ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரிக்க, ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் நடிப்பில் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் உருவாகி மலையாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் படத்தின் தமிழ் வடிவம்.
பழைய – நின்ற வடிவ – பிள்ளையார் சிலை ஒன்று ஒரு காலத்தில் திருடப்பட்டு , சண்டையில் கை மாறி ஒரு தென்னை மரத்தில் மேல் தூக்கி எறியப்பட்டு மேலேயே சிக்கிக் கிடந்து, ஒரு நிலையில் அந்தக் குடும்பத்தினரால் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களில் பலரும் அதை மதிக்காத நிலையில் அந்தக் குடும்பத்தில் சாமி பக்தி உள்ள ஒரு பெண்ணால் ( ஊர்வசி ) வீட்டில் வைக்கப்பட்டு அவரால் பயபக்தியோடு பூஜிக்கப்படுகிறது.
நெருங்கிய உறவில் அத்தை மகனை (குரு சோம சுந்தரம்) அவர் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்குப் பிறந்து வளர்ந்து இளைஞனாக இருக்கும் மகனுக்கு (பாலு ) இரவில் கண் சரியாகத் தெரியாது .
சிலை கடத்தும் கும்பல் ஒன்று அந்த சிலை பழையது என்று அறிந்து அவனிடம் பேரம் பேசுகிறது . அம்மா ஒத்துக் கொள்ள மாட்டார் என்று ஆரம்பத்தில் மறுக்கும் அவன் ஒரு நிலையில் கண் மருத்துவ செலவுக்கும் கடை ஒன்று வைப்பதற்கும் பணம் வேண்டி விற்க சம்மதிக்கிறான் . கஷ்டப்பட்டு அம்மாவுக்குத் தெரியாமல் சிலையை வீட்டில் இருந்து எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, சிலை வாங்கும் கும்பலை தேடினால் அவர்கள் கிடைக்கவில்லை.
முன்பொரு சூழலில் ஒரு பிக்பாக்கெட் நபருக்கு ( கலையரசன்) அவன் உதவியிருக்க அவன் மூலமே சிலையை விற்க முயல, அது முன்பு பேரம் பேசிய கும்பலிடமே அவனை கொண்டு போகிறது . பேரம் படிந்து சிலையை எடுக்கப் போனால் , எடுக்க முடியாத நிலை . அப்புறம் என்பதே படம்.
மேலே சொன்ன கதையை எளிமையான காட்சிகளோடு மெதுவாக சொல்லி அப்புறம் இங்கே சொல்லாததையும் சாவகாசமாக சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
ஊர்வசி, குரு சோம சுந்தரம், பாலு வர்கீஸ் , கலையரசன் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
பொதுவாக மலையாளப் படங்களில் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்களை முடிந்த வரையில் மோசமாக அநியாயமாக சித்தரிப்பார்கள் . திருடனாக , மன சாட்சி இல்லாதவர்களாக , கெட்டவர்களாக , கருப்பனவர்களாக இப்படி எல்லாம் காட்டுவார்கள். இதிலும் அதில் மாற்றம் இல்லை என்றாலும் ..
ஒரு நிலையில் நாயகனுக்கு உதவுவதாக காட்டியுள்ளார்கள். ஆனாலும் படத்தில் கடைசியில் கலையரசன் பேசும் வசனத்தில் தமிழர்களுக்கு எதிரான மலையாள படைப்பாளிகளின் வன்மப் பாம்பு எட்டிப் பார்க்கிறது. கடைசியில் மத நல்லிணக்கம் சொல்வது பாராட்டுக்குரியது . அதே நேரம் சிதிலம் அடைந்த புத்தர் ஓவியத்தின் மூலம் சொல்லும் குறியீடும் மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று .
எல்லாம் சரிதான் . சிலையை வீட்டில் இருந்து சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு போன ஹீரோ, வைத்த இடத்தில் இருந்து அதை எடுக்க முடியவில்லை என்று சொல்லி பல சுத்து சுத்துகிறார்கள் பாருங்கள் அங்கே தான் இந்தப் படம் ஸ்கூல் டிராமாவை விட தொங்கி விடுகிறது .
அதே நேரம் படத்தின் பெயருக்கான காரணத்தை கடைசிக் காட்சியில் நிறுவுவது பலே .