Sri Saravana Films (opc) பிரைவேட் லிமிடெட் சார்பில் B.சதீஷ் குமார் திரைக்கதை எழுதித் தயாரிக்க, PG மோகன் கதையில் LR சுந்தரபாண்டி வசனத்தில் PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில் வந்திருக்கும் படம் ‘தீர்க்கதரிசி’.
காவல்துறை தொலைபேசி வழித்தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்யும் ஒரு நபர் (சத்யராஜ்) அடுத்து அடுத்து நடக்க இருக்கும் விபத்துகள் மற்றும் கொலைகளில் யார் எங்கே எப்போது மரணிக்கப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி காப்பாற்றச் சொல்கிறார் .
காவலர் அணி ( அஜ்மல், ஸ்ரீமன், ஜெய்வந்த், துஷ்யந்த்) சம்மந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை .
ஒரு நிலையில் தகவல் சொல்பவர் மீது சந்தேகம் கொண்டு தேட நடந்தது என்ன என்பதே படம்.
வித்தியாசமான கதை . ஒரு நிலை வரை பரபரப்பாக படம் போகிறது . . ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகளும் வருகின்றன.
லக்ஷ்மனின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது .
சத்யராஜ் வழக்கம் போல சிறந்த நடிப்பு . திவ்யதர்ஷினி கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்
அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் ஓகே.
என்ன சிக்கல் என்றால் படத்தில் சொல்லப்பட்டு இருக்கும் கதை நாற்பது நிமிடத்துக்கு மேல் தாங்காது. . இதை இரண்டு மணி நேரம் இழுத்ததுதான் பிரச்னை .
உடனே உடனே வரும் நீளமான – பொருத்தமற்ற சண்டைக் காட்சிகள், தேவையற்ற சில கதாபாத்திரங்கள், அப்படியே தூக்கி வெளியே வைக்க வேண்டிய போலீஸ் பாட்டு , ரிபீட் அடிக்கும் காட்சிகள் இவையே அதற்கு ஆதாரம் .
மேக்கிங்கிலும் பழைய பாணி.
இந்தக் கதையோடு தொடர்பும் இணைப்பும் பொருத்தமும் உடைய இன்னொரு கதைப் போக்கு , ஒரு முன் கதை, இப்போதைய படத்தின் முடிவை இடைவேளையாக வைத்து வேறு மாதிரியான இரண்டாம் பகுதி எல்லாம் இருந்திருந்தால் படம் அசத்தி இருக்கும் .
எனினும் வித்தியாச விரும்பிகளுக்கான படம் .