்பா (கிரேன் மனோகர்) அம்மா (செந்தி குமாரி) ஒரே மகன் டி ஜே அருணாச்சலம்.

எதிர்வீட்டில் ஒரு குடும்பம் மகள் (ஜனனி) அம்மா (மந்த்ரா) அப்பா சிறு வயதிலேயே வீட்டை விட்டு  ஓடி விட்டார். அம்மா கொஞ்சம் அடாவடிப் பேர்வழி. ஆண்கள் இல்லா வீடு என்பதால் கண்டிப்பாக வளர்ப்பவள், மகளை யாரும் பார்த்தாலே பார்த்தவன் கண்ணை நோண்டி விடுவாள் 

நண்பர்கள் சிலர் அவளை எப்படியாவது சம்மதிக்க வேண்டும் என்று போராட, முடியாமல் தோற்ற ஒருவன் விடுக்கும் சவாலை  நாயகன்  ஏற்கிறான் 

ஒரு நிலையில் பெண்ணும் காதலில் விழ, பத்து லட்ச ரூபாய் தந்தால் திருமணம் என்று பெண்ணின் அம்மா சொல்ல,  நாயகன் வீட்டை அடகு வைத்து நாயகன் கொடுக்க, நெகிழ்ந்து போன மாமியார் , ”என் பெண்ணின் மேல் உனக்கு உள்ள காதலை சோதிக்கவே நான் இப்படி சொன்னேன் . வந்து பணத்தை எடுத்துக் கொள் ”என்று சொல்ல, அடுத்து நடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த நடந்தது என்ன என்பதே படம். 

நாட்டில்  பல இடங்களில் நடக்கும் சம்பவங்களை சொல்லி அதிர வைத்து படத்தை முடிக்கிறார் இயக்குனர் ஆனால்…. 

நாயகன் அருணாச்சலம் உணர்ந்து நடிக்கிறார் , 

ஜனனி இரண்டு மூன்று ஸ்டாக் எக்ஸ்பிரஷன் களை மட்டும் வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி காட்டிக் கொண்டிருந்தாலும் அவரது தோற்றம், குரல் , பிக் பாஸ் நல்லவள் இமேஜ் எல்லாமும் அவருக்கு பொருத்தம் . குளோசப் களில் திருவிழாக் கடைகளில் திறந்த மேனிக்கு விற்கப்படும் லட்டு மாதிரி இருக்கிறார் . 

கண்டிப்பு என்ற பெயரில் சிரித்த முகமாக பேசிக் கொண்டு திரிகிறார் மந்த்ரா,.கடமைக்கு நடித்த கதை. 

கிரேன் மனோகர்,  செந்தி குமாரி, மற்றும் நண்பர்கள் எல்லாரும் ஓகே, 

எண்பதுகளில் கவிதைத்தனமாக எடுக்கப்படும் படங்களின் பாணியில் படம் போகிறது . அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட் திருப்பம், அதிர்ச்சி, சமூக விழிப்புணர்வு ஏற்பட்டாலும் அதுவரை காட்சிகள் மூலம் ஏற்பட்ட உணர்வு குவியலுக்கும் ஜனனி நடித்த விதத்துக்கும் ஏற்ற விதமாக இல்லை. ஏமாற்றமே மிஞ்சுகிறது  தப்பான கிளைமாக்ஸ் என்று சொல்லும் அளவுக்கு அதற்கு முந்தைய காட்சிகளின் படமாக்கல். 

அப்படிக் காட்டி இப்படி சொன்னால்தான் ஆடியன்ஸ் ஷாக் ஆவர்கள் என்று நம்பி இருக்கிறார்கள் . ஆனால் ஒரு குழந்தை பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை பறித்துக் கொண்டு போன கதையாகப் போய்விட்டது கிளைமாக்ஸ் .  

அதுவரை எண்பதுகளின் காதல் படத்தை பார்க்கும் உணர்வு.  எதிர திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் காதலனை கோலம் போட வரும் காதலி தண்ணீர் தெளித்து எழுப்பாததும் , அவன் ” மாவெடுத்து பூக்கோலம் போட்ட புள்ள நீதாண்டி, மனசுக்குள்ள கோலம் போட நானிருக்கேன் வாயேண்டி …” என்று பாடாதது ஒன்றுதான் பாக்கி .

மார்க்கி சாயின் ஒளிப்பதிவு , கிரண் ஜோஸ் இசை, மணிமாறன் படத் தொகுப்பு யாவும் நேர்த்தி 
படத்தின் மிகச் சிறப்பான விஷயம் சித்தூர் பின்னணியும் அதன் தமிழும் தெலுங்கு சேர்ந்த பேச்சுதான் , அதுபோல படத்தின் தயாரிப்புத் தரமும் சிறப்பு. தயாரிப்பாளர் மவுலி எம் ராதா கிருஷ்ணாவும் பாராட்டுக்குரியவர். தயாரிப்பின் தரம் படத்தில் தெரிகிறது . பாராட்டுகள். 

சித்தூருக்கு என்று ஒரு உணர்ச்சிகரமான வரலாறு உண்டு 

 மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தமிழ் நாட்டுக்கு வரவேண்டிய சித்தூர் மாவட்டமே, காமராஜர் பெரியார் கம்யூனிஸ்டுகள் இவர்களின் பாராமுகம் மற்றும் வஞ்சகம். அன்றைய ஜனாதிபாதியான எஸ் ராதா கிருஷ்ணனின் ஆதரவு  , நேருவின் தமிழர் விரோத போக்கு போன்றவற்றால் ஆந்திராவுக்கு போனது ஓர் அவல வரலாறு .

சித்தூரின் பின்னணியில் என்னிடமே ஒரு கமர்ஷியல் தியேட்டரிக்கல் பரபரபரப்பன காதல் காமெடி செண்டிமெண்ட் ஸ்கிரிப்ட் இருக்கிறது.   நான் இயக்குவதற்காக  தயாரிப்பாளர் தேடலில் இருக்கிறேன் .

அப்படி இன்றைய ரசிகனை கட்டிப் போட எதுவும் இந்தப் படத்தில் இல்லை. சொன்னதை சிறப்பாக சொல்கிறார்கள் ஆனால் என்ன சொல்கிறோம் என்பதுவும் படத்தின் வெற்றிக்கு முக்கியம் . 

தொடரும் உண்மை சம்பவம் என்ற வகையில் ஒரு சிறு விசயத்தை வைத்து அதுவே போதும் என்று தவறாக நம்பி இருக்கிறார்கள். அது போதவில்லை.உண்மை சம்பவம் என்பதை படத்தில் சொல்லி இருக்கவேண்டும் . அது பலன் கொடுத்து இருக்கும, காதல் பிச்சைக்காரன் மாதிரி . அதுவும் இல்லை  

சரி…. இதுதான் கதை என்றால் அந்த திருப்பத்துக்கு முந்தைய படமாக்கல் முறை இந்த கிளைமாக்சுக்கு ஏற்ற மாதிரி இல்லை, பருப்பு சாம்பாரில்  திடீரென்று கோழி குருமாவைக் கொட்டிய மாதிரி ஒரு வேண்டாத அதிர்ச்சியே கிடைக்கிறது . 

சிவாஜி நடித்த புதிய பறவை போன்ற படங்களைப் பார்த்தால் இது போன்ற கதைகளை எப்படி கையாள்வது  என்பது  புரியும் .

உசுரே … போகாமல் இருக்கட்டும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *