
நிச்சயமாய் இது சில்பான்ஸ் சமாச்சாரம் இல்லை . சீரியஸ் விஷயம்தான் .
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், மிமிக்ரி கலைஞர் … என்ற ‘பர்ஃபார்மன்ஸ்’ வரிசையில் அடுத்து பாடகராகி இருக்கிறார் சின்னி ஜெயந்த்
அவருக்கு பாட்டு பாடும் ஆர்வத்தை எற்படுத்தி, பல மாதங்களாக பயிற்சிகள் கொடுத்து பாடகராக உருவாக்கியவர் 48 மணி நேரம் தொடர் இசை நிகழ்ச்சியை நடத்தி உலக சாதனை புரிந்த ஸரிகமபதநி ஸ்ரீ கிருஷ்ணா.
நவீன் பைன் ஆர்ட்ஸ் பன்னீர் செல்வம், கிருஷ் டான்ஸ் & மியூசிக் கம்பெனி கண்ணன் ஆகியோர்ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு முன்பு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்று, சில பாடல்களை சின்னி ஜெயந்த் பாடிக்காட்ட, சின்னி ஜெயந்தையும் அவருக்கு சொல்லிக் கொடுத்த கிருஷ்ணாவையும் பாராட்டி, “நீ தாரளமாக பாடலாம்” என்று சின்னி ஜெயந்தை எம் எஸ் வி வாழ்த்தி அனுப்பிய பின்னரே …..
சென்னை ராஜா முத்தையா அரங்கத்தில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற தலைப்பில், நடந்த நிகழ்ச்சியில் ஸரிகமபதநி இசைக் குழுவினருடன் இணைந்து டி.எம்.எஸ் உள்ளிட்ட பல காலத்தை வென்ற பாடகர்களின் பாடலை பாடி குரலை விரித்தார் சின்னி ஜெயந்த்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் “சின்னி ஜெயந்தின் குரல் வளம் ரொம்ப அருமையாக உள்ளது. பாடுவதற்கு கஷ்ட்டமாக உள்ள பல பாடல்களை அவர் இங்கே, எந்தவித கஷ்டமும் இல்லாமல் சிறப்பாக பாடினர். எனக்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. நான் தற்போது இயக்குனர் என்ற படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறேன், அந்த படத்தில் சின்னி ஜெயந்தை கண்டிப்பாக பாட வைப்பேன்.” என்றார்.
சரி… புதுப் பாடகர் சின்னி ஜெயந்த் என்ன சொல்கிறார்?
“சூப்பர் ஸ்டாரைப் பார்த்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்ட நான், நடிகர் திலகத்தைப் பார்த்து நடிப்பைக் கற்றுக் கொண்டேன். பிறகு சூப்பர் ஸ்டார் மூலம் அவர் நடித்த கை கொடுக்கும் கை படத்தில் நடிகராக அறிமுகமானேன். 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பிறகு இயக்கம், தயாரிப்பு என்று பல ரீதியில் பயணித்தேன்.

இயக்குனர் பாலச்சந்தர்தான், ஒருவரை பார்த்ததுமே அவரிடம் உள்ள திறமையை அறிந்து, அவர்களை நடிக்க வைப்பார். அதுபோல நான் பாடுவேன் என்பதை கண்டுபிடித்தவர் ஸரிகமபதநி கிருஷ்ணா தான். அவரை நான் வாத்தியார் என்று தான் அழைக்கிறேன்.
இங்கே வந்தவர்கள் “நீங்கள் முன்னாடியே பாட வந்திருக்கலாமே” என்று கேட்டார்கள். அப்படி நான் வந்திருந்தால் கிழக்கு வாசல், இதயம் உள்ளிட்ட படங்கள் எனக்கு கிடைத்திருக்காது. ஒரு துறையில் சற்று வாய்ப்புகள் குறைந்தால், நாம் வேறு தளத்தில் மாற வேண்டும். அப்படி தான் நான் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் என்று மாறினேன்.
தற்போது பாடகராக பயணிக்க ஆரம்பித்துள்ளேன். சினிமா துறையில் உள்ளவர்களில் சிறப்பாக பாடக்கூடிய இன்னும் பலர் இருக்கிறார்கள். இயக்குனர் பி.வாசு, நடிகர் கார்த்திக் என்று பலர் நன்றாக பாடும் திறமைக் கொண்டவர்கள். தற்போது என்னைத் தொடர்ந்து இன்னும் பல பேர் இது போன்ற மேடைகளில் உங்கள் முன்னாள் பாடகர்களாக நிற்பார்கள், அதற்காக பாதையை தான் நான் இங்கு உருவாக்கியுள்ளேன்.”என்றார் .
நிஜம்தானா பி.வாசு சார் ?