நேமிசந்த் ஜெபக் வழங்க, ஹிதேஷ் ஜெபக் தயாரிப்பில் நயன்தாரா, தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன் நடிப்பில் தாஸ் ராமசாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் டோரா . படம் ஜோரா ? இல்லை டார் டாரா? பார்க்கலாம்
பொண்டாட்டி ஓடிப் போன நிலையில் தன் ஒரே மகள் பவழக் கொடிக்காக (நயன்தாரா) கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழும் வைரக்கண்ணு (தம்பி ராமையா ),
வேறு சகோதரத் துணை இல்லாத காரணத்தால் பெண் பிள்ளையை ஆண் பிள்ளை போல வளர்க்கிறார் .
நம்மை விட்டால்அப்பாவுக்கு ஆண் துணை இல்லை என்பதால் வீட்டோடு மாப்பிள்ளை தேடுகிறார் பவழக் கொடி.
வைரக்கண்ணு பணத்தில் கால் டாக்சி நடத்தி வளரும் அவரது தங்கை கணவர், வைரக்கண்ணுவையே கேவலப் படுத்த, போட்டியாக ஒரு கால் டாக்சி ஆரம்பிக்கிறார் பவழக் கொடி.
இதற்கிடையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மோப்பம் பிடித்து கொடூரமாக அடித்துக் கொலை செய்து கற்பழித்து விட்டு,
பணம் நகை கொள்ளை அடிக்கும் வடக்கத்திக் கொள்ளைக் கும்பல் ஒன்று ஒரு இளம் மனைவியை அப்படிக் கொல்கிறது.
பவழக் கொடியை பெண் பார்க்க வரும் ஒரு போலிஸ் அதிகாரி ஹரீஷ் (ஹரீஷ் உத்தமன் ) ஒரு சிறு சச்சரவு காரணமாக பவழக் கொடியைக் கருவிக் கொண்டு போகிறார்
பவழக் கொடி வாங்கும் ஓல்டு மாடல் காரில் ஒரு ஆவி இருக்கிறது . அது ஒரு நாயின் ஆவி .
பவழக் கொடியின் வீட்டுக்கு வந்த நிலையில் அந்த நாயின் ஆவி காரைக் கிளப்பிக் கொண்டு போய் அந்தக் கொள்ளைக்காரர்களில் ஒருவனைக் கொல்கிறது. போலீஸ் விசாரணை பவழக் கொடியை துரத்துகிறது .
காரில் ஆவி இருப்பது ஏன் ? பவழக் கொடியிடம் வந்தது ஏன் ? போலீஸ் பவழக் கொடியை என்ன செய்தது ? மீதி இரண்டு கொள்ளைக்காரர்களுக்கு என்ன ஆனது என்பதே டோரா .
வடக்கத்திக் கொள்ளைக்காரர்கள் எப்படி பெண்கள் மோப்பம் பிடித்து வீட்டைக் குறி வைத்து கொலை செய்கிறார்கள் என்பதை அச்சு அசலாக பதறும் படி சொல்லும் ஒரு விசயத்தில் மட்டும் ,
பலத்த பாராட்டுகளை தரலாம் இந்தப் படத்துக்கு ! சபாஷ் . பலே . குட் . சிறப்பு . அருமை . (இன்னொரு பாராட்டு விமர்சனத்தின் கடைசியில் !)
மற்றபடி என்னத்தைச் சொல்ல ?
மாயாவுக்கு பிறகு இன்னொரு படம் தீயா கொடுத்து இருப்பார்கள் என்று போனார்கள் அரைச்ச மாவையே அரைக்கும் ஆயாவை கொடுத்து உள்ளார்கள் .
மெல்ல தமிழ சினிமா பேய்ப் படங்களில் இருந்து வெளியே வந்து கொண்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு பேய்ப் படத்தை கொடுப்பதே ரிஸ்க் எனும்போது,
பண்ணி இருக்கும் ஸ்கிரிப்ட் நயன்தாராவை விட நச்சுன்னு இருக்க வேண்டாமா ? ஆனால் மொத்தமாக சறுக்கி இருக்கிறார்கள் .
மை காட் ! முதன் முதலில் நயன்தாராவை பார்க்க சலிப்பு வருகிறது இந்தப் படத்தில் . எம்ஜி ஆர் கணக்கில் அவருக்கு பில்ட் அப் கொடுத்தால் மட்டும் போதுமா இயக்குனரே . விஷயம் வேண்டாமா?
அவரும் என் உடம்புதான் பலம் என்பது போலவே இருக்கிறார் . ஒரு மாதிரி உதட்டை சுழித்துய்க் கொண்டு எல்லா வசனனங்களையும் ஸ்டீரியோ டைப்பில் பேசுவது … ஆவ்! (கொட்டாவி).
மாயாவில் மிரட்டிய நடிப்பு இங்கே என்ன ஆச்சு நயன் ?
ஆரம்பக் காட்சிகளில் பத்து நிமிடத்துக்குள் தம்பி ராமையாவும் நயன்தாராவும் பேசியே களைப்பாக்கி விடுகிறார்கள் .
அதுவும் அப்பாவின் தங்கையிடம் பவழக் கொடி சண்டை போடும் காட்சியும் படு செயற்கையான டிராமாத்தனம் . முடியல சார் முடியல .
தம்பி ராமையா எப்போதாவது கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் . அனால் அவைகளுக்கு இடையில் சாதாரண வசனங்களுக்கு கூட மானே தேனே பொன்மானே போடும் கணக்காக,
எதுகை மோனை வார்த்தைகளைப் போட்டு அவர் பேசுவதைத் தாங்கிக் கொள்ள ரெண்டு காதுகள் பத்தல பகவானே .
மந்திரித்த எலுமிச்சை வைத்த காரின் அவர் மணிக் கணக்காக ஆடுவதைப் பார்க்கும்போது எடிட்டரய்யா .. எங்கய்யா தூங்கறீங்க என்று கதறத் தோன்றுகிறது .
மனிதருக்கு பதிலாக நாயின் ஆவி பழி வாங்க வருவது ….கடைசிவரை நாயின் ஆவி பவழக் கொடி உடம்புக்குள் புகாமல் இருப்பது….
இப்படி சில வழமைகளை விடுத்து வித்தியாசங்களை முயன்று இருப்பது கவனிக்க வைக்கிறது .
ஆனால் அதை வைத்து என்ன சொல்கிறோம் என்பது அல்லவா முக்கியம் ? எப்போதும் சாப்பிடுகிற இட்லி வேண்டாம் என்பதற்காக வெறும் இளையையா திங்க முடியும்?
பேய்ப் படத்துக்கு லாஜிக் எல்லாம் தேவை இல்லைதான் . ஆனால் காட்சி அமைப்பில் ஒரு நேர்த்தி ஒழுங்கு வேண்டாமா ?
சாலை எங்கும் இருக்கும் கேமராக்களை எல்லாம் முடக்கத் தெரிந்த ஆவிக்கு காரில் இருந்து கழண்டு விழும் மூடியை சரி செய்யத் தெரியவில்லை .
இது போன்ற எண்ணற்ற விசயங்களில் பேயை நம்புவதா நயன்தாராவை நம்புவதா என்று குழம்புகிறது திரைக்கதை .
ஆவியால் முடியாத இடத்தில் நயன்தாரா , நயன்தாராவால் முடியாத இடத்தில் ஆவி என்று பிரித்து வைத்து காட்சி அமைத்து இருந்தால் பிரித்து மேய்ந்து இருக்கலாம் .
ஆனால் டைரக்டர் பிங்கி பிங்கி பாங்கி போட்டு சம்மந்தப்பட்ட விஷயத்தை பேய்க்கோ நயனுக்கோ கொடுக்கிறார் .
பேய்ப்படம் என்ற நிலையில் இந்தப்ம் படத்துக்கு குழந்தைகளும் ஆடியன்ஸ் ஆக முடியாத அளவுக்கு சிறுமிகள் மீதான காமம் கற்பழிப்பு என்று அந்த பிளாஷ் பேக் படத்துக்கு எமனாக நின்று விட்டது
ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு என்று சொல்லும் பெண்ணை ‘வடக்கத்திக் கொள்ளைக்காரக் கூட்டம்’ ஒன்று வீடு புகுந்து கொடூரமாகக் கொன்று விட்டு,
தாலி உட்பட வீட்டில் உள்ள நகை பணம் எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு போகிறது …
— என்ற ஒரு காட்சி வைத்த விதத்தில் ஒரு நிகழ்கால அரசியல் உண்மையை பூடகமாக சொல்லி இருப்பதற்காக
இந்தப் படத்தின் இயக்குனரை அழுத்தமாகக் கை குலுக்கி ஏன் கட்டிப் பிடித்தே பாராட்டலாம் . பின்னீட்டீங்க நண்பா !
டோரா … பரிதாப புஜ்ஜி








