நிஹாரிகா என்டர்டைன்மென்ட் சார்பில் சந்தானம் , ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா தயாரிக்க, சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன் , கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி , யாஷிகா ஆனந்த் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கி இருக்கும் படம்.
யூ டியூப் ரிவ்யூ என்ற பெயரில் பல படங்களை நியாயமாகவோ அநியாயமாகவோ கிழித்துத் தொங்க விடும் விமர்சகர்களை, ஊர் ஓரம் ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு (பகலில் பாழடைந்த – இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிற ) தியேட்டருக்கு வர வைக்கிறது ஒரு இயக்குனரின் (செல்வராகவன்) ஆவி.
மக்கள் பார்க்கும்படி படம் எடுக்கத் தெரியாததாலோ அல்லது நல்ல படம் எடுத்தும் பேரம் படியாத விமர்சகர்களாலோ எடுத்த படம் ஊத்திக் கொண்டு அந்த இயக்குனர் விஷத்தை ஊத்திக் கொண்டு செத்திருக்க வேண்டும் . முக்கியமாக சாவதற்கு முன் அவர் பல நாட்கள் குளிக்காமல் சவரம் செய்யாமல், முக்கியமாக பல்லு விளக்காமல் இருந்திருக்க வேண்டும் .
அப்படி, நம்பி படம் பார்க்க வரும் விமர்சகரகளை (சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் சிலரை ) தியேட்டருக்குள் வர வைத்து , உடன் சக ஆவிகள் படம் பார்க்க , உள்ளே ஓடும் ஒரு , மொக்கை பேய்ப் படத்துக்குள் தள்ளி விடுகிறது அந்த இயக்குனரின் ஆவி.
தவிர அந்த விமர்சகரின் குடும்பக் குத்துவிளக்கு அம்மாவை சரக்கடித்துக் கொண்டு பொதி மாடு மாதிரி திரியும் தெலுங்கு ஆண்ட்டியாகவும் (கஸ்தூரி), தங்கையை , கவுதம் மேனனைப் போய் காக்க காக்க கமல்ஹாசன் என்று நம்பி வெம்பி எம்பி எம்பி அலையும் தொம்மைத் தங்கையாகவும் ( யாஷிகா ஆனந்த்) , ஆட்டோ ஓட்டும் அப்பாவை எப்போதும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுக் கோளாறால் கஷ்டப்படும் கப்பல் கேப்டனாகவும் கேரக்டர் மாற்றி விட்டு வேறு, தனது வன்ம அரிப்பை சொரிந்து கொள்கிறது அந்த ‘இயக்குனரின் ‘கேரக்டர்.
( ஆனால் நல்ல விஷயங்கள் உள்ள படங்களின் நிறைகளை சொல்லவே சொல்லாமல் குறைகளை மட்டுமே சொல்லி விட்டு ,இந்தப் பட விமர்சனத்தில் மட்டும் குறைகளை சொல்லவே சொல்லாமல் வாங்கின காசுக்கு கூவுவதற்காக – மங்கா பத்தைகளை பாவாடையால் மூடிக் கொண்டு பதவிசாக நடக்கும் பசப்பல் ஓய்யாரிகளைப் போல – இந்தப் படத்தை பட்டும் படாமல், சொல்லப் போனால் பல்லு படாமல் …….
விமர்சிக்கும் சிலரைப் பார்க்கும்போது , இந்தப் படக் குழு செய்தது தப்பே இல்லை என்று தோன்றுகிறது. நீங்க இன்னும் அடிங்க பாஸ் )
தவிர திரைக்குள் ஓடும் அந்த படத்துக்குள் கேரக்டராக மாறும் விமர்சகர்களும் அதன் குடும்பத்தாரும் படத்தில் வரும் அந்தத் தீவில் உள்ள பங்களாவில் உள்ள பேய்களிடம் சிக்கிக் கொள்கின்றனர் . தப்பிக்க இருக்கும் வாய்ப்புகளைக் கண்டுபிடித்து தப்பிக்கா விட்டால் படத்துக்குள் பேயிடம் சிக்கி செத்து நிஜ வாழ்விலும் சாகும் வாய்ப்பு உண்டு .
நடந்தது என்ன என்பதே இந்த படம்
அட்டகாசமான லொகேஷன்கள் …
அட்டகாசமான தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு,
அட்டகாசமான மோகனின் கலை இயக்கம்
அட்டகாசமான ராஜா கிருஷ்ணனின் ஒலிக்கலவை
அட்டகாசமான சின்க் சினிமாவின் ஒலி வடிவமைப்பு ..
பேய்களின் அட்டகாசத்தையும் மிஞ்சுகிறது இவர்களின் அசத்தல் அட்டகாசம் பாராட்டுகள்
பேய்கள் சம்மந்தப்பட்ட சில காட்சிகளும் ஒகே
ஆனால் இந்தியன் படத்தில் கமல்ஹாசனும் கவுண்டமணியும் மாற்றி மாற்றி மானஸ்தன்களைத் தேடுவார்களே .. அப்படி சந்தானம் என்கிற காமெடி நடிகனை எவ்வாளவு தேடினாலும் கிடைக்கவில்லை. இருந்தாதானே கிடைக்க?காமெடியே தேவை இல்லாத ராஜ கம்பீர சீரியஸ் கேரக்டரா என்றால் அதுவும் இல்லை.
ஆனால் சந்தானம் அவர் பாட்டுக்கு படம் முழுக்க ஏதோ பேசிக் கொண்டே இருக்கிறார் . ‘நீ சிரிச்சா சிரி சிரிக்காட்டி போ. நாங்க ஓ டி டி யில் வித்துருவோம் . எனக்கும் ஆர்யாவும் எல்லா இடத்திலும் கிளைகள் இருக்கு .. ‘என்ற கெத்து தெரிகிறது.
செம சான்ட்டா… செம ..
என்ன பேசினாலும் சிரிப்பவன் மட்டும் பைத்தியக்காரன் அல்ல. என்ன பேசினாலும் சிரிப்பார்கள் என்று நம்புபவர்களும் அப்படித்தானே .
படம் முடியும் முடியும் என்று பார்த்தால் எல்லோரும் எழுந்து தியேட்டரின் கதவருகே போய் கதவைத் திறங்கடா என்று கத்திக் கதறிக் கதவு திறந்து வெளியே போன பிறகும் படம் ஓடிக் கொண்டே இருந்தது . படம் பார்ப்பவர்கள் வீட்டை நோக்கி ஓடிக் கொண்டே இருந்தார்கள் .
ஒருவேளை…
மொக்கையாகப் பேய்ப்படம் படம் எடுத்து பொய்யாகப் புரமோஷன் செய்து நம்ப வைத்து தியேட்டருக்கு வர வைத்து ஏமாற்றிய படக் குழுவை, ஒரு நடுத்தரக் குடும்பம் ஒரு எப்படி நிஜமான பேய் வீட்டுக்குள் அனுப்பி நாறக் கிழி கிழித்தது என்று படம் எடுத்து இருந்தால் மக்கள் இன்னும் அதிகம் கனெக்ட் ஆகி இருக்க வாய்ப்பு உண்டு
அப்புறம் …
இந்த … DD யை இதோடு முடிச்சிட்டு அடுத்து சன், ஜெயா, விஜய், என்று ஏதாவது ட்ரை பண்ணலாமே .