ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்க , விஷ்ணு பிரியன் — அஸ்வினி ஜோடியாக நடிக்க,
அட்டக் கத்தி தினேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க,
பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய வ.கீரா எழுதி இயக்கி இருக்கும் படம் மெர்லின்.
படத்தின் சிறு முன்னோட்டம் மற்றும் விளம்பரப் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் மகிழ் திருமேனி, வசந்த பாலன், மீரா கதிரவன், பா. ரஞ்சித், தங்கர் பச்சன் நடிகர் ஆரி மற்றும் படக் குழுவினர் .
பொல்லாதவன் படத்தில் நடித்த முருகதாஸ் ஒரு ஆங்கிலப் பாடலை சோகத்தோடு பாடுவது போல அமைந்த பாடல் பேய்க் கதை சம்மந்தப்பட்ட காட்சிகளோடு வித்தியாசமாக இருந்தது .
அதில் விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பல நடிக நடிகையரும் நடித்து இருந்தது சிறப்பு
கூத்துக் கலைஞர்கள் மெர்லின் படம் பற்றிப் பேசுவது போன்ற சிறு முன்னோட்டமும் வித்தியாசம் .
வரவேற்றுப் பேசிய இயக்குனர் கீரா ” இது ஒரு வித்தியாசமான பேய்க்கதை , என் சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அமானுஷ்ய அனுபவத்தில் இருந்து உருவான கதை இது ” என்றார்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி
” நல்ல குழு இது . கீரா தொடர்ந்து போராடுபவர். இந்தப் புரோமோ பாட்டுக்கு நடிக்க என்னை அழைத்த போது படப்பிடிப்பு காரணமாக என்னால் முடியாமல் போனது .
அதற்கு பதிலாக இங்கு வந்துள்ளேன். படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .
மீரா கதிரவன் பேசும்போது
” மிக வித்தியாசமான் கதையோடு நல்ல மண் சார்ந்த அடையாளங்களோடு வந்து இருக்கும் இந்தப் படம் வெற்றி பெறட்டும் ” என்றார் .
கபாலி இயக்குனர் பா. ரஞ்சித் தன் பேச்சில்
” கீரா நடத்திய கலகம் அமைப்பில் இருந்தவன் நான் . அவரது கருத்துகளால் கவரப்பட்டவன் . இந்தப் படம் அவருக்காக ஓட வேண்டும். ” என்றார் .
மகிழ் திருமேனி பேசும்போது ” வித்தியாசமான தோற்றம் காட்டும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் . இங்கே நடிகர் ஆரியைப் பார்க்கிறேன் . தொடர்ந்து போராடிக் கொண்டு இருப்பவர் .
சினிமாவில் ஜெயிக்க இரண்டு வழிகள் உள்ளன . முதல் படத்திலேயே ஓகோ என்ற வெற்றியைப் பெற்று விடுவது . இது சிவாஜி வழி.
இன்னொன்று படிப்படியாக அங்குலம் அங்குலமான உயர்வது . இது எம் ஜி ஆர் வழி . ஆருக்கு எம் ஜி ஆர் வழிதான் அமையும் போல இருக்கிறது . வாழ்த்துகள் ” என்றார் .
நாயகனாக நடித்துள்ள விஷ்ணு பிரியன் பேசும்போது
” கடந்த பத்து வருடத்தில் எவ்வளவோ போராடி விட்டேன் . திருப்தி தராத வெற்றிகளை விட ,
வேலையை ஒழுங்காக செய்தோம் என்ற திருப்தியை தரும் தோல்விகள் மேல் .
ஆனால் இந்தப் படத்தில் எனக்கு திருப்தியும் வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன் ” என்றார் .
படத்தை வாழ்த்திப் பேசிய வசந்த பாலன் தொடர்ந்து
” ரஞ்சித் போன்றவர்கள் கபாலி போன்ற ;படங்களை தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை ஒலிக்கும் வகையில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் ” என்றார் .
தங்கர் பச்சான் தனது பேச்சில் “என்னிடம் உதவியாளராக இருந்து வந்தவர்களில் உணர்வும் நோக்கமும் உள்ள படைப்பாளி கீரா. அவரது முயற்சிகள் தோற்கக் கூடாது .
உருப்படி இல்லாத குப்பைப் படங்கள் எல்லாம் ஓடுகின்றன . ஓடட்டும். .மகிழ்ச்சிதான் .
அதே நேரம் கீரா போன்ற அர்த்தமுள்ளவர்கள் உருவாக்கும் படைப்புகளில் சில தவறுகள் இருந்தாலும் அவற்றை புறம் தள்ளி அவரது படைப்பை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் ” என்றார் .