சசிகலா புரடக்ஷன்ஸ் வழங்க vibe 3 புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிஷோர், ஜெய் பாலா , காவ்யா பெல்லு நடிப்பில் அஜு கிழுமலா இயக்கி இருக்கும் படம்.
ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையான மூத்த அதிகாரி (சார்லி) வில்லங்கமான இளம் அதிகாரி இருவருக்கும் பழைய பகை. சப் இன்ஸ்பெக்டருக்கு(ஜெய் பாலா) ஓர் இளம் பெண்ணோடு (காவ்யா பெல்லு) காதல். அந்தப் பெண்ணின் தாத்தாதான் போலீஸ் ஸ்டேஷனுக்கே இடம் கொடுத்தவர்
கணவனுக்கு பயந்த ஒரு பெண் போலீஸ் , அவரைப் பார்த்து ஜொள்ளு விடும் ஒரு ஆண் போலீஸ், இது தவிர ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ், இன்னொரு போலீஸ் என்று இரண்டு ஆண்கள் ஆகியோர் பணியில் உள்ள அந்த ஸ்டேஷனில் ஒரு கைதி இருக்கிறான். மின்சார பழுது நீக்க இரண்டு எலெக்ட்ரீசியன்கள் வேலை செய்கிறார்கள் .
சப் இன்ஸ்பெக்டரின் காதலஇ தனது பிறந்த நாளை ஸ்டேஷனில் கேக் வெட்டிக் கொண்டாட வந்திருக்கும் வேளை, ஒரு காதல் ஜோடியும் அடைக்கலம் அடைகிறது .
கேக் வெட்டும் சமயம் மின்சாரம் போக, மின்சாரம் வந்த பொது, நேர்மையான மூத்த அதிகாரி மின்சாரப் பணியாளர் பயன்படுத்தும் கருவியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் .
கொன்றது யார் என்பதே படம் .

டைட்டில் முதற் கொண்டு படம் முழுக்க ஏகப்பட்ட எழுத்துப் பிழை . தலை சுற்ற வைக்கும் தமிழ்க் கொலை . அஜு கிழுமலா என்ற இயக்குனரின் பெயரையே படத்தில் அஜு குழிமலா என்று போடுகிறார்கள் .
படத்தில் பல தமிழ் எழுத்துக்களைக் கூட யாரோ மலையாளம் மட்டும் தெரிந்தவரைக் கொண்டு எழுத வைத்துள்ளார்கள். அவர் எல்லா தமிழ் வார்த்தைகளையும் மலையாளம் போல எழுத்துக்களை வளைத்து வளைத்து முனை மழுக்கி எழுதி இருக்கிறார்.
காவல் நிலையம் என்பதை கவல் நிலையம் என்று எழுதி இருக்கிறார்கள் . அதை யாரோ தவறு என்று சொல்லி இருக்கிறார்கள் . உடனே என்ன செய்து உள்ளார்கள் தெரியுமா? திருத்தி எல்லாம் எழுதவில்லை ‘ க’ வுக்கும் ‘வ’வுக்கும் இடையில் தலைக்கு மேல் சின்னதாக இடுக்கியை வைத்துப் பிடிப்பது போல கால் வாங்கல் குறியை போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அவ்வளவு அலட்சியம்.
ஏம்ப்பா…. தமிழ நாட்டில்,படம் காட்டி சம்பாதிக்கணும். ஆனால் தமிழை எழுதக் கூட சரியாகத் தமிழ் தெரிந்த ஒருவரை வைத்துக் கொள்ள மாட்டீங்க. அப்படிதானே?
தவிர படம் முழுக்க இந்தக் கதைக்குப் பொருத்தம் இல்லாத ஓவர் பேச்சுகள் , மிரள வைக்கும் மிகை நடிப்புக் குவியல்கள் , கதாபத்திரங்களின் அதீத நடை உடை பாவனைகள், தேவையற்ற சத்தம் … இவை படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன , இந்த நிலையிலும் கிஷோர் தனக்கே உரிய பாணியில் அழகாக நடித்துக் கவர்கிறார்.

ஒரே ஷாட்டில் எடுத்த படம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். செல்லாது . செல்லாது இடைவேளை விட்டு படம் துவங்கும்போது ஏற்பட்டிருக்கும் மாற்றம் உடபட பல விசயங்கள் ஒரே ஷாட் என்பதை ஏற்றுக் கொள்ள விடாமல் தடுக்கின்றன. . டிராமா என்று அவர்களே படத்தின் பெயர் மூலம் சொல்லிக் கொண்டாலும் டிராமாவாகக் கூட இல்லை என்பதே பிரச்னை.
ஆனால் கதை நிகழும் இடத்தை மாற்றாமல் ஒரு பிளாஷ் பேக் வைத்து அசத்தியத்தை பாராட்டலாம். முக்கியமாக கொலையாளி யார் என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியாத வகையில் சொல்லி இருக்கிறார்களே… அங்கேதான் சபாஷ் போட வைக்கிறது படக் குழு .