தி கிரேட் இந்தியன் கிச்சன் @ விமர்சனம்

ஆர் டி சி மீடியா சார்பில் துர்காராம் சவுத்ரி மற்றும் நீல் சவுத்ரி தயாரிக்க ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் நடிப்பில்  கண்ணன் இயக்கி இருக்கும் படம் . மலையாளத்தில் சூரஜ் வெஞ்சரமூடு, நிமிஷா சஜயன் நடிப்பில் ஜியோ பேபி இயக்கி 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த இதே பெயர் கொண்ட படத்தில் _________  ரீமேக் . இந்த ____________ என்ன என்பதுதான் இந்த விமர்சனமே. 

பெண்களை அடுக்களையில்  வைத்து முழுக்க முழுக்க அவித்து எடுப்பதும் அடுத்த படுக்கை அறையில் பாயாக்கி சுருட்டி விரிப்பதுமே கலாச்சாரம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஆணாதிக்க  வீட்டில் வாழ்க்கைப்படும் படித்த நடனம் தெரிந்த ஒரு பெண் , அந்த அதீத அலட்சியம்,  மனசு பற்றிக் கவலைப் படாமல் உடலை மட்டுமே உரிமை கொண்டாடுகிற மிருகத்தனம் , குடும்பத்துக்கே தேவையான ஒரு சமையலறை விஷயம் என்றாலும் அது பெண்ணால் மட்டும் சரி செய்ய முடியாத விஷயம் என்றாலும் அது பெண்ணின் வேலைதானே என்று எண்ணி அதில் அலட்சியம் காட்டும்  ஆண் திமிர்…  இவை எல்லாம் கொண்ட அந்தக் குடும்பத்தில் சிக்கி , முடியாத  ஒரு நிலையில் என்ன செய்தாள் என்பதே படம் . 
 
அடிப்படையில் இது நல்ல படம். ஜியோ பேபியின் கதைக்காக  எல்லோரும் பார்க்க வேண்டிய படம். அந்த வகையில் மலையாளப் படம் பற்றித் தெரியாதவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம் 
 
ஒரு பெண் கிச்சனில் படும் கஷ்டத்தை ஆரம்பக்கட்டத்தில் சுமார் இருபது நிமிடங்கள் காட்சிப்படுத்தியதில் கண்ணனும் சிறப்பாக செய்து இருக்கிறார் .பாராட்டுகள். ஆனால்  அதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் …. அய்யகோ 
 
ஒரு ரீமேக் என்பது எப்படி இருக்கக் கூடாது? 
 
காட்சிக்கு காட்சி ஈயடிச்சான் காப்பியாக இருக்கக் கூடாது . திரில்லர், விஞ்ஞானம் போன்ற கதைப் படங்களில் கூட ஈயடிச்சான் காப்பியை ஏற்கலாம் . ஆனால்  வாழ்வியல் கலாச்சாரம் பற்றிய படங்களில் அப்படி ஈயடிச்சான் காப்பி அடிப்பது அதீத முட்டாள்தனம். 
 
எப்படி இருக்க வேண்டும் ?
 
கதையையும் தவிர்க்க முடியாத  முக்கியக் காட்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, நமது மண்ணுக்கும் மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்ப மாற்றி ,  தேவையற்ற காட்சிகளை நீக்கி, தேவையான காட்சிகளை வைத்து, காட்சிகளின் எமோஷன் அளவில் கூட  மாற்றம் செய்து , கலை இயக்கத்தில் கவனமாக இருந்து,  கதாபாத்திரங்களின் தன்மையில் கூட நம்மூர்  பிரதிபலிப்புகளை வைத்து முடிந்தால் மூலப் படத்தை விட சிறப்பான கிளைமாக்ஸ் கொடுத்து, ஒரு முக்கியக் கேரக்டர் அல்லது ஒரு முக்கியாக காட்சியிலாவது காட்சியிலாவது மூலப் படத்தில் உள்ளதை விட சிறப்பாக பர்ஃபார்மன்ஸ் வாங்கி   மூலப் படம் எடுத்தவர்களையே மூக்கில் விரல் வைக்கச் செய்து…  
 
இவை எல்லாம்தான்  ரீமேக் செய்பவருக்கு  பெருமை. ரீமேக் செய்யப்பட்ட படத்துக்கும் மரியாதை. 
 
