பைசன் காளமாடன் @ விமர்சனம்

அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோ சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், பா. ரஞ்சித் , அதிதி ஆனந்த் தயாரிக்க, துருவ் விக்ரம் , பசுபதி, அமீர் , லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 
 
‘பிற்பட்ட சாதி ஆட்கள் தாழ்த்தப்பட்ட சாதி மக்களை வெட்டினாலும் , தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் பதிலுக்கு அவர்களை கிள்ளக் கூடக் கூடாது; அப்படி கிள்ளிவிட்டால் தாழ்த்தப்பட்ட சாதி ஆட்களில் நாலு பேர் கொலை செய்யப்படுவார்கள் . நாற்பது வீடுகளும் கொளுத்தப்படும் ..
 
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டின் சிறுநீர் ஒரு துளி பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்களின் மேல் பட்டு விட்டாலும் அந்த ஆடு அங்கேயே குத்திக் குத்தி கொலை செய்யப்படும். . தவிர ஆட்டின் உரிமையாளர்களான முதியவர்கள் பெண்கள் உட்பட அனைவரும் அடித்து நொறுக்கப்படுவார்கள் என்ற நிலை யில் (படத்தில் சொல்லி இருக்கும்படி)…
 
 தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடி பகுதியில் 1990 ஆம் ஆண்டு தாழ்ந்தப்பட்ட கிராமம் வனத்தி, பிற்படுத்தப்பட்ட மக்கள் கிராமம் தேமாங்குளம். 
 
அந்தப் பகுதி மக்களுக்கே கபடிதான் உயிரில் கலந்த ‘தேசிய’ விளையாட்டு. அதனாலும் அங்கு சாதிய மோதல்கள் நிகழ்வது உண்டு . அதன் பாதிப்புகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொடர்வதும் உண்டு . 
 
தாழ்த்தப்பட்ட கிராமத்து மக்களின் குல தெய்வமான காளமாடன் (நந்தீஸ்வரர் என்ற கடவுளுக்கு முன்னவர் . மூத்தவர்) கோவிலின் பூசாரி ஒருவர் (பசுபதி) அவரது மகன் கிட்டான் (துருவ் விக்ரம்). மகள் (ரஜிஷா விஜயன் ) 
 
கிட்டானுக்கு பெரிய கபடி வீரன் ஆக வேண்டும் . நாட்டுக்காக ஆடி ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை. 
 
கிரிக்கெட்டில் நன்றாக ஆடி இலங்கையை இந்தியா ஜெயித்தால் தமிழக மீனவர்களை கடற்படை சுடுவது போல , இதற்கு முன்பு கபடி ஆட்டத்தில் சாதனை சாதனை படைத்த சமூக வீரன் ஒருவனை, பிற்படுத்தப்பட்ட சாதி வெறி ஆட்கள் வெட்டிக் கொன்றதை பார்த்த காளமாடன் கோவில் பூசாரிக்கு, மகனுக்கும் அந்த நிலை வரக் கூடாது என்ற பயம் . எனவே கிட்டானுக்கு கபடி வேண்டாம் என்பதில் உறுதியாக நிற்கிறார் 
 
அதே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கபடி வீரன் ஒருவனுக்கு கிட்டானைப் பிடிக்காது. அதனால் கிட்டானின் குடும்பத்தையும் அவனுக்குப் பிடிக்காது கிட்டான் கபடியில் முன்னேறக் கூடாது என்று தாழ்த்தப்பட்ட சமூக கபடி வீரனே நினைக்கிறான் . ஆனால் அவன் தங்கை (அனுபமா பரமேஸ்வரன்) கிட்டானைக் காதலிக்கிறான் . எனவே இரு குடும்பத்துக்கும் தனிப் பகையும் எழுகிறது. . 
 
பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர் கந்தசாமி (லால்), தாழ்த்தப்பட்ட மக்களின் சாதித் தலைவர் பாண்டியராஜா ( அமீர்). இருவரும் வேறு தங்கள் கவுரவத்துக்காக இரு சமூக மக்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் . 
 
 பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் (மதன்) வேறுபாடு பாராமல் கிட்டானுக்கு உதவுகிறார் . . கிட்டானின் தந்தையை சம்மதிக்க வைத்து கபடி ஆட வைக்கிறார் . கிட்டான் தனது ஊருக்கும் வெளியே வேறு வேறு அணிகளில் விளையாடி உயர்கிறான் . 
 
உடற்பயிற்சி ஆசிரியர் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர் கந்தசாமி வைத்திருக்கும் அணியிலேயே கிட்டான் விளையாடுகிறான் . அவரும் கபடி என்று வந்து விட்டால் சாதிபேதம் பார்க்காத அளவுக்கு கபடியின் காதலராக இருக்கிறார் . 
 
இந்த நிலையில் கந்தசாமிக்கும் பாண்டியராஜாவுக்கும் நடக்கும் வழக்கமான சண்டை அதன் விளைவுகள் இவற்றால் கிட்டானுக்கு தரம் சங்கடம் ஏற்படுகிறது . யார் உண்மையான நண்பர்கள் யார் என்று புரியாத குழப்பம். 
 
அதன் பின்னரும் சொல்ல முடியாத கஷடங்களை அவமானங்களை தடைகளை துரோகங்களை அடி உதையை தாங்கி  முன்னேறி இந்திய கபடி அணியில் இடம் பெற்று,  ஜப்பானில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடப் போனால்…
 
 பாகிஸ்தானும் இந்தியாவும் ஆடும் முதல் மேட்ச்சில்  கிட்டானுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆடாமல் ஜெயிக்காமல் வந்தால் ஊருக்குள்ளே நுழைந்தால் உயிரோடு இருக்க முடியாது  என்ற நிலையில் , 
 
கிட்டானுக்கு என்ன நடந்தது? சாதி வெறி என்னும் மலையை சுமந்தபடியே தன்னை நிரூபிக்க ஓடிய கிட்டான் இலக்கை அடைந்து வென்றானா ? இற்று விழுந்தானா என்பதே இந்த பைசன் காளமாடன் 
 
ஜப்பானில் கிட்டானுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதில் துவங்கும் படம் அடுத்தடுத்து  பிளாஷ்பேக்குகளில் முன் கதையாக சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் என்ன நடந்தது என்பதை சொல்லி படம் நிறைகிறது. 
 
தலித் இளைஞனும் சிறந்த கபடி வீரருமான மணத்தி கணேசன் என்பவரின் வாழ்வில நடந்த சில உண்மை சம்பவங்களோடு கற்பனைகளையும் சேர்த்து இந்தப் படத்தை எழுதி இருப்பதாக படத்தின் துவக்கத்தில் சொல்கிறார் மாரி செல்வராஜ் , 
 
படம் பார்க்கும் போது உங்களுக்கு கந்தசாமி கேரக்டரில் வெங்கடேசப் பண்ணையாரும் பாண்டியராஜா கேரக்டர் பசுபதி பாண்டியனும் நினைவுக்கு வந்தால் அதற்கு கம்பெனி  எந்த வகையிலும் பொறுப்பு  ஏற்காது 
 
உணர்வும் உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் கொண்ட அழகியலோடு , நுண்மான் நுழைபுலங்களோடு (nuances) சிறப்பான இயக்கத்தில் படத்தைப் படைத்துள்ளார் மாரி செல்வராஜ் , பொதுவாக எல்லாப் படங்களிலுமே சமரசம் இல்லாத கடின உழைப்பு, மிக நீண்ட லாங் ஷாட்கள் மூலம் கதை நடக்கும் நிலவியல் , மண் மனம் , கதை நடக்கும் சூழல் இவற்றை சிறப்பாக உருவாக்குவதன் மூலம் சாதாரண காட்சிகளையும் தரக்கூட்டல் செய்து வழங்குவதில் மாறி செல்வராஜ் வல்லவர் . இந்தப் படத்தில் இன்னும் உயரம் தொட்டிருக்கிறார் . 
 
