உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது ஒரு முழுநீள தமிழ்த் திரைப்படம் .
படத்தின் பெயர் ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’
படத்தின் இயக்குனர் எம்.எஸ்.செல்வா
21.10.2016 அன்று காலையில் ஆரம்பித்து பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி இருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்ஜெக்டான ஹாரர் காமெடிதான் படத்தின் களம்.
ஒரு வீட்டுக்கு புதுமண தம்பதி குடி வருகிறது. கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை.
எனவே பேய் போல ஆட்களை செட்டப் செய்து பேய் நம்பிக்கையை வரவழைத்து மனைவியை விரட்ட சில நண்பர்களை அமர்த்துகிறான்.
இந்நிலையில் இன்னொரு புதுமண தம்பதி தங்க இடம் கேட்டு வருகிறது அவர்களை மேலே தங்க வைக்கிறான்.
இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள் தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை…
உண்மையான பேய்கள் என்று அவனுக்குத் தெரிய வருகிறது.
அந்த உண்மைப் பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடு படுகிறார்கள் என்பதை
இரண்டாம் பாதி முழுக்க காமெடியாக சொல்லவிருக்கிறது ’அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ படம்.
21.10.2016 அன்று காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது .
இரண்டு மாத கடின ஒத்திகை நடந்து இருக்கிறது.
இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குனர்கள் சேர்ந்து எடுத்த சுயம்வரம் படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப்பட்டியலில் நீடிக்கிறது.
அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப்பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடன் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள்
மொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் என முழுமையான திட்டமிடல் !
குறைந்த நேரத்தில் எடுக்கப்படும் படத்தில் மூன்று பாடல்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கும் சரவணன் மதுரைப் பகுதியில் பெரிய டாக்டர்.
தவிர நடைபெற இருக்கும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் .
படப்பிடிப்பு நடத்தப்பட்ட அன்றே வேட்பாளர் அறிவிப்பு வர ,
ஓடிப் போய் அதற்கான வேலைகளை முடித்துக் கொண்டு சரவணன் படப்பிடிப்புக்கு வந்து விட்டார்.
“பொதுவாக இது போன்ற சாதனைக்காக படங்கள் எடுக்கும்போது ,
சாதனைகளை அங்கீகரிக்கும் அமைப்பின் சார்பில் பார்வையாளர்கள் இருக்க வேண்டும் .
அப்போதுதானே அங்கீகாரம் கிடைக்கும் ?” என்று கேட்டேன்
அதற்கு பதில் சொன்ன இயக்குனர் எம்.எஸ்.செல்வா ” உண்மைதான்.
ஆனால் அவர்கள் சொல்லும் தேதியில் எங்களால் டாக்டர். பி.சரவணன், அனுகிருஷ்ணன், சிங்கம் புலி,
மற்றும் குமரேசன் , கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி
ஆகிய கலைஞர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை .
எனவே முழு படப்பிடிப்பையும் தனி வீடியோவில் ஆதாரத்துக்காக படம் பிடிக்கிறோம்.
அதை வைத்து அங்கீகாரம் கிடைத்தால் ஒகே .
இல்லை என்றால் கூட எங்களுக்கு மன திருப்தி இருக்குமே . அது போதும் ” என்கிறார் .