லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா ராஜசேகர், சுவாதி, சூர்ய வம்சி பிரசாத், கோதா, ஜீவன் கோதா ஆகியோர் தயாரிக்க, அருண் விஜய் , ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் படம்.
தாயும் தந்தையுமாக இருந்து தான் வளர்த்து வரும் மகளின் (இயல்) மருத்துவ சிகிச்சைக்காக இங்கிருந்து லண்டன் போகிறார் குணா என்கிற குணசேகரன் ( அருண் விஜய்) . உடனடியாக பணத்தை சட்டபூர்வமாக கொண்டு போக முடியாத நிலையில் ஹவாலா மூலம் , பத்து ரூபாய் நோட்டைக் காட்டி லண்டனில் பணம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது .
மருத்துவமனையில் ஒரு மலையாள நர்ஸ் ( நிமிஷா சஜயன்) சிறுமி இயலைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருக்கிறார் . அவளது தம்பியும் (விராஜ்) அங்கேயே வேலை பார்க்கிறான்
ஹவாலா மூலம் பணம் வாங்கப் போவதை அறிந்த அந்த மலையாளத் தம்பி , லோக்கல் ரவுடிகளை வைத்து அந்தப் பணத்தை வஞ்சகமாக கொள்ளையடிக்க முயல, நடக்கும் ஒரு மோதலில் குணசேகரன் ஜெயிலுக்குப் போக வேண்டி வருகிறது .
உரிய நேரத்தில் பணத்தை பெற முடியாது என்ற நிலையில் , லண்டன் ஜெயிலுக்குள் இருந்து சில தீவிரவாதிகளைத் தப்ப வைக்க கடத்த ஒரு பிரபல பாகிஸ்தான் தீவிரவாதி முயல , ,
அப்போதுதான் குண சேகரன் உண்மையில் யார் என்பது தெரிய வருகிறது .
தீவிரவாதிகள் தப்புவதைத் தடுக்க குணா சேகரன் முயல , மருத்துவமனையில் உள்ள குணசேகரனின் மகளைக் கடத்த தீவிரவாதி முயல நடந்தது என்ன என்பதே படம் .
பெரும்பாலான காட்சிகள் லண்டனில் .
அருமையான படமாக்கலைக் கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய் . ஒரு அச்சு அசல் ஆங்கிலப்படம், பார்க்கும் உணர்வு. தமிழ்க் வசனங்கள் மட்டுமே இது தமிழப் படம் என்று நம்ப வைக்கிறது
சண்டைக் காட்சிகளில் பெரும் ரிஸ்க் எடுத்து விபத்துகளுக்கு பல ரஸ்க் எல்லாம் கொடுத்து, மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்ததோடு , மிக சிறப்பாக நடித்துள்ளார் அருண் விஜய் .
நிமிஷா சஜயன் பொருத்தம்
நெகிழ வைக்கிறாள் சிறுமி இயல்.
ஏமி ஜாக்சன் வரும் காட்சிகள் ஹாலிவுட் படம் போலவே இருக்கிறது .
கலை இயக்கம் , செட்கள் வடிவமைப்பு , தயாரிப்புத் தரம் யாவும் அருமை .
எல்லாம் முதல் பாதியில் ! அப்புறம்?
ஏகப்பட்ட லாஜிக் தவறுகள், யதார்தத்துக்கு அப்பாற்பட்ட மசாலாக்கள் நம்பகத் தன்மையைக் குறைக்கின்றன .
அதுவும் சுமார் இரண்டடி விட்டம் உள்ள ஒரு குழாயின் தண்ணீர் கொட்டி, இரண்டு ஆள் உயரம் உள்ள சுரங்க வழி நிரம்புவது, மீன் பிடிப்பதை விட எளிதாக அருண் விஜய், மேன் ஹோலுக்குள் கையை விட்டு தீவிரவாதிகளைப் பிடிப்பது, அவ்வளவு பெரிய மருத்துவமனை எப்போதும் ஆளரவம் இல்லாத பே பங்களா மாதிரியே இருப்பது … எல்லாம் மெகா மகா நகைச்சுவை.
திரைக்கதையில் என்ன செய்திருக்க வேண்டும்?
மகளைக் காப்பற்ற ஹவாலா மூலம் பணம் வாங்க வேண்டிய நிலையில் ஒரு தகப்பன் ஜெயிலுக்குப் போய் விட்டால், பெரிதாக ஆதரவு இல்லாத நிலையில் ஒரு சிறுமியின் நிலை என்ன , தகப்பன் என்ன செய்தான் என்பதில் மட்ட்ட்டட்ட்ட்டட்ட்ட்டும்……….
இந்தப் படம் கவனம் செலுத்தி இருந்தால் இது அச்சு அசல் ஹாலிவுட் படமாகவே மாறி இருக்கும் . அப்படி ஒரு படமாக்கலைக் கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய்.
ஆனால் , பாதி படம் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் எதற்கு ஜெயிலர் படத்தைப் பார்த்தார்கள் என்றுதான் புரியவில்லை
mission chapter 1 :அச்சம் என்பது இல்லையே ….. purposelessness chapter 1: நமபகத்தன்மை என்பதே இல்லையே