 சேறு, சக்தி, ரத்தம் , வியர்வை , கண்ணீர் , மரம் , செடி கொடி வயல் வரப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதி தெய்வங்கள் இவற்றை பயன்படுத்துவதிலும் வழக்கம் போலவே ஜொலிக்கிறார் .  வசனங்களும் காட்சிகளும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து நிற்கின்றன , ஒரு காட்சியில் கிட்டானும் அவன் காதலியும் அனைத்துக் கொண்டு இருப்பது போல.  கொண்டு இருப்பது போல . 
 
” யாருன்னே தெரியாத ஒருத்தன் வந்து கட்டிப் புடிச்சு நீ நம்ம ஆளுங்கறான் . யாருன்னே தெரியாத ஒருத்தன் முறைக்கிறான் எவன் உண்மை எவன் பொய்ன்னு தெரியல என்று துருவ் விக்ரம் புலம்பும் இடம் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆழ் மன வலியை நேர்மையாக வெளிப்படுத்தும் காட்சி .
 
 
தாழ்த்தப்பட்ட மக்களின் வழிகளை சொல்லும் அதே நேரம் தனது படங்களில் பெண்களை கம்பீரமாகக் காட்டுவதில் ரஞ்சித் , மாறி செல்வராஜ் இருவரும் மிக சிறப்பானவர்கள் ( எல்லா சாதியிலும் பெண் சாதி என்பவள் தாழ்த்தப்பட்ட சாதிதானே?) 
 
கர்ணன் படத்தில் லால் கதாபாத்திரத்திடம்,  செத்துப் போன  மனைவியின் தோழி சொல்லும் விஷயம் காமம் சம்மந்தப்பட்டது என்பதையும் மீறி நெகிழ வைக்கும் . அந்த அளவுக்கு இல்லை என்றாலும் அந்த வழியில் படத்தின் இரண்டு கதாநாயகிகளின் ( அனுபமா , ரெஜிஷா) காதலன்களும்  பெண்களை விட வயதில் சிறியவர்கள் . சிறப்பு மாரி செல்வராஜ் . 
 
இதை விட முக்கியம் பரியேறும் பெருமாள்  படத்தில் பக்குவமான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்ட மக்களின் வழியை மனசாட்சி உள்ள  எல்லோரையும் உணர வைத்து  நல்ல அடையாளம் பெற்ற மாரி செல்வராஜ் , அடுத்து தான் இயக்கிய கர்ணன் படத்தில் துரியோதனனாக மாறினார் . 
 
கிணற்றில் தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் என்றும் பாராமல் கிணற்றில் அவர்களை பிற்படுத்தப்பட்ட சாதியினர் அடித்து நொறுக்குவதை  அதீத நீளத்தில் அதிக அழுத்தத்தில் அசாதாரண பில்டப்பில் காட்டியதன் மூலம்,  இரண்டு சமூகங்களும் இந்தப் படத்தைப் பார்த்து மேலும்  பகைமை கொள்ளும் உணர்வே வெளிப்பட்டது 
 
வெற்றிமாறனின் அசுரன் படத்தைப் பார்க்கும ஓர் தாழ்த்தப்பட்ட சிறுவன், ”  சாதி ஆதிக்கத்தை வெல்ல நல்லா படிக்கணும் ” என்று நினைப்பான்.  மாரியின் கர்ணன் படத்தைப் பார்க்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூக  இளைஞன் சாதி ஆதிக்கத்தை வெல்ல அவர்களை அடிக்கணும் என்று நினைப்பான் .  (கர்ணன் படத்தில் அதிமுக ஆட்சியில் நடந்ததை திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டி இருந்தாலும் அடுத்து அவருக்கு உதயநிதி படத்தையே இயக்கும் வாய்ப்பு வந்தது  அடுத்து உதயநிதி ஸ்டாலின் மகன்  இன்பநிதி அறிமுகமாகும் படத்தையும் தருகிறது. இங்கே வெற்றி மட்டுமே எல்லோரையும் நண்பர் ஆக்கும் ) . 
 
வாழை படத்திலும் அதுவே இருந்தது . 
 
ஆனால் இந்த பைசன் படத்தில் பரியேறும் பெருமாள் படத்துக்கும் கர்ணன் படத்துக்கும் இடையில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு இருக்கிறார் . 
 
பிற்படுத்தப்படுத்தப்பட்ட ஆட்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவியதால்  தன் சமூக ஆட்களிடம் அடிவாங்கிய பிற்படுத்தப்பட்ட ஆட்களும் உண்டு .சொந்த லாபத்துக்காக சாதி வெறி பிடித்த பிற்படுத்தப்பட்ட சாதி ஆட்களிடம் பணத்துக்காக தன் சமூகப் போராளிகளை காட்டிக் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட ஆட்களும் உண்டு என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் மாரி  செல்வராஜ். 
 
”நம்ம ஆளுக அப்படி எல்லாம் செய்யமாட்டாங்க அண்ணா”  என்று ஒரு காட்சியில் தன்னிடம் சொல்லும் உதவியாளரிடம் அமீர் சொல்லும் பதில் மாரியின் மனசாட்சியின் குரலாகவே இருக்கட்டும் .
 
இன்னும்  உண்மைக்கு நெருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நிஜ கிடடானான மணத்தி கணேசனுக்கு சாதி வேறுபாட்டிற்கும்  அப்பாற்பட்டு வெங்கடேசப் பண்ணையாரும் சிவந்தி ஆதித்தனும் செய்த உதவிகளை நேர்மையாகப் பதிவு செய்து இருக்கிறார். கப்பலோட்டிய தமிழன் வ உ சி சிதம்பரனார்  பேனரும் வருவது எல்லாம் சிகரம் . அதே நேரம் கந்தசாமி சாதி வெறிக்கு அப்பாற்பட்ட பட்ட ஆள் இல்லை என்பதையும்  . திட்டவட்டமாக பதிவு செய்கிறார் 
 
உண்மையில்  தமிழில் வந்த சிறந்த சமூக நீதிப்படம் ரப்பர் பந்து தான் . பிற்படுத்தப்பட்ட நபர் தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருப்பாள். வீட்டில் மாமியார் கணவன் எல்லோரும் அவளுக்கு பயப்படுவார்கள் . ஒரு நிலையில் கணவன் சரி இல்லை என்று பொண்டாட்டி அவள் அம்மா வீட்டுக்கு போய் விடுவாள் . 
 
அந்த பிற்படுத்தப்பட்ட சமூக  மாமியார்  தாழ்த்தப்பட்ட சமூக மருமகளின் வீடு தேடிப் போவாள். ” சாதியில உசந்தவங்க  நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறாங்க” .என்று மனைவியின் அம்மா ல் பதட்டப்படுவாள்.  . ஆனால் மருமகள் மாமியாரை வாங்கு வாங்கு என்று வாங்குவாள் . அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு ”ஒரு வாய் சோறு போடு.. ” என்று அந்த தாழ்த்தப்பட்ட மருமகளிடம் அந்த பிற்படுத்தப்பட்ட சாதி மருமகள் கெஞ்சுவாள். “நீ வந்து  மாத்திரைய சரியா எடுத்துத தரலன்னா செத்துருவேன் என்பாள். 
 
எல்லா சாதியிலும் பெண் தாழ்த்தப்பட்டவள்தான். . அந்த தாழ்த்தப்பட்ட ஒட்டு மொத்த சமூகத்திலும் பிறபடுத்தப்பட்ட சமூகப் பெண் தாழ்த்தப்பட்ட பெண்ணின் காலில் விழுகிறாள் . அதுவும் பயந்தோ   வேண்டா வெறுப்பாகவோ விழவில்லை . பாசத்தோடு விழுகிறாள். iஇதை விட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை எப்படி புனிதப் படுத்தமுடியும்? அதுதான் சிகரம் தொட்ட  தலித்திய படம். 
 
சிறு சிறு பூச்சிப் பறவைகள் பறக்கும் வெண்ணிற வெளிச்சப் பின்னணியில் கிட்டானும் அவன் காதலியும் தங்கள் காதலை உணரும் காட்சி, ஒரு சோக சமயத்தில் ஒரு நீல நிற நீர்ப் பள்ளத்தில் இருவரும் கட்டிப் பிடித்து இருக்கும் ஷாட்  இப்படி பல இடங்களில் மாரி செல்வராஜின்  டைரக்டோரியல் டச்  
 
இயக்குனர் மேதை மகேந்திரன் தனது நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் பற்றிக் கூறிய போது , ”கல்யாணத்துக்கு முன்பு விரும்பி ஜாக்கிங் போகும் பழக்கம் உள்ள ஒரு பெண் கல்யாணத்துக்கு அப்புறம் தன் கவன உயிரைக் காப்பாற்ற ஓடுகிறாள்’  என்ற வாக்கியம்தான் அந்தப் படம உருவாகக்  காரணம்”  என்றார் . 
 
அதே போல இந்தப் படத்தில் சாதி ரீதியான அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் ஓடி ஓடியே  தீர்த்துக் கொண்ட  இளைஞன் ஒரு நிலையில் தன் சாதி அவமானத்தையும் களையவும் லட்சியத்தை அடையவும் உயிர் பிழைக்கவும் ஓடுகிறான் 
 
திரைக்க்கதை கொஞ்சம் தொய்வடையும் நேரங்களில் அதை அழகியல் , பிரேமிங், ரசனையான ஷாட்கள் மூலம் தூக்கி நிறுத்தி விடுகிறார் மாரி செல்வராஜ் .
 
பல படங்களுக்கு பிறகு கேரக்டருக்கான பிரம்மாண்டமாக உழைக்க ஆரம்பித்தார் விக்ரம் . ஆனால் இந்தப் படத்திலேயே அதைக் கொடுத்து இருக்கிறார் துருவ் விக்ரம் . வாழை மரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவது, சினிமா சண்டையா இல்லை நிஜ சண்டையா என்று வியக்கும் அளவுக்கு சண்டைக்காட்சிகளில் நடித்து இருப்பது என்று  … இவரை வைத்து என்ன படம் என்றாலும்  செய்யலாம் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்  துருவ தமிழ் சினிமா வானில் ஒரு துருவ நட்சத்திரமாக வருவார் . 
 
இவ்வளவு கடினப்பட்டு துருவ் விக்ரம் கொடுக்கும் பிரம்மிப்பை  இயல்பில் ஜொலிக்கும் நடிப்பில் படம் முழுக்க வழங்குகிறார் பசுபதி . எப்பேர்ப்பட்ட கலைஞன்! . தமிழ் சினிமாவின் பொக்கிஷம் அவர் . 
 
கம்பீரமான கேரக்டரில் பட்டாசு வசனங்களை பேசி பலம் சேர்க்கிறார் அமீர் . ரெஜிஷா அப்படியே  வனத்தி கிராம தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணாக கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார் . சற்றே மலையாள வாசனைப் பேச்சு, மலையாள நடை உடை பாவனை இருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பும் சிறப்பு. பல படங்களில் தமிழை மலையாளம் போல பேசி அதையும் விக்கல் வந்த மாதிரி பேசும் வழக்கமுள்ள லால் இடத்தில் சிறப்பாக பேசி இருப்பது ஆச்சர்யம் (ஒருவேளை அவர் மாதிரி  வேறு யாரும் பேசினார்களோ என்னவோ) 
 
இயக்கத்தையும் எழில் அரசுவின் ஒளிப்பதிவையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. இயக்குனரின் கற்பனையை நிஜத்தில் கொண்டு வருவதில் மாபெரும் பங்களிப்பை தந்திருக்கிறது ஒளிப்பதிவு 
 
நிவாஸ் பிரசன்னாவின் பாடல் இசை உருவாற்றுகிறது எனில் பின்னணி இசை ஒரு தனி மொழி போல் உணர வைக்கிறது .  
 
பைசன் என்பது காட்டெருமை . அதாவது எருமை .  ஆனால் காள மாடன் என்பது வேறு . பைசன் எப்படி  காளமாடனாகவும் இருக்க முடியும் என்ற கேள்வி ஆரம்பத்தில்  வந்தது நிஜம் . ஆனால் மண்ணின் மைந்தர்களுக்கு அவன் காளமாடன் . காஸ்மாபாலிட்டன் சமூகத்தின் பார்வையில் அவன் பைசன் என்று உணரவைக்கும் விதம் அருமை . 
 
பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அடித்துக் கொண்டு சாகிறார்கள் , சரி அவர்கள் தப்பாகவே இருக்கட்டும் . அதை படத்தில் அழுத்தமாக தொடர்ந்து சொல்வதன் மூலம் இரண்டு தரப்பையும் வெறியாக்குவது இனியும் தேவையா?
 
இந்த சாதி ஏணி எதனால் வந்தது . இதில் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாலும் தாழ்த்தப்பட்ட சில சமூகங்கள் என்றால் , இந்த சாதி அடுக்கால் பாதிக்கப்படாமல் உயரத்தில் இருப்பவர் யார்? 
 
அந்த உயரத்தில் அப்படியே இருப்பதற்காக இந்த சாதி சண்டையை பரம்பரை பரம்பரையாக வளர்த்து விட்ட தர்மம் எது ? உனக்குக் கீழே ஒரு சாதி இருக்கு என்ற உணர்வை வளர்த்து அதன் மூலம் உனக்கு மேலேயும் ஒரு சாதி இருக்கு ஒத்துக்கொள் என்று நம்ப வைத்து, இந்த சாதி ஏணி உச்சியில் இருந்து இறங்காமல் இருப்பது யார்? 
 
இப்படி இதற்கெல்லாம் காரணமாக இருந்து விட்டு “நாங்களா போய் மத்தவங்களை வெட்டறோம்/” என்று பசப்பலாகக் கேட்கும் அவர்களை எல்லோருக்கும் புரிய வைத்து மற்ற சமூகங்களை விழிப்படைய செய்வதுதானே நியாயம் புத்திசாலித்தனம் . அந்தப் பாதையில் இனியாவது மாரி செல்வராஜ் , பா. ரஞ்சித் எல்லாம் போவார்களா? இல்லை அதில் ஏதேனும் தர்ம சங்கடம் அவர்களுக்கு இருக்கா?
 
சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பது நியாயமே . ஆனால் அதையே சாக்காக வைத்து தமிழ் இன ஒற்றுமையை சொல்ல வேண்டிய வாய்ப்பு இருந்தும் சொல்லாமல் புறக்கணிப்பது ஏன் ?
 
”எங்க ஊர்ல என்னை சாதியை சொல்லி புறக்கணிக்கிறாங்க. இங்க வந்தா தமிழன் ன்னு புறக்கணிப்பு செய்யறாங்க . இந்தியாவைப் பொறுத்தவரை தமிழன் எல்லாமே தாழ்த்தப்பட்டவன் தான்டா” என்று எல்லோரையும் செருப்பால் அடிக்கிற மாதிரி ஒரு வசனம் வைப்பதை தடுக்கும் சக்தி எது ?
 
இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயம் , இப்படி எல்லாம் சுயசாதி ஆட்டங்கள் தொடங்கி இந்தி வாலாக்கள் வரை எல்லோராலும் புறக்கணிக்கப்படும் கிட்டான்… இவ்வளவு கத்திகள் உருட்டுக் கட்டைகள் வேல் கம்புகளையும் மீறி தப்பிக்காமல் போய் விடுவானோ இல்லை மாட்டிக் கொள்வானோ என்ற பதட்டம் ஒவ்வொரு காட்சியிலும் வந்திருக்க வேண்டும். அப்படி வந்து இருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு . 
 
ஆனால் எடுத்த எடுப்பிலேயே கிட்டான் ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அணியின் சார்பாகப் போய்விட்டான் என்று சொல்லி விடுவதன் மூலம் ”அதாம் லே அவன் சப்பான் போயிட்டாம்ல.. , உசுருக்கு ஒண்ணும் பங்கமில்லப்பா.. ” என்று படம் பார்ப்பவர்கள் ரிலாக்ஸ் ஆகி விடுகிறார்கள் . ஜெயிப்பானா இல்லையா என்ற ஒரே விசயத்துக்குள் விசயத்துக்குள்  படம் சிக்கிக் கொண்டது . 
 
இப்படி சில குறைகள் கேள்விகள் எழுந்தாலும் , 
 
பைசன் காளமாடன் …. .திமில்கள் திமிறும் சிறப்பான சீற்றம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *