சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் ஜி தியாகராஜன் , செந்தில் தியாகராஜன் , அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்க, தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் , அதிதி பாலன்,நிவேதிதா சதீஷ், நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் படம்.
வெள்ளைக்காரர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த காலம்
ஆளும் ஜமீன்தார்களாலும் ஒடுக்கப்பட்ட எளிய மக்களில் ஒருவனான அனலீசன் என்ற இளைஞன் (தனுஷ் ), சாதி வித்தியாசம் பார்க்காத ஒரு ஜமீந்தார் குடும்பத்துப் பெண்ணுக்கு (பிரியங்கா) அவள் மேல் கொண்ட காதலோடு உதவுகிறான். அவள் வேறு ஒருவனைக் காதலிப்பது தெரிந்து ஏமாற்றம் அடைகிறான்.
தங்களை மனிதனாகக் கூட மதிக்காத ஜமீன்தாரிய ஒடுக்கு முறைக்கு கட்டுப்பட்டு இருப்பதை விட , சாதி வேற்றுமை காட்டாத வெள்ளைக்காரர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் சுயமரியாதை கிடைக்கும் என்று முடிவு செய்து அதில் சேர்ந்து மில்லர் என்ற புதுப் பெயர் வைக்கப்படுகிறான் .

அதேநேரம் வெள்ளைக்காரர்கள் சுதந்திரத்துக்குப் போராடும் நம்மவர்களை காக்கைக் குருவி போல சுட வைக்க, அப்படி அவன் தானும் ஒருவனாய் இருந்து சுதந்திரப் போராட்டக் கும்பலை சுட்ட ஒரு சம்பவத்தில் , நமது ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது முன்னாள் காதலியின் சுதந்திரப் போராட்டக் காதலனும் செத்துப் போக , மனம் வெதும்பி வெள்ளையர் படையில் இருந்து தப்பிக்கிறான் . ஆனால் மில்லர் என்ற பெயர் நிலைக்கிறது .
வெள்ளைக்காரர்களிடம் கொள்ளை அடித்து சுதந்திரப் போராட்டத்தினருக்கும் சுதந்திர உணர்வை வளர்க்கும் கலைக் குழுக்களுக்கும் உதவும் குழுவில் இணைகிறான் . உதவுகிறான் .
ஒரு சூழலில் அவர்களிடமும் சற்றே முரண்பட்டாலும் , ஒரே நேரத்தில் ஜமீன்தாரிய சாதி ஆணவ ஆட்களிடமும் வெள்ளையர்களிடமும் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை உணர்ந்து அவன் செயல்பட…. நடந்தது என்ன என்பதே கேப்டன் மில்லர் .

வெள்ளையர்களிடம் அடிமைப் படும் முன்பே இந்த மண்ணின் நிஜமான மைந்தர்கள், வேற்று மொழியினரிடமும் வேற்று இனத்தவரிடமும் அடிமைப்பட்டுத்தா
ன் இருந்தோம் என்று சொல்வதன் மூலம் சமூக நீதி பேசும் படமாக இருக்கிறது கேப்டன் மில்லர் .
கருவறைக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் , கோவிலுக்குள்ளேயே அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள் இருவருக்குமான உரிமைக் குரலை பேசுகிறது படம்.
வசனத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் காட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் பேசுகிறது இந்தப் படம்.
பல கோவில்களின் கருவறைக்குள் மேலே இருக்கும் ஆரியமயமாக்கப்பட்ட கடவுள்களின் பீடத்துக்கு உள்ளே இருப்பது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கடவுள்களும் அவர்கள் சக்தியும்தான் ( இந்தப் படத்தில் கோரனார்) என்பதை படம் நிறுவும் விதம் அபாரம் .

தனுஷ் என்னும் நடிப்பு ராட்சசன் இந்தப் படத்திலும் பல்வேறு தோற்றங்கள் அட்டகாசமான உடல் மொழிகள் , ஆழமான நடிப்பு, நுண்ணிய முகபாவனைகள் என்று அசத்துகிறார் .
சித்தார்த்தாவின் ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷின் இசை இரண்டும் காட்சி உணர்வை மேம்படுத்திக் கொடுப்பதில் ஜெயித்திருகின்றன.
எல்லா நடிகர்களும் பயன்படுத்தப்பட்ட விதம் , பின்புல உருவாக்கம் , உடைகள், மேக்கப், கலை இயக்கம் என்று தொழில்நுட்ப தரம் இருக்கிறது .
ஒடுக்கப்பட்ட மக்கள் என்றாலே எல்லாரும் கட்டைக் கருப்பாக, எப்போதும் குளிக்காத தோற்றத்தில்தான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தி இதிலும் இருக்கிறது

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தரம் சபாஷ் போட வைக்கிறது .அருமை.
எந்தப் படமாக இருந்தாலும் அதில் கண்ணீர், ரத்தம், வியர்வை, நிணநீர், நான்கையும் கலக்கி அதில் கார மிளகாய் கல் உப்பு போட்டு சூடுபண்ணிக் கொடுப்பதே தனது பாணி என்ற வகையில்,வன்முறையை பயன்படுத்தும் தனது இயல்பை, இந்தப் படத்திலும் பின்பற்றி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
முதல் இரண்டு படங்களில் கடல்புறங்களையே பாலைவனம் போலக் காட்டியவர் இதில் படமே பெரும்பாலும் மொட்டை மலை கற்பாறை பின்னணிதான் என்றால் என்ன ஆட்டம் ஆடி இருப்பார்? ஆடி இருக்கிறார் .
அளவுக்கு மீறி நீளும் சில காட்சிகள் குறிப்பாக சண்டைக்காட்சிகள் .. அதில் யதார்த்தத்தின் வெளிப்பாடு குறைவாக இருப்பது சோதிக்கிறது .

வணிக சமரசங்களுக்கு ஆட்படாமல் தனக்கு தோன்றிய ஒரு படத்தை தனக்கே உரிய நியாயங்களோடு கொடுத்துள்
ளார் இயக்குனர் . படத்தின் பெரும்பலம் பலவீனம் இரண்டும் அதுவே .
கேப்டன் மில்லர் …. அப்படி ஒன்றும் சாதாரண சிப்பாய் இல்லை