ரீமேக் என்பது கலைஞர்களை  மாற்றி ஜெராக்ஸ் காப்பி எடுப்பதல்ல . மூலப் படத்தை கண் மூடித்தனமாகப் பின்பற்றுவது அல்ல.  அப்படி செய்வது படைப்புத் துரோகம் . அப்படி செய்தால் மூலப் படம் எடுத்தவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள் . 
 
ஆனால் இந்தப் படத்தில் அதுதான் நடந்துள்ளது 
 
ஆரோக்கியமாக இருக்கும்  நபருக்கு,  ஒரு மனைவி அந்த உட்கார்ந்த  இடத்தில் வந்து காபி வேண்டுமானால் தருவாள் . ஆனால்  பல் துலக்குவதற்காக பிரஷ்ஷில் பேஸ்ட் பிதுக்கி பிரஷ்ஷை கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போக மாட்டாள். அப்படிப் போவது கேரள வழக்கமாக இருக்கலாம் . ஆனால் எந்த சமூகத்திலும் அது தமிழ் நாட்டு  வழக்கம் இல்லை. ”நீ பல்லு வெலக்குனா வெலக்கு. இல்லாட்டின் நாறு” என்று சொல்லி விட்டு நம்மூர்ப் பெண்கள் போய்க் கொண்டே இருப்பார்கள் .  மீறி அப்படியே எதாவது மேட்டுக் குடிகளில் ஒன்றிரண்டு நடந்தாலும் , அவன் கூட வீட்டுக்கு வந்த மருமகளிடமும் அதையே எதிர்பார்க்க மாட்டான், ஆனால் மலையாளப் படத்தில் வந்த  மருமகளிடம் கேட்கும்  காட்சியை இங்கே அப்படியே வைத்து இருக்கிறார்கள். 
 
மாலை போட்டு இருக்கும்போது வீட்டுக்கு தூரமான மனைவி எதிர்பாராத விதமாக தொட்டு விட்டால் அவளை அசிங்கமாக திட்டி கண்டிப்பது நம்மூரில் வழக்கத்தில் இல்லை. ஏனேன்றால் இங்கே மாலை போட்டு விட்டால் அவர்கள் மனைவியையே மஞ்சமாதாவாகத்தான் பார்ப்பார்கள் . இன்னொரு முறை குளிக்கப் போவர்கள் . அதுவும் ஆபத்தில் காப்பாற்ற வந்ததால் தொட்டு விட்ட மனைவியை தமிழ் நாட்டு ஐயப்ப சாமிகள் யாரும் திட்டுவது இல்லை .
 
அவ்வளவு பெரிய வீட்டை வீட்டுக்கு வந்த மருமகள்  தினமும் ஒற்றை ஆளாக படிக்கட்டுகள்,  கைப்பிடிகள்,  தூண்கள், திண்டுகள்  என்று  எல்லாவற்றையும் துடைக்கச் சொல்வதை  நம்மூரில் கொடுமைக்கார மாமனார் மாமியார் கூட செய்வதில்லை . “ஏம்மா .. இது என்ன  வீடா இல்லை ஷோ ரூமா ? இப்படி தினமும் தொடைச்சா தூண்  என்னத்துக்கு ஆவும்?” என்று  வேண்டுமானால் கேட்பார்கள். 
 
