கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் , லிங்க பைரவி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் , பி கே பிலிம் பேக்டரி சார்பில் ஜி.விட்டல் குமார் ஆகியோர் தயாரிக்க,
ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க, ஜோடியாக கிரீத்தி கார்பன்டா நடிக்க ,
இயக்குனர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கி இருக்கும் படம் புரூஸ் லீ
படத்தின் இசை வெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டு பாடல்களையும் திரையிட்டார்கள் .
புரூஸ்லீ என்ற பெயரை வைத்துக் கொண்டு அதன் காரணமாகவே ரவுடிகளிடம் அடி வாங்கும் ஒரு இளைஞன் நிஜமாகவே புரூஸ்லீ போல வீரனாவதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று,
முன்னோட்டததைப் பார்க்கும்போது தோன்றுகிறது . நகைச்சுவை ஆக்ஷன் கலந்து கமர்ஷியலாக இருக்கும் முன்னோட்டம் , ” இப்போது ஹீரோவாக இருக்கும் ஜி வி பிரகாஷ் , இனி சூப்பர் ஹீரோ” என்கிறது
இரண்டு பாடல்களை திரையிட்டார்கள் . பாடல்கள் இனிமையாகவும் இளமையாகவும் அதனால் அழகாகவும் இருந்தன .
நிகழ்ச்சியில் பேசிய பலரும் ”இயக்குனர் பிரஷாந்த் இந்தப் படத்தை மிக சிறப்பாக கமர்ஷியலாக ரசிக்கும்படி எடுத்துள்ளார் . படம் நன்றாக ஓடும்” என்றனர் .
தனது சிஷ்யனை வாழ்த்த வந்திருந்த இயக்குனர் பாண்டிராஜ் ” இவன் பேருக்கு பின்னால போட்டு இருக்கற பேரைப் பார்த்து ஏதோ எனக்காக போட்டு இருக்கான்னு நினைக்காதீங்க .
அவன் அப்பா பேரு பாண்டியராஜ் ”
என்று கூறி கலகலக்க வைத்தார் .
வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் பேசும்போது ” பிரகாஷ் குமார் தினசரி வீட்டில் இருந்து வரும்போது என்ன கொண்டு வர்றாரோ தெரியல. ஒரு ‘பென்’ ன கொண்டு வர்றார் .
அதை வச்சு தினமும் ஒரு புதுப் படத்துக்கு கையெழுத்துப் போட்டுட்டு போய்ட்டே இருக்கார் ” என்று கூற ,
ஜி வி பிரகாஷ் தனது பேச்சில் ” இன்னிக்கு பேனாவ மறந்து வச்சுடடு வந்துட்டேன் . உங்க பேனாவ கொடுங்க வழியில ஒரு படம் சைன் பண்ணிட்டுப் போறேன் ” என்று கலாய்த்தார் .
இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜன் தனது பேச்சில் , “படம் நன்றாக வந்திருக்கிறது . தயாரிப்பாளர்கள் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் அனைவர்க்கும் நன்றி ” என்றார்
தயாரிப்பாளர் செல்வகுமார் பேசும்போது ” திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து , உள்குத்து ஆகிய படங்களை அடுத்து எனக்கு இது நாலாவது படம் , இந்தப் படத்தில் நான் நிறைய சிரமங்களை அனுபவித்தேன் .
இதுவரை அப்படி சிரமங்கள் வந்தது இல்லை . இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் . அதற்காகவே இந்தப் படம் வெற்றி பெறும்” என்றார்