ஏ ஜி எஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் , கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிக்க,
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், விக்ராந்த், மடோனா செபாஸ்டியன், பாண்டியராஜன் , போஸ் வெங்கட், ஆகாஷ் தீப் சைகல், ஜெகன் நடிப்பில்
இரட்டை எழுத்தாளர் சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோருடன் சேர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி கே ஆனந்த் இயக்கி இருக்கும் படம் கவண்.
தன்னை விட பலமான எதிரியை ஓர் எளிய நபர் , துலாக் கோல் போன்ற அமைப்பில் கல் வைத்து சுழற்றி வீசி எறிந்து தாக்கப் பயன்படுத்தும் கருவியே கவண்.
சரி இந்த படமான கவண் எப்படி சுழன்று இருக்கிறது ? பார்க்கலாம்
சுற்றுச் சூழல் , இயற்கை வளம் உள்ளிட்ட முக்கியமான விசயங்களில் ஆவணப் படம் எடுத்து , அதை யாரும் பார்க்காத நிலையில் நொடித்துப் போன, காட்சி ஊடகவியலாளர் திலக் (விஜய் சேதுபதி).
தனது காதலியின் (மடோனா ) இயக்கத்தில் குறும்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கும் போது உடன் நடிக்கும் நடிகையின் (சாந்தினி) ‘தூண்டுதலால்’ உணர்ச்சி வசப்பட்டு,
கட் சொன்ன பிறகும் கச முசாவைத் தொடர , காதல் புட்டுக் கொள்கிறது .
பிரிவு .
தமிழகத்தின் அதி முக்கிய சேனலான ஜென் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்து பணியில் வளர்ந்து விடுகிறாள் அவள்.
ஒரு நிலையில் அங்கு திலக் வேலைக்கு சேர்கிறான் . (ஜெகன் உள்ளிட்ட) சில புதிய நண்பர்கள் அமைகிறார்கள்
தனது திறமையால் பலரையும் கவர்கிறான் திலக் . ஆனால் சேனல் முதலாளி (ஆகாஷ் தீப் சைகல்) முழுக்க முழுக்க ஊடகத்தை மனசாட்சியற்ற பணம் காய்ச்சி மரமாக நடத்துகிறார்.
நிகழ்ச்சிகளில் நியாயமற்ற பரபபரப்பைக் கிளப்புவது , விளம்பரம் தரும் நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்திக் கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் திறமை இன்றி ,
எவ்வளவு மோசமாக பங்களிப்பு செய்தாலும் அவர்களுக்கே பரிசு தருவது,
தமிழ் , மொழி கலாச்சாரம், உள்ளிட்ட மண் சார்ந்த விசயங்களோடு பங்களிப்பு செய்யும் கலைஞர்கள் எவ்வளவு சிறப்பாக பங்களிப்பு தந்தாலும்,
அவர்களின் நுகர்வில் அந்த மேர்கத்திய பொருட்களோ அவற்றின் விளம்பரம் வருமானம் பெரும் வாய்ப்போ இல்லாததால் புறக்கணிப்பது ,
போட்டி நடுவர்களை விளம்பரம் தரும் நிறுவனங்களுக்கு ஏற்ப தவறான முறையில் பரிசு தரச் செய்வது, பரிசு பெறாத சிறுவர்கள் அழாமல் போனால் அவர்களை அடித்து அழ வைத்து பரபரப்புக் கூட்டுவது ,
திரைப்படம் உள்ளிட்ட பல்துறைப் பிரபலங்களை அழைத்து வந்து அவமானப் படுத்தி அதன் மூலம் நிறைய பேரைப் பார்க்க வைத்து , அதன் மூலம் விளம்பரங்களின் விலை உயர்த்தி பணம் ஈட்டுவது ….
இப்படியாக நிகழ்ச்சிகள் தரத்தையும் நேர்மையையும் விளம்பரம் தரும் நிறுவனங்கள் முடிவு செய்வது என்று ஊடக அறத்துக்கு எதிராக எல்லா அயோக்கியததனங்களையும் செய்கிறார்
இது ஒரு பக்கம் இருக்க, ஒரு அரசியல்வாதிக்கு எதிரான செய்திகளை திட்ட மிட்டு வெளியிட்டு அவர்களை பதற வைப்பது ,
தனக்கு கோடி கொடியாக பணமோ அல்லது பலனோ தரும் அரசியல்வாதி அடிப்படையில் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நல்லவர்கள் என்பது போல ,
தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு அவர்கள் பற்றிய நல்ல பிம்பத்தை பொய்யாகக் கட்டமைத்து மக்களை ஏஏமாற்றி , அந்த அரசியல்வாதியிடம் பலன் பெறுவது ….
இஸ்லாமியன் என்றாலே தீவிரவாதி, தமிழ்த் தேசியம் பேசினால் பிரிவினைவாதி,என்று பொய்யாக சொல்லி நல்லவர்களை பொல்லாதவர்கள் ஆக்குவது ,
பலன் தரும் அயோக்கிய அரசியல்வாதி(கள்) செய்யும் தவறுகளை மறைப்பது , அவர்களை காப்பது, அந்த அரசியல்வாதிகளை எதிர்க்கும் நல்ல மனிதர்கள் மற்றும் இயக்கங்களை தவறாகச் சிததரிப்பது என்று….
கணக்கில்லாமல் ஜென் தொலைக்காட்சியில் அதன் உரிமையாளர் செய்யும் கயமைத் தனங்களைக் கண்டு கொந்தளிக்கிறான் திலக் .
தொலைக் காட்சியின் செய்தி ஆசிரியர் (பாண்டியராஜன்) அடிப்படையில் நல்லவர் என்றாலும் வேறு வழியின்றி எல்லா அராஜகத்துக்கும் துணை போகிறார் .
இந்த நிலையில் சுற்றுச் சூழலை அழிக்கும் மோசமான தொழிற்சாலை நடத்தி ஒரு பகுதியின் மண்ணையும் நீரையும் மக்களையும் நோயாளியாக்கி இருக்கும் தீரன் மணியரசன் ( போஸ் வெங்கட்) என்ற அரசியல்வாதிக்கு எதிராக
மக்கள் இயக்கம் நடத்தும் அப்துல் ( விக்ராந்த்) என்ற இளைஞனின் போராட்டத்தை ஒடுக்க அவன் காதலி கல்பனாவை கற்பழித்து ,
ஜென் தொலைகாட்சி செய்திகள் மூலமே அவளுக்கு பைத்தியக்காரப் பட்டம் கட்டி விடுகிறார்கள் .
தவிர அதே தீரன் மணியரசனை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து ஒரு நிகழ்ச்சியை உருவாகும் ஜென் தொலைக்காட்சி முதலாளி அந்த பேட்டிக்கு கேள்வியாளராக திலக்கை அமர வைக்க,
நேரலைப் பேட்டியில் மணியரசன் பற்றிய எல்லா உண்மைகளையும் திலக் போட்டு உடைக்க , பதிலுக்கு மணியரசன் திலக்கை அடிக்க , பிரச்னை பெரிதாகி
திலக் , உள்ளிட்ட அவன் ஆதரவு நபர்கள் அனைவரும் வேலையை விட்டு விட்டு வெளியேறுகிறார்கள் .
நேர்மையான ஒரு தொலைக்காட்சியை முத்தமிழ் டி வி என்ற பெயரில் நடத்தி நொடித்துப் போய் இருக்கும் ஒருவரின் (டி ராஜேந்தர்) நிறுவனத்தில் வேலை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்தி ,
ஜென் தொலைக்காட்சி அதிபர், அரசியல்வாதி மணியரசன் ஆகியோரின் தவறுகளை திலக் மற்றும் நண்பர்கள் அம்பலப்படுத்த ,
சகல பலங்களும் கொண்ட ஜென் தொலைக்காட்சியும் மணியரசனும் பதில் விளைவாற்ற அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த கவண்
பின்னிப் பெடல் எடுத்து அடித்து நொறுக்கி அசத்திக் கலக்கி பிரம்மாண்டப் பிரம்மாதப் படுத்தி இருக்கிறது கே ஆனந்த் , சுபா, கபிலன் வைரமுத்து மற்றும் குழு . அருமை நேர்த்தி . சபாஷ் பலே சிறப்ப சிறப்பு சிறப்பு !
ஜல்லிக்கட்டு , இயற்கை எரிவாயு போராட்டங்களுக்கு கொடுக்கப்பட நேரலை நிகழ்ச்சிகள் மூலமாக இன்று இல்லததரசிகளே தொலைக்காட்சித் தொடர்களை விடுத்து ,
இருபத்தி நான்கு மணி நேர செய்திச் சேனல்கள் பார்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் , மிக சரியான கதைக்க களத்தோடு சுழல்கிறது சுழற்றுகிறது கவண்.
இதற்கு முன்பே கோ படத்தில் இதே கருவை வேறு கோணத்தில் தொட்டு இருப்பார் கே வி ஆனந்த் . ஜெயம் ரவி நடித்த பூலோகம் படம் கூட இந்த கதைக் கருவுக்கு சற்றே நெருங்கி வரும் படம்தான்
ஆனால் சம்மந்தப்பட்ட பிரச்னையின் வெவ்வேறு பரிமாணங்களை பிரித்து மேய்ந்து ஏவி தாவி மேவி விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது கவண் படத்தின் கதை திரைக்கதை .
ஊடகவியலின் நெறி, சுற்றுச் சூழல் மேம்பாடு, அரசியல், பன்னாட்டு நிறுவன ஆதிக்கம் , மண் கலைகள் புறக்கணிப்பு , அந்நிய மோகம், புரட்சி , இந்து முஸ்லிம் ஒற்றுமை,
இளைஞர் சக்தி , மனசாட்சியின் கலக்கம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் கொண்ட முரட்டுத் திரைக்கதை .
இவற்றில் ஒவ்வொரு விசயத்தையும் தெளிவாக துவங்கி சிறப்பாக நகர்த்தி கவனமாகக் கையாண்டு முத்தாய்ப்பாக முடித்து வைக்கும் அழகை சிறப்பை செய்நேர்த்தியை மெனக்கெடலை என்ன சொல்லிப் பாராட்ட?
“இயல்பாகப் பேசும் பத்திரிக்கையாளன் நல்ல பதிலைப் பெற்று பேட்டியை முன்னிறுத்துவான் . சத்தம் போட்டு கேள்வி கேட்பவன் தன்னை மட்டும் முன் நிறுத்துவான் …”
“பொய் சொல்லிதான் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தணும்னு இல்ல .. உண்மையை சுவாரஸ்யமா சொல்வதுதான் ஊடகவியல் “
”என்னிக்கு செய்தி தொடர்பான நிகழ்ச்சியை செய்திக் கதை (நியூஸ் ஸ்டோரி) ன்னு சொல்ல ஆரம்பிச்சோமோ அன்னிக்கு செய்தியில் உண்மை செத்துருச்சு “
– என்று வசனங்கள் வாளெடுத்து சுழலும் விதமும் வேலெடுத்து வீசும் வேகமும் அட்டகாசம் .
இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி , டி.ராஜேந்தர் உட்பட எல்லாரையும் ஒரு இடத்திலாவது கலாய்த்து விட்டுப் போகிறது வசனம்
(”எல்லாம் நல்லா பண்ணுவான் . ஆனா பேசறதுதான், போட்ட வெத்தல பாக்கை முழுங்காம பேசற மாதிரி பொத பொதன்னு பேசுவான் ” — இது விஜய் சேதுபதிக்கு!)
”இந்தியா பிரிஞ்ச போது இந்துக்கள் இங்கதான் இருக்கணும்னு ஆச்சு . ஆனா முஸ்லிம்களுக்கு தன் நாடு இந்தியாவா பாகிஸ்தானா என்று தேர்தெடுக்கும் உரிமை இருந்தது
நாங்க இந்தியாவை தேர்ந்தெடுத்தோம் . இது நான் நேசிக்கும் என் நாடு ” என்று அப்துல் பேசும் வசனம் நெகிழ வைக்கிறது .
கல்பனா என்ற சிறு கதாபாத்திரம் கூட சும்மா கடந்து போகாமல் “அவங்களாச்சும் கெட்டவனா வந்துட்டு கெட்டது பண்ணிட்டு கெட்டவனா போனாங்க .
ஆனா நீ நல்லவனா வந்து இப்படி கெடுதல் பண்ணிட்டு போயிட்டியே ” என்று ஒரு இதயம் தொடும் வசனத்தை பேசி விட்டுப் போகிறது . அவ்வவ்வ்வ்வளவு முழுமை !
இவற்றுக்கு இணையாக அற்புதமான படமாக்களோடு சிறப்பான டைரகஷனையும் கொடுத்துள்ளார் கே வி ஆனந்த் . அந்த இடைவேளை உத்தி ஒரு படத்துக் காட்சிக்கு ஒரு காட்சி பதம்
பன்னாட்டு அந்நியக் கூட்டுருக் கூட்டான்மைக் கலாச்சாரத்தைக் கண்டு கொந்தளித்துக் குமுறும் மண்ணின் மைந்தனான நல்ல மனிதன் கேரக்டரில்,
புடம் போட்ட நடிப்பைக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி . உணர்ந்து நடித்த உயர்ந்த நடிப்பு .
தன் இயல்புக்கும் இமேஜூகும் பொருத்தமாக ஒரு கதாபாத்திரத்தில் அச்சு அசலாக அச்சில் வார்த்த மாதிரி பொருந்தி அசத்தி இருக்கிறார் டி.ராஜேந்தர் .
போராடும் குணம் கொண்ட உன்னத இளைஞன் கதாபாத்திரத்தில் மிகச் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார் விக்ராந்த்.
மிகச் சிறந்த வசனங்களை உதட்டில் இருந்து மட்டும் துப்பாமல் உடல் முழுக்க ஒன்று கூட்டி பேசி நடித்திருக்கும் விதம் அலாதி . சபாஷ் விக்ராந்த்.
அபிநந்தன ராமானுஜத்தின் ஒளிப்பதிவு அழகியல் , அழுகை இயல் , ஈரம், காரம் , சோகம் , கோபம் என்று எல்லா சூழல்களிலும் படத்துக்கு தர ஒளி பாய்ச்சி இருக்கிறது . பாடல் காட்சிகள் சுவையான தேன் மிட்டாய் .
இவ்வளவு கதைப் போக்குகள் ஏராளமான சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை உலுப்பி சிலுப்பி நறுக்கி செதுக்கி படபட பர பரவென் பறக்க வைக்கிறது ஆண்டனியின் அட்டகாசமான் போராளித்தனமான படத் தொகுப்பு.
மடோன்னாவின் வித்தியாசமான முகமும் அதோடு இழையும் இயல்பான முக பாவனைகளும் அருமை .
ஒரு சீன வந்தால் கூட அருமையாக நடித்துள்ளார் பவர் ஸ்டார் . ஹீரோவாக அவரை படம் முழுக்க காட்டி காமெடி என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருந்த நிலையில் ,
ஒரே காட்சியில் பவர் ஸ்டாரை நிஜ ஹீரோவாக உயர்த்தி இருக்கிறார் கே வி ஆனந்த் .
அரசியல்வாதியாக படம் முழுக்க ஓடும் ஒரு கதாபாத்திரத்தில் நின்று விளையாடி இருக்கிறார் போஸ் வெங்கட் .
தொலைக்காட்சி முதலாளியாக வரும் ஆகாஷ் தீப், நண்டு ஜெகன், முதலாளியின் நம்பிக்கையான நிர்வாகியாக வரும் பெண்மணி , கல்பனா நடித்திருக்கும் நடிகை எல்லோரும் நிறைவாக செய்துள்ளனர் .
ஆதி மட்டும் எல்லா வகையிலும் பாதி இசையை மட்டும் கொடுத்துள்ளார் . பாடல் இசை வெகு சுமார் . . சிறப்பான ஒலி வடிவமைப்பால் (வெகுஜன ரசிகன் பார்வையில்) பின்னணி இசை பலம் கூடித் தெரிகிறது .
இந்த படத்துக்கு ஏற்ற மிக சிறப்பான பாடல்வரிகள் அமையாதது தெரிகிறது
கிரணின் கலை இயக்கம் சிறப்பு . திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பு தெறிப்பு .
அடேயப்பா ! இவ்வளவு அடர்த்தியான கதை திரைக்கதை வசனம் அதற்கு சற்றும் இளைக்காத தொழில் நுட்ப சிறப்பு சிறப்பான படமாக்கல் உள்ள படம் பார்ப்பதுதான் எவ்வளவு சிறப்பான அனுபவம்
நவீன தொழில் நுட்பங்களின் அடிப்படையில் மண் சார்ந்த மதிப்பீடுகளுக்கு பல சேர்க்கும் வகையில் பரபரப்பும் பக்குவமும் சுவாரஸ்யமும் நல்ல விசயங்களையும்,
இணைத்து பிணைத்துப் பிறந்து, இதயம் மூளை இரண்டையும் கவர்கிறது படம்
மொத்தத்தில் கவண்…. நெத்தி அடி !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————–
கே வி ஆனந்த், சு(ரேஷ்)(-பாலா) , கபிலன் வைரமுத்து, விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், விக்ராந்த், ஆண்டனி , அபிநந்தன் ராமனுஜம், கிரண், விஜய் ரத்னம் ,
கல்பனா மற்றும் பாவனா கேரக்டரில் நடித்தவர்கள் கல்பாத்தி எஸ் அகோரம் , கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்