ரீமேக் படம் என்றாலும் ஒரு படைப்பாளிக்கு  களம் மாற்ற உரிமை உண்டு . அதை நாம் மறுக்கவில்லை . அதற்கேற்ப  கண்ணன் படத்தில் வரும் பல பெண் கதாபாத்துரங்களுக்கு முக அமைப்பு, நிறம்   இவற்றின் மூலம் பிராமணியத் தன்மை கொடுக்க முயன்று இருக்கிறார் .தப்பில்லை .( இப்போது பார்த்தாலும் மீண்டும் கோகிலா படத்தை நாம் உச்சி முகர்ந்து கொண்டாடுகிறோம். அதன் அற்புதமான பிராமணத் தமிழ் சொற்களைக் காதலிக்கிறோம் .சின்னஞ்சிறு வயதில் பாட்டில் கரைகிறோம்). ஆனால் பெண்களை அப்படி ஒரு தன்மையில் நிறுவுகிற இயக்குனர் இந்தப் பக்கம் ஆண்களை மட்டும் ரசித்து ருசித்து  கரக் முரக் என்று   நான் வெஜ் சாப்பிடும் ஆட்களாகக் காட்டுகிறார் . வீட்டில் துளசி மாடம் வேறு இருக்கிறது . அங்கே  தீட்டுப் பெண் போகக் கூடாதாம். ஆனால் நான் வெஜ் சாப்பிடும் நபர் தண்ணி தெளித்து துளசி மாடத்துக்கே தீட்டு நீக்குவாராம். கொடுமை. 
 
படத்தில் நடித்து இருக்கும் பலரின்  முகமும் பேச்சுத் தொனியும் நாரதகான சபா நாடகம் பார்க்கிற மாதிரியே இருக்கு. சிலர் பூமிக்கு அப்பால்  வெற்றுக்  கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல இருக்கிறார்கள் . அதுவும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அம்மாவாக வருபவர் நேரடியாக நெப்டியூன் கிரகத்தில் இருந்து அப்போதான் வந்து இறங்கியவர் மாதிரி இருக்கிறார்; பேசுகிறார் . அவருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஏழேழு தலைமுறைக்கும் ஸ்நானப் பிராப்தி இருக்க வாய்ப்பில்லாத மாதிரி ஒரு தோற்றப் பொருத்தம். (தலைக் குத்தல் படத்தில்,கதிருக்கு அப்பாவாக ஒருவரை போட்டு இருக்கிறார்கள் . தோற்றப் பொருத்தம் பாருங்கள் . சினிமா அங்க இருக்கு சார். நீங்க எங்க இருக்கீங்க?) 
 
கணவன் முகத்தில் அழுக்குத் தண்ணீர் ஊற்றி விட்டு மட்டும் போகிற கிளைமாக்ஸ் கேரளாவுக்கு ஒகே.  நம்ம ஊருக்கு? நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நறுக் நறுக்கென்று நாலு கேள்வி வைத்து பெண்களின் கைதட்டுகளை  அள்ள வேண்டாமா? அப்போதானே  தியேட்டருக்கு பெண்கள் வருவார்கள்? உங்களை நம்பி பணம் போட்ட அப்பாவி தயாரிப்பாளருக்கு போட்ட காசாவது வரும் ? பாவம் அந்த மனுஷன் . 
 
இப்படி வெளிப்பட்ட ஒரு பெண்  பரத நாட்டியம் ஆடத்தான் போவாளா? விஷுவலாக கம்பீரமாக தெரிவதற்கு ஏற்ப அவள் கல்யாணத்துக்கு முன்பு கற்ற விசயத்தையும் மாற்றி இருக்க வேண்டாமா? 
 
கடைசியில் அந்தக் கொடூரக் கணவன்  இன்னொரு கட்டுப் பெட்டியான பெண்ணை மணந்து கொண்டான்  என்று ஒரு காட்சி. அவளும் ஒரு நாளில் வெடிக்கலாம் என்ற உணர்வைத் தர வேண்டிய காட்சி , ஆனால் படத்தில் அந்தக் காட்சி ‘ஆண்களுக்கு எப்படியும் அடுத்த அடிமை கிடைத்து விடும் . பெண்தான் தனிமரமா வாழனும்’ என்ற உணர்வைத் தரும் வகையில் சேம் சைடு கோல் அடித்து   நிற்கிறது . 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *